ஜடாயு மலையில் ஒரு திக்திக் அனுபவம் – ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த வர்கலா
தருமபுரி: போராட்டத்தில் காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் கைது; பரபரப்பாக்கிய வீடியோ
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மண்டி அருகில் கடந்த வாரம் `மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த பாரை உடனடியாக மூடக்கோரி த.வெ.க சார்பாக பாலக்கோடு - தருமபுரி சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, த.வெ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் அந்த பாருக்குள் புகுந்து முற்றுகையிட முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், த.வெ.க-வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீஸாருக்கும், த.வெ.க-வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தள்ளுமுள்ளுவின்போது, மகேந்திரமங்கலம் போலீஸ் ஏட்டு அருள் என்பவரின் கையை த.வெ.க தொண்டர் ஒருவர் வெறித்தனமாக `நறுக்’ என கடித்தார். நல்வாய்ப்பாக, ஏட்டு அருளுக்கு காயம் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து, த.வெ.க-வினர் பார் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 16 பெண்கள் உட்பட 105 பேரை கைது செய்த போலீஸார், அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.
இதனிடையே, போராட்டத்தின்போது போலீஸ் ஏட்டுவின் கையை த.வெ.க தொண்டர் கடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் படு வைரலானதால், `அந்த தொண்டர் யார்?’ என கண்டுபிடிக்க போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
அதில், ஜெமினி எனத் தெரியவந்தது. அவரை தேடிப்பிடித்து கைது செய்த போலீஸார், போராட்டத்தின்போது தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட த.வெ.க-வைச் சேர்ந்த மேலும் 5 தொண்டர்களையும் கைது செய்திருக்கின்றனர்.















