சர்வதேச தரத்தில் அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர் - 'மிஷன் சான்டா'வில் எடிட்டர்...
Swiggy 2025: அடிச்சுக்கவே முடியாத 'பிரியாணி'; அடுத்த இடத்தில்? - இந்தியர்களின் 2025 ஆர்டர் லிஸ்ட்
உணவுகளில் இந்திய மக்களுக்கு எப்போதுமே ஃபேவரைட் 'பிரியாணி' தான் போல...
இந்த ஆண்டும் ஸ்விக்கியில் இந்திய மக்கள் என்ன அதிகம் ஆர்டர் செய்தார்கள் என்னும் 'How India Swiggy'd' அறிக்கையை வெளியிட்டுள்ளது ஸ்விக்கி நிறுவனம்.
பிரியாணி...
இந்தியர்களின் தட்டில் இந்த ஆண்டும் அசைக்க முடியாத ராஜாவாகத் திகழ்வது மீண்டும் பிரியாணிதான். 2025-ல் மட்டும் சுமார் 9.3 கோடி முறை பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இதனைப் புள்ளிவிவரப்படி பார்த்தால், இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் சராசரியாக 194 பிரியாணிகள் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, மதிய உணவை விட இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதையே மக்கள் அதிகம் விரும்பியுள்ளனர். இரவு நேர ஆர்டர்கள் மதியத்தை விட 32 சதவீதம் அதிகமாக இருந்துள்ளன.

அடுத்து..?
பிரியாணிக்கு அடுத்தபடியாக 4.42 கோடி ஆர்டர்களுடன் பர்கர்கள் இரண்டாவது இடத்தையும், 4.01 கோடி ஆர்டர்களுடன் பீட்சா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. தென் இந்தியர்களின் விருப்பமான வெஜ் தோசை 2.62 கோடி முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மாலை நேர சிற்றுண்டிகளைப் பொறுத்தவரை, மாலை 3 மணி முதல் 7 மணி வரை பர்கர்கள், சிக்கன் ரோல்கள் மற்றும் வெஜ் பீட்சாக்கள் முன்னணியில் இருந்தன.
'இந்த'க் கூட்டணி
ஆனாலும், இந்தியாவின் பாரம்பரியமான 'இஞ்சி டீ மற்றும் சமோசா' கூட்டணி இப்போதும் தன் மகுடத்தைத் தக்க வைத்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 34.2 லட்சம் சமோசாக்களும், 2.9 மில்லியன் கப் இஞ்சி டீயும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
இனிப்புப் பிரியர்களின் தேடலில் இந்த முறை 'ஒயிட் சாக்லேட் கேக்' (6.9 மில்லியன்) முதலிடம் பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து சாக்லேட் கேக் மற்றும் குலாப் ஜாமூன் ஆகியவையும் அதிக ஆர்டர்களைப் பெற்றுள்ளன.

இந்தியத் தின்பண்டங்களைப் பொறுத்தவரை காஜு பர்பி மற்றும் பேசன் லட்டு ஆகியவை முதலிடத்தில் உள்ளன. ஐஸ்கிரீம் வகைகளில் சாக்லேட் சுவையே மற்ற எல்லாவற்றையும் விட அதிக அளவில் விரும்பி உண்ணப்பட்டுள்ளது.
இணை எதுவுமில்லை
உலகளாவிய உணவுகளுக்கான மோகம் இந்தியர்களிடையே வேகமாக வளர்ந்து வருகிறது. மெக்சிகன் உணவுகள் 1.6 கோடி ஆர்டர்களையும், திபெத்திய உணவுகள் 12 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களையும் கடந்துள்ளன.
சர்வதேச உணவுப் பொருட்களில் 'மேட்சா' (Matcha) என்பதுதான் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட பெயராக உள்ளது. அதே நேரத்தில், நம் நாட்டின் பிராந்திய உணவுகளும் பெரும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக 'பகாரி' (Pahari) வகை உணவுகள் ஒன்பது மடங்கு வளர்ந்துள்ளன. அதேபோல் மலபாரி, ராஜஸ்தானி மற்றும் மால்வானி வகை உணவுகளின் ஆர்டர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.
பிரியாணியின் இந்த அசுர வளர்ச்சியைப் பார்க்கும் போது, இந்தியர்களின் உணவுக் கலாச்சாரத்தில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
சரி மக்களே... உங்கள் விருப்பமான உணவு இந்தப் பட்டியலில் இருக்கிறதா?
















