Asia Cup 2025: பாகிஸ்தான் வீரர் 2 போட்டிகளில் இடைநீக்கம்; பும்ரா, சூர்யகுமார் மீ...
சேலம்: வனத்துறை குடியிருப்பின் பூட்டை உடைத்து 90 துப்பாக்கித் தோட்டாக்கள் திருட்டு; 4 பேர் கைது
சேலம் மாவட்டம் மேட்டூர் நீதிமன்றம் அருகே வனத்துறைக்குச் சொந்தமான குடியிருப்பு உள்ளது. இதில் வனச்சரகர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் குடியிருக்கின்றனர. மேலும், அங்கு வனத்துறைக்குச் சொந்தமான ஆவணங்கள், துப்பாக்கித் தோட்டாக்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் அந்தக் குடியிருப்பு கதவுகளை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி தோட்டாக்கள், இரும்பு பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து, திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வனத்துறை குடியிருப்புகளில் நுழைந்து 90 துப்பாக்கி தோட்டாக்கள், இரும்பு பொருட்களைத் திருடியது 17 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட கோகுல்ராஜ் (23), பிரவீன் (25) ஆகிய 4 பேரும் எனத் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 4 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், மதுபோதையில் வனத்துறை குடியிருப்பு வளாகத்தில் நுழைந்து வீட்டிற்குள் வைத்திருந்த 87 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 3 காலி துப்பாக்கி தோட்டாக்கள், இரும்பு பொருட்களைத் திருடியதும் தெரியவந்தது. மேலும், இரும்பு பொருட்களை பழைய இரும்பு கடைகளில் விற்றுள்ளனர்.
துப்பாக்கி தோட்டாக்களை எதற்காகத் திருடினார்கள் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, 90 துப்பாக்கி தோட்டாக்களையும் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர், 4 பேரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















