Yaodong: 4 கோடி சீனர்கள் வசிக்கும் 'ரகசிய' குகை வீடுகள் - வியக்க வைக்கும் பின்னண...
``கனவில் வந்து கடவுள் சொன்னார்'' - காளி சிலைக்கு மேரி மாதா அலங்காரம் செய்த பூசாரி
மும்பை செம்பூர் வாசிநாக்கா பகுதியில் மிகவும் பிரபலமான காளி மாதா கோயில் உள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் காலை நேரத்தில் சாமி கும்பிட வந்தபோது கருவறையில் இருந்த காளிதேவியின் சிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வழக்கமான அலங்காரம் போன்று இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.
குறிப்பாக காளி சிலைக்கு மேரி மாதா போன்று அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பக்தர்கள் உடனே இது குறித்து கோயிலில் இருந்த பூசாரியிடம் விசாரித்தனர்.
அதற்கு அந்த பூசாரி, தனது கனவில் காளி வந்து மேரி மாதா போன்று தன்னை அலங்கரிக்கும்படி கேட்டுக்கொண்டார் என்று விளக்கம் அளித்தார். அதோடு மேரி மாதா போன்று தனக்கு காட்சியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அவரது பதிலில் திருப்தியடையாத பக்தர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சில இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும் கோயில் பூசாரி ரமேஷுடன் வாக்குவாதம் செய்து அவரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று ஒப்படைத்தனர். யாரோ ஒருவர் சொல்லித்தான் இது போன்று ரமேஷ் நடந்து கொண்டுள்ளார் என்றும், அவரின் செயல் மதநல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
காளிசிலை மேரி மாதா போன்று அலங்கரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. அதனை பார்த்ததும் நெட்டிசன்கள் பலரும் இச்செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.
`ரமேஷ் யாராவது சொல்லி இது போன்று செய்தாரா என்று இன்னும் உறுதிபடுத்தவில்லை' என்று தெரிவித்துள்ள போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் அவரை இவ்வழக்கில் கைது செய்த போலீஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட் அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



















