Bank account-ல ரூ.1,20,000 உங்ககிட்ட இருந்தா... நீங்க உஷார்?! | #EmergencyFund
`தமிழ்நாடு ஆம்னி பஸ்களுக்கு சிறை' - கோடிக்கணக்கில் அபராதம் விதித்த கேரளா, கர்நாடகா; என்ன பிரச்னை?
தமிழ்நாட்டை சேர்ந்த ஆம்னி பேருந்துகள் கேரளா மற்றும் கர்நாடகாவிற்குள் செல்ல கடந்த சில நாள்களாக சிக்கல்களையும், அபராதத்தையும் சந்தித்து வருகின்றன.
கடந்த 7-ம் தேதி (வெள்ளிக்கிழமை), தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சென்ற 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சிறை பிடிக்கப்பட்டுள்ளன.
அவைகளை விடுவிக்க மொத்த பேருந்துகளுக்கும் அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் அபராதம் செலுத்தி உள்ளனர். இதில் சாலை வரி ப்ளஸ் அபராதம் இரண்டுமே அடக்கம்.

இதுபோக, பேருந்துகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பயணிகள் இறக்கிவிடப்பட்டிருக்கின்றனர். இதனால், அவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ரீஃபண்ட் கேட்டு பிரச்னைகளும் ஆகியுள்ளது.
இது கேரளாவில் மட்டுமல்ல... இதே பிரச்னையைக் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டு ஆம்னி பேருந்துகள் கர்நாடகாவிலும் சந்தித்து வருகின்றன.
கடந்த வாரத்தில், கர்நாடகாவில் 60-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு ஆம்னி பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்துகளுக்கும் ரூ.2.2 லட்சம் வரை என மொத்தம் சுமார் ரூ.1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்தப் பிரச்னை? இதற்கு தீர்வு என்ன? என்பது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் டாக்டர் அன்பழகன் விளக்குகிறார்
"2021-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய 'ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்'டின் படி, தமிழ்நாடு அரசு பிற மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறது.
இதனால், தமிழ்நாட்டிற்குள் வரும் பிற மாநில ஆம்னி பேருந்துகள் தமிழ்நாடு அரசுக்கு சாலை வரியைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.
ஆனால், இந்த நடைமுறையை கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் பின்பற்றுவதில்லை. அவர்கள் பிற மாநில பேருந்துகளுக்கு சாலை வரிகளை வசூலிப்பதில்லை.

இப்போது என்ன பிரச்னை?
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ரூ.90,000 கட்டி ஆல் இந்தியா பெர்மிட் வாங்குவது பொதுவான நடைமுறை. இந்தப் பெர்மிட்டை வைத்துக்கொண்டு தான், தமிழ்நாட்டு ஆம்னி பேருந்துகள் இதுவரை கேரளா, கர்நாடகாவிற்கு சென்று வந்தது.
தமிழ்நாட்டு பேருந்துகள் பெர்மிட் இருப்பதால் அந்த மாநிலங்களுக்கு செல்லும்போது எந்த வரியையும் செலுத்துவதில்லை. ஆனால், அந்த மாநிலங்களின் ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் வரும்போது வரியைக் கட்டுகின்றனர்.
இது அந்த மாநிலங்களின் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுக்கு பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால், அவர்கள் அவர்களது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இதனையடுத்து தான், அந்த மாநிலங்கள் தமிழ்நாடு ஆம்னி பேருந்துகளை சிறைப்பிடிக்கவும், அபராதம் விதிக்கவும் தொடங்கியுள்ளது.
என்ன தீர்வு காண வேண்டும்?
தமிழ்நாடு அரசு சாலை வரி வசூலிப்பதை நிறுத்திவிட்டால், அந்த மாநிலங்களும் தமிழ்நாட்டு ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்காது. சிறைப்பிடிக்கவும் செய்யாது. இதை அவர்களே கூறியிருக்கிறார்கள்.
இதனால், இந்த நடைமுறையை கைவிடுவதற்கான முன்னெடுப்பை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும்.
இந்தப் பிரச்னையில் தமிழ்நாடு அரசு இன்று மாலை 5 மணிக்குள் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால், வெளி மாநிலங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் செல்லாது.
பயணிகளுக்கும் பிரச்னை தான்
நாங்கள் போக்குவரத்தை நிறுத்துவதால், எங்களுக்கு மட்டும் நஷ்டமில்லை. ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பெரிய பிரச்னை தான்.
இப்போது ஐயப்பன் சீசன். அடுத்தடுத்து விடுமுறைகளும் வருகிறது. இந்த நேரத்தில், நாங்கள் ஆம்னி பேருந்து போக்குவரத்தை நிறுத்தினால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அவர்கள் தமிழ்நாடு எல்லை வரை எங்களது பேருந்தில் சென்றுவிட்டு, அதன் பிறகு, அவர்கள் வேறு பேருந்தில் பயணிக்க வேண்டும். இது அவர்களுக்கு வீண் அலைச்சல்.
இப்போது வெளி மாநிலங்களுக்கு பயணிக்க தமிழ்நாடு ஆம்னி பேருந்துகளில் புக் செய்திருக்கும் பயணிகளுக்கு இதே நடைமுறை தான்.
இந்தப் பிரச்னைகளை தவிர்க்க, தமிழ்நாடு அரசு சீக்கிரம் தீர்வு காண வேண்டும்".















