ராஜூமுருகன் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் பாராட்டிய குறும்படம் இது! - `லிட்டில...
சிக்கலிலிருந்து தீர்வு நோக்கி..! - ரூ.385 லட்சம் திட்ட மதிப்பீடு ரூ.737 லட்சம் ஆனது ஏன்?| அணை ஓசை 07
1910-ல் தயாரிக்கப்பட்ட மேட்டூர் அணை திட்டம் அரசு பரிசீலனையில் இருந்தபோதும், மெட்ராஸ் மற்றும் மைசூர் அரசுகளின் உடன்பாடின்மையால் அது பெரிய பின்னடைவை சந்தித்தது. ஏனெனில், மைசூர் அரசு கண்ணம்பாடி என்ற இடத்தில் (மைசூர் நகருக்கு 12 மைல் மேலே) கிருஷ்ணராஜ சாகர் அணை திட்டத்தை முன்னெடுத்து வந்தது.
இந்த அணையின் நோக்கம், 1,25,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் வழங்குவதோடு, 1905 இல் நிறுவப்பட்ட சிவசமுத்திரம் மின்நிலையத்துக்கு கோடை காலத்திலும் சீரான நீர் வழங்குவதாகும். வெயில் காலங்களில் அங்கு நீர்வரத்து 500 கன அடிக்கு கீழ் தாழ்ந்ததால், மின்சாரம் தயாரிக்க குறைந்தது 900 கன அடி அளவு நீர் தேவை என்பதால் அந்த அளவுக்கு கிடைக்க அணை கட்டத் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், காவிரி ஆற்றின் நீரின் மீது உரிமை கோரல், இரு அரசுகளுக்கும் இடையில் தீவிரமான பிரச்சனையாக மாறியது. 1913 இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு 1914 இல் தீர்ப்பு வந்தது. ஆனால் சென்னை மாகாணம், டெல்டா நிலங்களின் ஏற்கனவே உள்ள பாசன உரிமையை அந்தத் தீர்ப்பு கவனிக்கவில்லை எனக் கூறி மறுத்தது. இதனால் இந்திய அரசு மற்றும் SECRETARY OF STATE முன் மேல்முறையீடு செய்யப்பட்டது.
பிரச்னைக்கு தீர்வு காண, இரு அரசுகளும் ஒன்றாக இணைந்து மாதந்தோறும் கிடைக்கும் நீரின் அளவுகளை பதிவு செய்தனர். இதன் மூலம் முன்னதாகக் கூறப்பட்ட கணக்குகள் தவறானவை எனவும், நீரின் அளவு குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது எனவும் உறுதி செய்யப்பட்டது. 1921 இல், இரு மாநிலங்களின் தலைமை பொறியாளர்களும், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும், எதிர்காலத்தில் கட்டப்படவிருந்த மேட்டூர் அணைக்கும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டனர்.
1922 மற்றும் 1923 -ல் தொடர்ந்து நடைபெற்ற கணக்கிலடங்கா ஆலோசனை கூட்ட பேச்சுவார்த்தைகளில், சென்னை மாகாணத்தின் சார்பில் கே. சீனிவாச அய்யங்கார் மற்றும் சர் சி.பி. ராமசாமி அய்யர் ( LAW MEMBER ) முக்கிய பங்கு வகித்தனர். இறுதியில் 1924 பிப்ரவரியில் பெங்களூரில் கெப்பி (Mr. GEBBIE) தலைமையில் நடந்த இறுதி கூட்டத்தில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, சென்னை மாகாணம் கட்டும் புதிய அணையின் கொள்ளளவு “93,500 மில்லியன் கன அடி” என நிர்ணயிக்கப்பட்டது. இரு மாநில தலைமைப் பொறியாளர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதற்கிடையில், மைசூர் அரசு 1911 இல் தொடங்கிய கிருஷ்ணராஜ சாகர் அணை வேலையை நிறுத்தாமல் தொடர்ந்து கட்டிக் கொண்டு போனது. 16 ஆண்டுகள் எடுத்த இந்த மிகப்பெரிய அணை 8600 அடி நீளமுடையது. அடித்தளத்திலிருந்து 140 அடி உயரம், 48,335 மில்லியன் கன அடி கொள்ளளவு, அதில் 44,827 மில்லியன் கன அடி பாசனத்திற்கான நீர் சேமிப்பு என வடிவமைக்கப்பட்டது.
கோலார் தங்க வயல் உட்பட பல தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம்
அணையின் முக்கிய நோக்கம், சிவசமுத்திர மின் நிலையத்திற்கு சீரான நீர் விநியோகம் செய்வதே. இதனால் அங்கு மின் உற்பத்தி 10,000 H.P யிலிருந்து 46,000 H.P ஆக உயர்ந்தது. கோலார் தங்க வயல் உட்பட பல தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

குறிப்பாக, பின்னாளில் மேட்டூர் அணை கட்டும்போது அதற்குத் தேவையான மின்சாரம் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து சிவசமுத்திரத்திலிருந்தே பெறப்பட்டது என்பது வரலாற்றுச் சிறப்பாகும்.
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு சுமார் ரூ 2.5 கோடி செலவானது. மின் நிலையத்துடன் சேர்ந்து மொத்தச் செலவு ரூ 6.75 கோடிக்கு உயர்ந்தது. இதன் மூலம், காவிரி நீர் பங்கீட்டு சிக்கலில் உருவான ஒப்பந்தம், மேட்டூர் அணை உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்தது.
முன்னதாக, 1914 ஆம் ஆண்டு நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படி, கிருஷ்ணராஜ சாகர் அணை பயன்பாடுகள் சில கட்டுப்பாடுகளுடன் அமைய வேண்டும் என்ற உத்தரவு வந்தது. இதனால் கர்னல் எல்லீஸ் 1910 ஆம் ஆண்டு செய்த கணக்கீடுகளை மறுபரிசீலனை செய்தார். புதிய பாசன நிலங்களின் அளவை குறைத்தாலும், திட்டத்தின் முதன்மை குறிக்கோள்கள் பாதிக்கப்படாமல் வைத்தார். முதலில் குறிப்பிடப்பட்ட 3,29,396 ஏக்கரில் இருந்து 32,396 ஏக்கர் குறைக்கப்பட்டது. அதுபோல, இருபோக நிலங்களில் 10,000 ஏக்கர் குறைக்கப்பட்டு, ஏற்கனவே பாசன வசதி பெற்ற நிலங்கள் 70,000 ஏக்கரிலிருந்து 65,000 ஏக்கருக்கு குறைக்கப்பட்டன.

இந்தக் காலத்தில், சர் ஜான் பென்டன் முன்மொழிந்த வடிவமைப்பு யோசனைகள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டன. சர் நெதர்சோல் 1916-ல் மேட்டூர் அணை இடங்களை பார்வையிட்டு சில மாற்றங்களை பரிந்துரைத்தார். ஆனால், அதே சமயம் முதலாம் உலகப் போர் காரணமாக பொருட்களின் விலை, தொழிலாளர்களின் சம்பளம் ஆகியவை உயரும் நிலை ஏற்பட்டது. 1916 -ல் திருத்திய மதிப்பீடு ரூ. 409.5 லட்சம் ஆக உயர்ந்தது. எதிர்பார்க்கப்பட்ட வருவாய் சுமார் 5.97% ஆகக் குறைந்தது. இந்த மதிப்பீடு இந்திய அரசுக்கு 28 டிசம்பர் 1916 அன்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் 1921-ல் செயற்பொறியாளர் மார்கன் திட்ட மதிப்பீட்டை மீண்டும் பரிசீலித்து முடித்தார். இதற்கிடையில் விலையேற்றத்தால், மொத்த மதிப்பீடு ரூ. 558.9 லட்சம் ஆனது. 1910-ல் அது 385 லட்சம் மட்டுமே இருந்தது நினைவு கூறத்தக்கது.
1924-ல் சென்னை–மைசூர் நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டபோது, திட்ட மதிப்பீடு மேலும் உயர்ந்து ரூ. 612 லட்சம் ஆனது. இது, வடிவமைப்பில் மாற்றங்கள் மற்றும் விலையேற்றத்தின் விளைவாக, கர்னல் எல்லீஸ் கணித்ததை விட பல லட்சம் ரூபாய் கூடுதலானது.
1924 டிசம்பரில், ரூ. 612 லட்சம் மதிப்பீடு இந்திய அரசுக்கு (G.O. எண் 94- I ) 31 டிசம்பர் 1924 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. 1925 மார்ச் 3 அன்று SECRETARY OF STATE ஒப்புதல் அளித்தார். இந்த இறுதி மதிப்பீடு, 1924 சென்னை–மைசூர் ஒப்பந்தத்தின் விதிகளையும், கர்னல் எல்லீஸ் தேர்வு செய்த SITE-D என்ற இடத்தையும் உறுதி செய்தது. எனினும், அணை கட்டி முடிக்க மொத்த செலவினம் ரூ. 737 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டது.

அணை கட்டுமான முறையிலும் மாற்றங்கள் நடந்தன. பழைய கருங்கல் (rubble) முறை தவிர்க்கப்பட்டு, “Cyclopean Masonry” என்ற கான்கிரீட்-பிளம் (plum) முறையில் கட்ட முடிவு செய்யப்பட்டது. பெரிய கற்கள், ஆற்று மணல் ஆகியவை மேட்டூர் பகுதியில் எளிதில் கிடைத்ததால் இதைச் செயல்படுத்த முடியும் எனக் கருதப்பட்டது.
எல்லீஸ் தனது அறிக்கையில், சிறிய கற்கள் மற்றும் சுர்க்கி கொண்டு அணை கட்டினால் திறமையான மேசன்கள் தேவைப்படும்; ஆனால் மூன்றில் இரண்டு பங்கு அணையை கான்கிரீட் மூலம் கட்டினால் சிரமம் குறையும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தொழில்நுட்பத்தை அறிய பொறியாளர் திரு. ஹூஜ் கீலிங் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு கட்டப்பட்ட “Olive Bridge” மற்றும் “Barren Jack Dam” போன்ற அணைகளைப் பார்வையிட்டு வந்த அவர், பெரிய கற்கள் வைத்து கான்கிரீட் மூலம் அணை கட்டினால் அது உறுதியானதாக இருக்கும் என பரிந்துரைத்தார்.

ஆனால், பெரிய கற்களை நகர்த்தும் பணி கடினமாகவும், செலவுகள் அதிகமாகவும் இருந்ததால் சில இடங்களில் மாற்று வழிமுறைகள் தேடப்பட்டது. மேட்டூர் அணையிலும் பெரிய கற்களைப் பயன்படுத்த சவால்கள் இருந்தன.
இவ்வாறு, 1910-ல் கர்னல் எல்லீஸ் கணித்த ரூ. 385 லட்சத்திலிருந்து, இறுதியில் ரூ. 737 லட்சம் வரை செலவினம் உயர்ந்தாலும், மேட்டூர் அணையின் மகத்தான கட்டுமான வரலாற்றில் சிறப்பான திட்டமிடல் என்பது பொறியாளர்களின் திறமையை உணர்த்தியது.
காவிரி நன்னீர் சிறப்பு

















