"ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க"- இயக்குநர் ஜீத்து ஜோசப...
கோவா தீ விபத்து: `எப்படியும் போனை எடுத்து பேசுவார்னு நினச்சேன்’ - கணவன், 3 சகோதரிகளை பறிகொடுத்த பெண்
கோவா சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான இடம். அதுவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் உலகம் முழுவதும் இருந்து கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கோவாவில் உள்ள இரவு நேர மதுபான விடுதிகள் (பப்கள்) அங்கு பிரபலம். இரவு முழுவதும் நடனம், மது என்று சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அது போன்ற ஒரு மதுபான பப் நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்து 25 சுற்றுலா பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். கோவாவில் உள்ள அர்போரா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த பிரபலமான நைட் கிளப்பில் இத்தீவிபத்து ஏற்பட்டது.
இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காஜியாபாத்தை சேர்ந்த வினோத் குமார் தனது மனைவி மற்றும் மனைவியின் 3 சகோதரிகளுடன் கோவாவிற்கு சுற்றுலா வந்திருந்தார்.

இதில் சகோதரிகள் மூன்று பேரும் டெல்லியில் வசித்து வந்தனர். அவர்கள் கடந்த 4-ம் தேதி கோவாவிற்கு வந்தனர். நைட்கிளப்பில் தீப்பிடிப்பதற்கு 15 நிமிடத்திற்கு முன்புதான் வினோத் குமாரும், அவரது குடும்பத்தினரும் அந்த கிளப்பிற்குள் சென்றனர்.
இது குறித்து கணவன் உட்பட 4 பேரை இத்தீவிபத்தில் பறிகொடுத்த வினோத்குமார் மனைவி பாவ்னா கூறுகையில், ''தீப்பிடித்தவுடன் நாங்கள் தப்பிக்க முயற்சி செய்தோம். எனது கணவர் மெயின் கேட் வழியாக என்னை வெளியில் பிடித்து தள்ளினார். அவர் மீண்டும் உள்ளே இருந்த எனது 3 சகோதரிகளை காப்பாற்றுவதற்காக சென்றார். நீண்ட நேரமாக வெளியில் நின்று கொண்டிருந்தேன். அவருக்கு தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தேன். வரவேற்பு அறையில் இருந்தவர்களிடம் அவரை காப்பாற்றும்படி கெஞ்சினேன்.
அவர் எப்படியும் போனை எடுப்பார் என்று நினைத்தேன். அவரது போன் ரிங்காகிக்கொண்டே இருந்தது. ஆனால் கிளப்பில் தீவிபத்து நடந்த இடத்தில் இருந்து ஒவ்வொரு உடலாக எடுத்துச்சென்றனர். கடைசியாக உடலை எடுத்தபோதுதான் எனது ஒட்டுமொத்த நம்பிக்கை உடைந்துவிட்டது. கிளப்பில் நான் மட்டும் தனித்து நின்று கொண்டிருந்தேன்'' என்றார் கலங்கியபடி.
பாவ்னாவுக்கு கிளப் ஊழியர்கள் ஆறுதல் தெரிவித்தனர். மூன்று சகோதரிகள், கணவனை இழந்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் பாவ்னா தனிமரமாக நின்று கொண்டிருந்தார். அவரது உறவினர்கள் டெல்லியில் இருந்து வந்துள்ளனர்.
தீவிபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வேலை தேடி கோவா வந்த சகோதரர்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் கோவாவுக்கு வந்திருந்த உறவினர் நாராயணனுக்கு இது குறித்து காலையில்தான் தெரிய வந்தது. அவர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் கோவா வந்திருந்தனர். தீவிபத்தில் அதிகமானோர் தங்களது கணவன், மனைவி, உறவுகளை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.
இதே போன்று பெங்களூருவில் இருந்து 9 பெண்கள் கோவாவிற்கு சுற்றுலாவிற்கு வந்திருந்தனர். அவர்களில் 4 பேர் மட்டும் தீவிபத்து நடந்த கிளப்பிற்கு வந்திருந்தனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு செல்லலாம் என்று நினைத்தபோது தீப்பிடித்துக்கொண்டது. அவர்களில் 20 வயது பெண் ஒருவர் மட்டும் 28 சதவீத தீக்காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார். இதே போன்று மும்பையில் இருந்து வந்த டாக்டர் தம்பதியும் தீவிபத்தில் சிக்கிக்கொண்டது. இதில் மனைவி தப்பித்துக்கொண்டார். ஆனால் அவரின் கணவர் தீக்காயத்துடன் உயிர் தப்பி இருக்கிறார். இப்போது தனது கணவருடன் இருந்து அவருக்கு மனைவி சிகிச்சையளித்து வருகிறார்.


















