Aaromaley Movie Review | Kishen Das, Harshath Khan, Shivathmika | Silambarasan T...
``கோமாவில் இறந்தவர், பாலிசி காலாவதியை ஏற்க முடியாது'' - மனைவிக்கு ரூ.1 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் விசாலாட்சி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். விசாலாட்சியின் கணவர் சரவணன் ரெங்கநாதன், தனியார் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான பாலிசியை கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி எடுத்திருந்தார்.
அதற்கான முதல் ஆண்டு பிரீமியமாக ரூ.7,425-ஐ அவர் செலுத்தியிருந்தார். இந்த பாலிசி 2015, ஜூலை 1-ம் தேதி முதல் 2016, ஜூலை 1-ம் தேதி வரை அமலில் இருந்தது.
இந்த நிலையில், சரவணன் ரெங்கநாதன் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.

இதில் அவரது தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. விபத்து நடந்த நாள் முதலே சரவணன் ரெங்கநாதன் கோமா நிலைக்கு சென்றார்.
அவர் திருச்சி மற்றும் நெல்லையில் உள்ள மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்றார். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி உயிரிழந்தார்.
விபத்து நடந்த நாள் முதல் உயிரிழந்த நாள் வரை அவர் கோமா நிலையிலேயே இருந்தார். அவர் இறந்ததையடுத்து அவரது மனைவி விசாலாட்சி காப்பீட்டு தொகை கோரி விண்ணப்பித்தார். ஆனால் காப்பீட்டு நிறுவனம் அக்கோரிக்கையை நிராகரித்தது.
பாலிசிக்கான இரண்டாம் ஆண்டு பிரீமியம் சலுகை நாட்கள் உட்பட 2016, ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தப்படவில்லை என்றும், அவர் இறந்த தேதியான 2016, ஆகஸ்ட் 17-ம் தேதி பாலிசி அமலில் இல்லை என்றும் கூறி காப்பீட்டு நிறுவனம் நிராகரித்தது. இதுகுறித்து விசாலாட்சி நெல்லை மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சரவணன் ரெங்கநாதன், விபத்தில் சிக்கிய 2015 அக்டோபர் 17-ம் தேதி பாலிசி முழுமையாக அமலில் இருந்தது. விபத்து நடந்த நாளிலிருந்து அவர் இறக்கும் வரை கோமா நிலையில் இருந்தார் என்பதை மருத்துவ ஆவணங்கள் தெளிவாக நிரூபித்துள்ளன.
இதைக் காப்பீட்டு நிறுவனத்தின் தரப்பு சாட்சியான நாகராஜன் மணியும் குறுக்கு விசாரணையின் போது ஒப்புக் கொண்டார். காப்பீட்டாளர் கோமா நிலையில் இருந்ததால் அவர் பிரீமியத்தை செலுத்த இயலவில்லை.

எனவே “பிரீமியம் செலுத்தாதது வேண்டுமென்றோ அல்லது உள்நோக்கத்துடனோ செய்யப்பட்ட தவறு அல்ல. ஒரு காப்பீட்டு நிறுவனம் வணிக நோக்குடையதாயினும், அதன் அடிப்படை சமூக நலன் மற்றும் பாதுகாப்புக் கொள்கை முக்கியம்.
உடல்பார்வை ரீதியான இயலாமையால் ஒருவர் தனது கடமையை செய்ய முடியாதபோது, மனிதாபிமான மற்றும் சமத்துவக் கருத்துகளின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டிருக்க வேண்டும்" என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இக்காரணங்களின் அடிப்படையில் பாலிசி காலாவதி ஆகிவிட்டது என்ற காப்பீட்டு நிறுவனத்தின் வாதத்தினை ஏற்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து விசாலாட்சிக்கு ரூ.1 கோடியை, ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டது.

















