``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக...
சேலம்: அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்; எம்எல்ஏ அருள் உட்பட 40 பேர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடுகத்தாம்பட்டி பகுதியில் பாமக நிர்வாகி ஒருவருடைய தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்றைய தினம் சென்றிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக அன்புமணி ஆதரவாளர்களுக்கும், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மேலும் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளருடன் சென்றிருந்த ஐந்து கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த நிலையில், ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கொடுத்த புகாரின் பேரில் 20 பேர் மீது வழக்குப்பதிந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, அன்புமணி ஆதரவாளர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பா.ம.க எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம் மற்றும் மயிலம் சிவக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளர்களுடன் காரில் வேகமாக வந்தபோது, கார் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் கார் நிறுத்துவது தொடர்பாகப் பேசியபோது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்களுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அன்புமணி ஆதரவாளர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுவதாக அன்புமணி ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் உட்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கொலை முயற்சி உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.













