காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு!...
டெல்லி: "காற்று மாசினால் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது" - தலைமை நீதிபதி வருத்தம்!
டெல்லியில் காற்றுமாசு காரணமாக வழக்குகளை காணொலி காட்சி (Virtual) மூலம் விசாரிக்க வலியுறுத்திய இரண்டு வாரங்களுக்குள், வழக்குகளை விசாரிப்பது மட்டுமல்லாமல் டெல்லியில் வசிப்பதே அவதியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த்.
காலையில் நடைபயிற்சி செய்யும்போது தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தில் காற்றுமாசு எதிரொலி
தலைநகரில் தொடர்ந்து 12வது நாளாக காற்றின்தரம் 'மிகவும் மோசமான' நிலையில் நீடித்துவருகிறது. ஏற்கெனவே உச்ச நீதிமன்ற விசாரணைகளை விர்ச்சுவல் முறைக்கு மாற்றுவதற்கு வழக்கறிஞர் சங்கம் ஒப்புக்கொண்டால், நீதிமன்றம் ஒரு பொதுவான விதியை உருவாக்கலாம் என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, 60 வயதுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வருவதைத் தவிர்த்து, காணொலிக் காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்.
நேற்று (நவ. 25), மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தொண்டை வலியால் தன்னால் பேசுவதற்குச் சிரமமாக இருப்பதாக நீதிமன்றத்தில் நகைச்சுவையாகத் தெரிவித்தபோது, அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், "டெல்லியில் இப்போதெல்லாம் எல்லோருக்கும் இருக்கும் பிரச்னைதான் அது" என்று கிண்டலாகக் கூறினார்.
முன்னதாக, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, "நிலைமை மிக மிக தீவிரமானது! ஏன் நீங்கள் அனைவரும் இங்கே நேரில் ஆஜராகிறீர்கள்? எங்களிடம் விர்ச்சுவல் விசாரணை வசதி உள்ளது. தயவுசெய்து அதைப் பயன்படுத்துங்கள். இந்த மாசுபாடு நிரந்தரமாக உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பல வழக்கறிஞர்கள் முகமூடி (Mask) அணிந்திருப்பதைச் சுட்டிக் காட்டியபோது, அதற்கு நீதிபதி நரசிம்மா, "முகமூடிகள் கூடப் போதுமானதாக இருக்காது. அவை உதவாது. இது குறித்துத் தலைமை நீதிபதியிடமும் நாங்கள் விவாதிப்போம்" என்று பதிலளித்தார்.
Delhi 'மிகவும் மோசமான' நிலையில் நீடிக்கும் காற்றின் தரம்!
டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 353 ஆக இன்றும் 'மிகவும் மோசமான' நிலையிலேயே இருந்தது. இந்த நிலை தொடர்ச்சியாக 12-வது நாளாக நீடிக்கிறது.
டெல்லி-க்கான காற்றுத் தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு (Air Quality Early Warning System), நவம்பர் 26 முதல் 28 வரை காற்றுத் தரம் மிகவும் மோசமாகவே இருக்கும் என்று கணித்துள்ளது. அதற்குப் பிந்தைய ஆறு நாட்களுக்கு, AQI மதிப்புகள் 'மிகவும் மோசமானது' (very poor) மற்றும் 'தீவிரம்' (severe) ஆகிய பிரிவுகளுக்கு இடையில் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
காற்றுமாசுக்கு காரணம் என்ன?
இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (IITM) தரவுகளின்படி, டெல்லியின் காற்று மாசுபாட்டிற்குக் காரணமாக இருந்தவற்றில், வாகனங்களின் புகை வெளியேற்றம் செவ்வாய்க்கிழமை அன்று 19.6% பங்களித்தது. இது மற்ற அனைத்து மூலங்களை விடவும் அதிகமாகும். அதேசமயம், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்பட்ட பங்கு 1.5% ஆக இருந்தது. புதன்கிழமைக்கான கணிப்புகளின்படி, வாகனப் புகை வெளியேற்றம் 21.1% ஆக இருக்கும் என்றும், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் பங்கு 1.5% ஆகவே நீடிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், வரவிருக்கும் நாட்களில் காற்றுத் தரத்தின் நிலை சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், AQI 'தீவிரமான' அளவை எட்டும்போது மக்கள் குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


















