சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்த கணவன் - ஆதரவின்றி தவிக்கும...
"இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறதா?" - லண்டனில் தலைமை நீதிபதியிடம் கேள்வி!
லண்டனில் உள்ள பிர்க்பெக் (Birkbeck) கல்லூரியில், கடந்த ஜூன் 4-ம் தேதி இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், 'செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். உரைக்குப் பிந்தைய கேள்வி-பதில் நேரத்தின் போது, அங்கிருந்த சிலர் இந்தியாவில் மாற்றுக் கருத்துடையவர்கள் ஒடுக்கப்படுவதாகக் கூறி கேள்விகளை எழுப்பினர்.
அத்துடன், தலைமை நீதிபதி சூர்ய காந்த் அண்மையில் தெரிவித்ததாகக் கூறப்படும் 'கரப்பான் பூச்சி' கருத்து குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். எனினும், இந்தக் கேள்விகள் அன்றைய நிகழ்ச்சித் தலைப்பிற்கு அப்பாற்பட்டவை என்று கூறி, கேள்வி எழுப்பியவர்களை ஒருங்கிணைப்பாளர்கள் தடுத்தனர்.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அந்த வீடியோவில், பார்வையாளர்கள் வரிசையில் இருந்த பெண் ஒருவர், ``செயற்கை நுண்ணறிவு சூழலில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து தலைமை நீதிபதி சில முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். ஆனால், இந்தியாவில் மாற்றுத் திறனாய்வாளர்கள் மற்றும் எதிர்க்குரல்களுக்கு எதிரான விரோதப் போக்கு அதிகரித்து வருவதாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்ட வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்" என்று கூறிக்கொண்டிருந்த போதே, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தலையிட்டு அவரைப் பேசவிடாமல் தடுத்தார்.
இதேப்போல கரப்பான் பூச்சி குறித்த கேள்வியும் இடைநிறுத்தப்பட்டது. இதனால் அந்தக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "நிகழ்ச்சியில் சில பார்வையாளர்கள் நடந்துகொண்ட விதம் நாகரீகமற்றது. இத்தகைய செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் மரியாதையான விவாதங்களுக்கு எதிரானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கருத்து வேறுபாடுகளை எப்போதும் நாகரீகமான மற்றும் மரியாதையான முறையில்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.












