Bank account-ல ரூ.1,20,000 உங்ககிட்ட இருந்தா... நீங்க உஷார்?! | #EmergencyFund
கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை
ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூரில் உள்ள தாந்தோன்றி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து இதுவரை 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.

இது தவிர, வேலுசாமிபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஆகியோரும் ஆஜராகி, செப்டம்பர் 27-ம் தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நடந்த சம்பவங்களை சி.பி.ஐ. விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த 3-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் வழங்கி சென்றதாகவும், விசாரணைக்கு வீடியோ ஆதாரங்களை அடுத்த மூன்று நாட்களில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்திப்பில் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 8-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளிடம், தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு திருச்சி மண்டல இணைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் உள்ளிட்ட மூவர், கரூர் வேலுசாமிபுரத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒளிப்பதிவுகள், ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒளிப்பதிவுகள், விஜயின் வாகனத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவான ஒளிப்பதிவு காட்சிகள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், அன்றைய விசாரணையில் மதியம் 12.30 மணிக்கு சென்ற த.வெ.க தரப்பு, மதியம் 2 மணிவரை ஆவணங்களை வழங்கி விட்டு சென்றனர்.
இந்நிலையில், நவம்பர் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு திருச்சி மண்டல இணைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு, த.வெ.க பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் உள்ளிட்ட மூவர் கூடுதல் ஆவணங்களை வழங்கினர்.
இதன்பின்னர், உணவு இடைவேளை முடிந்து மாலை 3.30 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகளைச் சந்திக்க சென்ற மூவரும், இரவு 8.45 மணிக்கே வெளியே வந்தனர்.
கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம், திட்டமிட்ட சதி என த.வெ.க. கட்சி ஆரம்பம் முதலே குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.
தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக் குழுவும், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணையும் த.வெ.க. தரப்புக்கு நம்பிக்கை இல்லை என, டெல்லி உச்சநீதிமன்றம் வரை சென்று சி.பி.ஐ. விசாரணை கோரியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையில் த.வெ.க. தரப்பு, ஒளிப்பதிவு செய்த அனைத்து வீடியோக்களையும் ஆதாரங்களுடன் சமர்ப்பித்து, சதி நடைபெற்றதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகவும், இதில் செந்தில் பாலாஜி பங்கு இருப்பதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விளக்கியதாகத் தெரிகிறது.
இன்னும் சில நாள்களில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட வர உள்ளதால், அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையில் சேகரித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிகிறது.

















