கர்ப்பம் டு குழந்தை பிறப்பு: உதவும் தமிழக அரசின் 'சஞ்சீவி மகப்பேறு பெட்டகம்' - ம...
`தந்தை வேலை எனக்குத்தான்.!' - அரசு வேலை, சொத்துக்காக தாயை கூலிப்படை மூலம் கொன்ற சட்டக்கல்லூரி மாணவி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்ப சொத்து மற்றும் அரசு வேலைக்காக 23 வயது சட்டக் கல்லூரி மாணவி ஆயுஷி சர்மா தனது 45 வயது தாய் நீரஜ் சர்மாவை கூலிப்படை வைத்து கொலை செய்த குற்றத்திற்காக போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர் கோர்ட்டில் கிளார்க்காக பணியாற்றி வந்தவர் நீரஜ் சர்மா. இவரது கணவர் இறந்ததால் கருணை அடிப்படையில் அந்த வேலை நீரஜ் சர்மாவிற்கு கிடைத்தது. ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் நீரஜ் சர்மா உயிரிழந்தார். இந்த சம்பவம், ஆரம்பத்தில் ஒரு சாதாரண விபத்து என்றே கருதப்பட்டது.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் விபத்தை ஏற்படுத்திய கார் சுமார் 130 கிமீ வேகத்தில் வேகமாக வந்து மோதியதை கண்டுபிடித்தனர்.

கார் மோதிய வேகத்தில், நீரஜின் உடல் சுமார் 100 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய அந்த ஸ்கார்பியோ காரை போலீசார் தற்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் காரின் டயர் பிரேக் அடித்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. இது தற்செயலான விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க இது போலீஸாருக்கு உதவியது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கு முக்கிய சதிகாரரான ஆயுஷி சர்மா மற்றும் அவரது பெரியப்பா மோகன் ஸ்வரூப் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஆயுஷி சர்மா கொலையான நீரஜ் சர்மாவின் மகள் ஆவார். கூலிப்படையினரை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்த ஆயுஷியின் உறவினர் பால்ராம்இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், ஆயுஷியின் தந்தை நீதிமன்ற எழுத்தராகப் பணியாற்றினார். அவர் இறந்த பிறகு, அவரது அரசு வேலை கருணை அடிப்படையில் குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்பட இருந்தது. ஆயுஷி அந்த பாதுகாப்பான வேலையைத் தான் பெற விரும்பினார், ஆனால் அவரது தாய் நீரஜ் குடும்பத்தை நடத்துவதற்காக அந்த பணியில் சேர்ந்தார். சொத்து தொடர்பாக தாய்க்கும் மகளுக்கும் இடையே கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே கடும் தகராறு நீடித்து வந்தது.
எனவே தாயை கொலை செய்துவிட்டால் அரசு வேலை மற்றும் சொத்து கிடைக்கும் என்று கருதி இந்த கொலையை அரங்கேற்ற, ஆயுஷி தனது பெரியப்பா மோகன் ஸ்வரூப்பைப் பயன்படுத்திக் கொண்டார். மோகன் ஸ்வரூப்பிற்கு ஏற்கனவே நீரஜுடன் சொத்து தகராறு இருந்தது. இதனால் அவர்கள் இருவரும், உறவினர் பால்ராமுடன் சேர்ந்து, பாரத்பூரைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவன் ஹேமந்த் சர்மாவிடம் ₹7 லட்சம் கொடுத்து நீரஜைக் கொல்ல ஒப்பந்தம் செய்தனர். குற்றவாளிகள் 30 நாட்களாக நீரஜின் தினசரி வழக்கமான பாதைகள் மற்றும் நேரங்களைக் துல்லியமாகக் கணித்துத் திட்டமிட்டனர்.
`சொத்து, வேலைக்காக செய்தேன்'
காவல்துறையின் விசாரணையின் போது, அரசு வேலை கிடைக்காததால் தனக்கு ஏற்பட்ட கடுமையான ஆத்திரத்தை ஆயுஷி ஒப்புக்கொண்டார். தனது தந்தையின் நீதிமன்ற வேலை தனக்கே சொந்தமானது என்றும், அதைத் தனது தாய் எடுத்துக் கொண்டதால் அவர் மீது தனக்குத் தீராத கோபம் இருந்ததாகவும் அவர் கூறினார்.
தனது தாயைக் கொன்றுவிட்டால், குடும்பச் சொத்துக்கள் அனைத்தும் தன் கைக்கு வந்துவிடும் என்றும், அதோடு அதே லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) அரசு வேலையைக் கருணை அடிப்படையில் தான் பெற்றுவிடலாம் என்றும் கணக்குப்போட்டு இந்த கொலையை அரங்கேற்றியதாகப் போலீசாரிடம் ஆயுஷி ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


















