காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டா...
"தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?"- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!
"தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை" என்றும் "திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன" என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் திமுக அமைச்சர் ரகுபதி, "திராவிடம் என்பது கற்பனை என்றால், நம் தேசிய கீதத்தில் திராவிடம் இடம்பெற்றிருக்கிறது என்பது ஆளுநர் ரவிக்கு தெரியாதா?
ஒடிசாவில் தேர்தல் வந்தபோது, ’ஒடிசாவை ஒரு தமிழன் ஆள வேண்டுமா? ஒடிசாவின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது’ என தமிழர்களை திருடர்கள் என்பது போல் குற்றச்சாட்டை முன்வைத்து அமித் ஷாவும், மோடியும் பிரசாரம் செய்தனர். அதேபோல், பீகார் தேர்தல் பிரசாரத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் பீகாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டனர்.

தமிழ்நாட்டில் பிறமொழி பேசும் பிற மாநிலத்தவர்கள், பீகார் மக்கள் யாரும் அச்சுறுத்தப்படவில்லை. ஆளுநர்தான் தொடர்ந்து அவதூறு பேசிவருகிறார். ஆளுநரும், ஒன்றிய பாஜக-வும், எங்குச் சென்றாலும், தமிழருக்கு எதிராக பேசுவதை கொள்கையாக கொண்டுள்ளனர்.
மீனவர்களுக்காக நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என ஆளுநர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் போது, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, ஆளுநரோ ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பார்களா?
தமிழ்நாடு தனித்து நிற்கிறது என ஆளுநர் சொல்லியுள்ளார். தமிழ்நாட்டில் அவதூறு பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர் ஆளுநர் ஆர்.என். ரவி. தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை என தவறான தகவலை பரப்பி வருகிறார்.
தனித்தமிழ்நாடு கோரிக்கையை அண்ணா முன்வைத்தார். ஆனால், இந்தியாவுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அது கைவிடப்பட்டு, 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவுடன் சேர்ந்து ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியிருக்கிறது தமிழ்நாடு. நாங்கள் இந்தியாவுடன் தான் இருக்கிறோம்

ஆர்.என்.ரவி பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வேலைக்காக சேர்ந்திருக்க வேண்டியவர். ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநராக வந்திருக்கிறார். இங்கிருந்து கொண்டு தொடர்ந்து அவதூறுகளையும், தமிழ்நாட்டுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.
இனி ஆளுநர் மசோதாக்களை கால தாமதப்படுத்தினால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம்" என்று பேசியிருக்கிறார் ரகுபதி.


















