Jana Nayagan: அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட பொருள்களுக்கு தடை - நெறிமுறைகளை ...
சென்னை: மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி - ராணிப்பேட்டை பெண் கைது!
சென்னை, அசோக்நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டனி அமிர்தராஜ். இவர், பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023- ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ், தன்னுடைய மகனை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்க முயற்சி செய்து வந்திருக்கிறார். அப்போது ராணிபேட்டையைச் சேர்ந்த லட்சுமி பிரியா, சின்னத்துரை, அருண், மஞ்சுநாதா ஆகியோர் ஆண்டனி அமிர்தராஜுக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். பின்னர், அவர்கள் ஆண்டனி அமிர்தராஜியிடம் கால்நடை மருத்துவ சீட்டுக்காக 42 லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் லட்சுமி பிரியா உள்ளிட்ட 4 பேரும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளனர்.

உடனே ஆண்டனி அமிர்தராஜ் அவர்களிடம் பணத்தை திரும்பக் கேட்டபோது 4,44,000 ரூபாயை மட்டும் திரும்பக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு மீதிப் பணத்தைக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்திருக்கிறார்கள். இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் ஆண்டனி அமிர்தராஜ் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்தக் கும்பல் ஆண்டனி அமிர்தராஜிடம் பணம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்த மோசடி வழக்கில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரியாவை (45) போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.




















