சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்த கணவன் - ஆதரவின்றி தவிக்கும...
'தவெக-வின் கொள்கை குறித்து அதிகம் பேசினார்' - TVK-வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்
எம்.எஸ்.எம். ஆனந்தன், அ.தி.மு.க- வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். விவசாயம் மற்றும் வணிக குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், 2011-ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தரப்பில் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, 2021-ம் ஆண்டு தேர்தலில் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் வென்றார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சராகவும், பின்னர் வனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
அ.தி.மு.க- வில் நீண்ட காலமாகப் பயணித்த இவர், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளையும் வகித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு த.வெ.க வேட்பாளரிடம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில்தான் தற்போது அ.தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க இணைந்துள்ளார்.

கட்சி மாறிய பின்னணி குறித்து தெரிவித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், "கடந்த சில தேர்தல்களாக அ.தி.மு.க தொடர் தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருவதால் அதிருப்தி மனநிலையில் இருந்தார்.
திருப்பூர் நகர் மற்றும் பல்லடம் பகுதிகளில் செல்வாக்கு கொண்ட இவரின் அரசியல் எதிர்காலம் மட்டுமின்றி இவரை நம்பியிருக்கும் தீவிர ஆதரவாளர்களின் செல்வாக்கையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவே ஆளுங்கட்சியான த.வெ.க தேவை எனக் கூறி வந்தார்.
கூட்டணிக் கட்சிகளுடனும், புதிதாக இணைபவர்களுடனும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் த.வெ.க-வின் கொள்கை குறித்தும் அதிகம் பேசி வந்தார். அரசியல் ரீதியாக மீண்டும் பெரிய பொறுப்புகளைப் பெற இது ஒரு நல்வாய்ப்பாக கருதி இணைந்துள்ளார்" என்றனர்.













