TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?
சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?
சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் ஆதிகேவசனின் பெயர் உள்ளது.
இந்தநிலையில், ரௌடி ஆதிக்கு அறிமுகமான சுசித்ரா என்பவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18.12.2025-ம் தேதி பெண் குழந்தைப் பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை நேற்றிரவு உயிரிழந்தது.
இந்தத் தகவல் கிடைத்ததும் ரௌடி ஆதி, மருத்துவமனைக்கு நேற்றிரவு வந்திருக்கிறார். குழந்தை இறப்பு குறித்து அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள், டாக்டரிடம் ஆதியும் அவர் தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்குப்பிறகு குழந்தையின் சடலத்தை ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் அன்றைய தினம் இரவு ஆதியும் சுசித்ரா, அவரின் தோழி சாருமதி ஆகியோர் மருத்துவமனையில் லேபர் வார்டு பகுதியில் தங்கியிருக்கிறார்கள்.
இதனிடையே, அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனைக்குள் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் தூங்கிக் கொண்டிருந்த ரௌடி ஆதியை சுற்றி வளைத்து வெட்டினர். இதில் அவரின் தலை, இடது கை, வலது கால் ஆகியவற்றில் வெட்டு விழுந்தது. ஆதியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த நோயாளிகளும் மருத்துவமனை ஊழியர்களும் உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் போலீஸார் வருவதற்குள் கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடி, மருத்துவமனைக்கு வெளியில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ, பைக்குகளில் ஏறி தப்பிச் சென்றனர்.
இதற்கிடையில் உயிருக்குப் போராடிய ஆதியை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே ஆதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸார், கொலை வழக்குப்பதிந்து ரௌடி ஆதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு சென்றனர். ஆதியுடன் இருந்த சுசித்ரா, சாருமதி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட ரௌடி ஆதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதோடு ஆதியோடு தங்கியிருந்த சுசித்ரா, சாருமதி ஆகியோருக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
அதனால் அவர்களிடம் விசாரித்து வருகிறோம். மருத்துவமனை வளாகத்துக்குள் 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அப்படியிருந்தும் இந்தக் கொலை நடந்திருக்கிறது. அதனால் பாதுகாப்பு பணியில் அலட்சியமாக செயல்பட்ட இரவு போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

















