செய்திகள் :

'சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்' - பரபர இந்திரா பவன்! | Karnataka Congress

post image

"2.5 ஆண்டுகள் சுழற்சி" ஒப்பந்தம்?

கர்நாடகாவில் 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதல்வர் பதவியைப் பிடிக்கச் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரிடமும் தலைமை பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். அப்போது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதல்வராகவும் பதவியைப் பகிர்ந்து கொள்ள 'ஒரு ரகசிய ஒப்பந்தம்' போடப்பட்டதாகச் செய்திகள் பரவின. ஆனால், காங்கிரஸ் மேலிடம் இதை வெளிப்படையாக ஒருபோதும் அறிவிக்கவில்லை. இந்தசூழலில் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டுக் காலம் நவம்பரில் முடிவடைகிறது.

கர்நாடக சட்டப்பேரவை

இதையடுத்து, 'ரகசிய ஒப்பந்தத்தை மதித்து, டி.கே. சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும்' என அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களில் தினேஷ் கூலிகவுடா, ரவி கனிஹா, குப்பி வாசு உள்ளிட்ட சில எம்.எல்.ஏ-க்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்ததாக வெளியான தகவல்கள் கர்நாடக காங்கிரஸில் பெரும் பரபரப்பை கிளப்பியது. அப்போது அவர்கள், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததற்குக் கடுமையாக உழைத்த டி.கே. சிவக்குமாருக்கு, ரகசிய ஒப்பந்தத்தின்படி முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும். தற்போதைய முதல்வர் பதவிக் குழப்பத்துக்குக் கட்சித் தலைமை விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'200% டி.கே. சிவக்குமார்தான் முதல்வர்!'

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்நகராவின் எம்.எல்.ஏ-வும், டி.கே. சிவக்குமாரின் தீவிர ஆதரவாளருமான இக்பால் ஹுசைன், "நான் எப்போதும் அந்த அறிக்கைக்கு 200% உறுதியாக இருக்கிறேன். விரைவில் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராவார். எல்லோரும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவோம். ஆனால், சிவக்குமார் முதலமைச்சராக வருவது நிச்சயம். அவர் கட்சிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். 2028-ல் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த, சிவக்குமார் தலைமைக்கு வர வேண்டும்." எனப் பேட்டி கொடுத்துச் சித்தராமையா தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

அதேநேரத்தில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ், "நான் அவர்களை (ஆதரவு எம்.எல்.ஏக்களை) டெல்லிக்கு அழைக்கவும் இல்லை, பேசவும் இல்லை. அவர்கள் ஏன் சென்றார்கள் என்று நான் கேட்கப் போவதில்லை. அமைச்சரவை மாற்றத்தில் அவர்களுக்கு அமைச்சர் பதவி தேவைப்பட்டிருக்கலாம்," என்று கூறி, தனது ஆதரவாளர்களின் வெளிப்படையான முயற்சிக்கும் தனக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று அவர் காட்டிக் கொண்டார். தொடர்ந்து பேசியவர், "எனக்கு முதல்வர் பதவி தொடர்பாகப் பதவியின் முதல் நாட்களிலேயே ஒரு உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் நான் மற்றும் சித்தராமையாவுக்கு இடையிலான ஒப்பந்தம் அல்ல. ஐந்து முதல் ஆறு கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையே ஆன ஒரு ரகசிய ஒப்பந்தம் அது,"

'பொதுவெளியில் பேச விரும்பவில்லை…'

"அந்த ஒப்பந்தம்பற்றிப் பொதுவெளியில் பேச நான் விரும்பவில்லை. அது மிகவும் ரகசியமானது. காங்கிரஸ் கட்சியின் நலனுக்காகவும், இந்த அரசு ஸ்திரமாக இருக்கவும், எனக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று நான் துணை முதல்வராகப் பதவியேற்றேன். இப்போதுகூட, இந்த விவகாரம் குறித்துப் பொதுவெளியில் பேசி நான் மேலும் சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை. என்னிடமும் சித்தராமையாவிடமும் தலைமை பேசியுள்ளது. கட்சித் தலைமை எடுத்த முடிவுகுறித்து எனக்குத் தெரியும்.

ராகுல் காந்தி

அவர்களுக்கு அனைத்தும் தெரியும். இப்போது அந்த முடிவை அவர்கள் தான் செயல்படுத்த வேண்டும். நாங்கள் அனைவரும் கட்சியின் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்கள். டெல்லி தலைமை என்ன முடிவெடுத்தாலும், அதற்கு நான் கட்டுப்படுவேன். பொறுத்திருந்து பாருங்கள். டெல்லி தலைமையின் முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்வோம். காத்திருங்கள், நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வீர்கள்" எனத் தெரிவித்து ரகசிய ஒப்பந்தம்குறித்து வெளிப்படையாகப் போட்டுடைத்தார்.

'டி.கே.எஸ் சொல்வது எனக்குப் புரியவில்லை' - சித்தராமையா!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "முதல்வர் பதவிக் காலம்குறித்து எந்த ரகசிய ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. நான் ஐந்து ஆண்டுகள் முழுமையாக முதலமைச்சராக இருப்பேன். அதிலென்ன சந்தேகம்? எங்கள் ஆட்சி எந்தப் பதவிக் காலப் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் செயல்படவில்லை. கட்சித் தலைமை எடுத்த முடிவின்படி நான் முதல்வராக இருக்கிறேன். டி.கே. சிவக்குமார் கூறும் ரகசிய ஒப்பந்தம் குறித்து எனக்குத் தெரியாது. அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. அப்படி எந்த ரகசிய ஒப்பந்தமும் இருப்பதை நான் அறியேன்," என்றார். இதனால் டி.கே.எஸ் ஆதரவாளர்கள் கொதி நிலையின் உச்சத்துக்கு சென்றனர். இதையடுத்து டெல்லிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

பிறகு பேசிய சித்தராமையா, "முதல்வர் பதவிக் குழப்பத்துக்குக் காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவேன்" என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க சித்தராமையா முயற்சித்து வருகிறார். அதாவது தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அமைச்சர்களாக நியமித்து, தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்தவும், கட்சிக்குள் தனது நிலையை உறுதிப்படுத்தவும் முயல்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். புதிதாக அமைச்சர்கள் பதவியேற்றால், உடனடியாக முதல்வரை மாற்றுவது கட்சி மேலிடத்திற்குச் சிரமமாக இருக்கும் என்று அவர் நம்புவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 'காமராஜ் திட்டம்' என்ற பெயரில் சில மூத்த அமைச்சர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குக் கட்சிப் பணிகளை ஒதுக்கவும், அதற்குப் பதிலாக 10 முதல் 12 புதிய முகங்களை அமைச்சரவையில் சேர்க்கவும் சித்தராமையா திட்டமிட்டிருகிறார்.

அமைச்சரவை மாற்றம்; தயாராகும் சித்தராமையா!

இதற்கு டெல்லி தலைமையிடம், 'சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதிலிருந்து, பல எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் இடம் பிடிக்கத் தீவிரமாக லாபி செய்து வருகின்றனர். இந்த மாற்றம்மூலம் நீண்டகாலமாக அமைச்சரவை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கோரிக்கையைச் சமாதானப்படுத்த முடியும். சில அமைச்சர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுவதால், அரசின் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், 2028 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டும் திறமையற்றவர்களை நீக்கிவிட்டுப் புதியவர்களை நியமிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்' எனச் சித்தராமையா காரணம் சொல்வதாகக் கூறப்படுகிறது. சித்தராமையாவின் கணக்கு டெல்லிக்கு தெரியும் என்பதால் அவர்கள் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

 மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "கர்நாடகாவில் தற்போது நிலவும் அதிகாரப் போராட்டம் குறித்துப் பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரம் குறித்துச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன கூற விரும்பினாலும், அவர்கள் அதைக் கட்சித் தலைமையிடம் தான் தெரிவிக்க வேண்டும். இறுதியில், இந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கட்சி மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் இந்தச் சிக்கலைத் தீர்ப்போம். நானும், சோனியா காந்தி மற்றும் ராகுலும் காந்தி இணைந்து இதைச் சரிசெய்வோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

கார்கே.. சோனியா.. ராகுல்..

பரபர இந்திரா பவன்!

இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய மிக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர், "டிசம்பர் 1-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்குள் இந்த விவாகரத்துக்கு தீர்வு காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் கார்கே-ராகுல் காந்தி சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அதன் பிறகு சித்தராமையாவும், டி.கே.எஸ்ஸும் டெல்லிக்கு வரவழைக்கப்படுவார்கள். தற்போதைய நிலவரப்படி டி.கே. சிவக்குமாரை சமாதானப்படுத்தவே டெல்லி தலைமை முயற்சி செய்கிறது.

காங்கிரஸ் (Congress)
காங்கிரஸ் (Congress)

ஏனெனில் சித்தராமையவிடமிருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டால் அவர் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு எடுக்கக்கூடும் எனத் தலைமை அஞ்சுகிறது. இவர்கள் இருவரும் சமாதானம் அடையவில்லை என்றால் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவை முதல்வராக்கலாமெனச் சில தலைவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அவரும் தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார். இதை, "நான் எப்போதும் முதல்வர் பதவிக்கான போட்டியில் தான் இருக்கிறேன். இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. நான் ஒருபோதும் போட்டியிலிருந்து விலகியதில்லை." எனக்கூறி பரமேஸ்வரா உறுதிப்படுத்திருக்கிறார். ஆனால் இதை டெல்லி தலைமை விரும்பவில்லை. எனவே என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பாப்போம்" என்றனர் விரிவாக.

``செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மகளிர் கைவசப்பட வேண்டும்'' - அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 'மகளிரின் உழைப்பால் மலரட்டும் திருச்சுழி!’ என்ற இலக்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சொந்த முன்னெடுப்பில் நடத்தி வரும் மூன்று நாள் இலவச மகளிர் தொழிற்பயிற்சி முக... மேலும் பார்க்க

காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு! - பரபர அப்டேஸ்!

இன்று காலை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த செங்கோட்டையன், சூட்டோடு சூடாக இன்று மாலை தவெக தலைவர் விஜய்யையும் சந்தித்திருக்கிறார். டெல்லியில் எடப்பாடி செய்ததைப் போல கார்க... மேலும் பார்க்க