சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்த கணவன் - ஆதரவின்றி தவிக்கும...
தேனி: மலை கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து சேவை; ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சி அமைந்துள்ளது. கொட்டக்குடி, குரங்கணி, முதுவார்குடி, சென்டிரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளன.
போடியில் இருந்து குரங்கணி, செண்டிரல் ஸ்டேஷன், கொட்டக்குடி கிராமங்களுக்கு தார்ச்சாலை வசதி அமைக்கபட்டுள்ளது. ஆனால் குரங்கணி வரை மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
குரங்கணிக்கு 1 கி.மீ. தூரத்துக்கு முன்பாக கொட்டக்குடி சாலை சந்திப்பு உள்ளது. அங்கிருந்து 1½ கி.மீ. தொலைவில் உள்ள கொட்டக்குடிக்குச் செல்லும் சாலையில் பஸ்கள் இயக்கப்படுவது கிடையாது.
இதனால் இந்தக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் ஜீப் அல்லது நடந்துதான் செல்ல வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நடந்தும், ஆட்டோக்கள் அல்லது இருசக்கர வாகனங்களில் கொட்டக்குடி சாலை சந்திப்பு வரை வந்து அங்கிருந்து பஸ்களில் சென்று வருகின்றனர்.

கொட்டக்குடிக்குச் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் அங்கு பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. தங்கள் கிராமத்துக்கு பஸ் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த வாரம் தேனி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று கொண்ட வைத்திநாதன், கொட்டக்குடிக்கு அரசு பஸ் சேவை தொடங்குவது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

அதன் படி போடியில் இருந்து குரங்கணிக்கு காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்தை கொட்டக்குடி சாலையில் இயக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து வேறு அரசுப் பேருந்தை கொட்டக்குடிக்கு நேற்று சோதனை முறையில், அதிகாரிகள் இயக்கிப் பார்த்தனர்.
அந்தச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமையவே, நேற்று மாலை முதல் கொட்டக்குடி கிராமத்திற்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த அரசுப் பேருந்து போடியில் இருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் கொட்டக்குடிக்கு இயக்கப்படவுள்ளது.
கொட்டக்குடி கிராமத்துக்கு முதல் முறையாக பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
















