பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இள...
காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸுக்கு இம்முறை வாய்ப்பு மறுப்பா? - குளச்சலில் அலையடிக்கும் அரசியல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. இயற்கை துறைமுக தொகுதி என்ற சிறப்பை பெற்ற குளச்சலில் தி.மு.க ஒருமுறையும், அ.தி.மு.க 2 முறையும் வென்றுள்ளன. அதே சமயம் காங்கிரஸ் கட்சி 7 முறை வெற்றிப்பெற்ற தொகுதியாகும்.
2006-ல் ஜெயபால் எம்.எல்.ஏ-யாக இருந்த சமயத்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார். பின்னர் மேலிடத்தில் நடந்த சில காய்நகர்த்தல்களைத் தொடர்ந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராபர்ட் புரூஸ் மாற்றப்பட்டு பிரின்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் இருந்து தொடர்ச்சியாக பிரின்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்று வருகிறார்.

கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் கட்சி வாக்குகள் ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துவருகிறது. மேலும், தி.மு.க உடனான கூட்டணி பலத்தாலும் காங்கிரஸ் அந்த தொகுதியில் வென்று வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் நான்காவது முறையாக போட்டியிட தயாராகி வருகிறார் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ். அதே சமயம் மூன்றுமுறை தொடர்ச்சியாக எம்.எல்.ஏ ஆனதால் இம்முறை பிரின்சுக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை என அக்கட்சியைச் சேர்ந்த சிலர் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
கட்சி பணி... இல்லை?
இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் விவரப்புள்ளிகள், "கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, நாகர்கோவில் மாநகர் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாக காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் கிழக்கு மாவட்டத்தில் உள்ள குளச்சல் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக உள்ளார். அவர் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி போன்றவைகள் மூலம் பணி செய்கிறார். அதே சமயம் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் விதமாக பணி செய்யவில்லை என்ற அதிருப்தி தொண்டர்கள் மத்தியில் உள்ளது. பிரின்ஸின் செயல்பாட்டில் அதிருப்தி இருந்தாலும், தேர்தல் சமயத்தில் எழும் பா.ஜ.க எதிர்ப்பு அலை காரணமாக குளச்சல் தொகுதியில் அவர் வெற்றிபெற்று வருகிறார்.

எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கிடைக்கும்!
கட்சிப்பணியில் கவனம் செலுத்தாமல் உள்ளதாக பிரின்ஸ் மீது மேலிடத்துக்கு புகார் சென்றுள்ளது. அதனால்தான் இந்த முறை அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல் பரவுகிறது. குளச்சல் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் லாரன்ஸ், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் துணைத்தலைவர் மகேஷ் லாசர் உள்ளிட்ட பலர் குளச்சலில் சீட் பெற முயல்கிறார்கள். அதே சமயம் குளச்சலில் பிரின்ஸுக்கு மீண்டும் சீட் வழங்க கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், விளவங்கோடு எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் ஆகியோர் ஆதரவான நிலைப்பாடு எடுக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் 2 முறை எம்.எல்.ஏ ஆகிவிட்டார். மூன்றாவது முறையாக போட்டியிடப்போகிறார். 3 முறை போட்டியிட்டவர்களுக்கு அடுத்ததாக வாய்ப்பு வழங்கக்கூடாது என்ற கோட்பாட்டை இந்த தேர்தலில் செயல்படுத்தினால் அடுத்தடுத்த தேர்தல்களில் அது ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட் ஆகியோரை பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவேதான் அவர்கள் பிரின்ஸுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் நிலை உள்ளது" என்றனர்.

தலைமை கண்டிப்பாக சீட் வழங்கும்
இதுகுறித்து பிரின்ஸ் எம்.எல்.ஏ-விடம் பேசினோம், "கட்சியில் பலரும் சீட்டுக்கு ஆசைப்படுவது இயல்புதான். ஆனால், எனது செயல்பாடு மீது யாரும் குறைசொல்ல முடியாது. நான் களத்தில் மக்களுக்காக நிறைய பணி செய்துள்ளேன். மக்கள் மத்தியில் எனக்கு இன்றும் செல்வாக்கு உள்ளது. கட்சி தலைமையும் எனக்கு ஆதரவாக உள்ளது. கேரள முதல்வர் உம்மன் சாண்டி 11 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தார். காங்கிரஸில் தகுதியானவர்களுக்கு 7 முறை, 9 முறை என சீட் வழங்கியுள்ளார்கள். அதிகமாக சட்டசபையில் பேசி சிறப்பாக செயலாற்றிய எனக்கு தலைமை கண்டிப்பாக சீட் வழங்கும்" என்றார்.














