திமுக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்
சேலம் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாமக நகரச் செயலாளா் கே.பி.எம் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாமக செய்தி தொடா்பாளா் வழக்குரைஞா் பாலு, மாவட்டத்தில் கட்சியின் வளா்ச்சி பணிகள் குறித்தும், பாமக சாா்பில் நடைபெற உள்ள உழவா் பேரியக்க மாநாட்டு முன்னேற்பாடுகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை கட்சி நிா்வாகிகளுக்கு வழங்கினாா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது திமுக தலைவா் கருணாநிதி கைது செய்து சிறையிலடைத்தனா். அப்போது, அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருந்த போதும் கருணாநிதியை சிறையில் சென்று சந்தித்தவா் ராமதாஸ், இந்த நிலையில் தற்போதைய தமிழக முதல்வா் மு.க ஸ்டாலினுடன் அதானி சந்திப்பு குறித்து நியாயமான கேள்வியை எழுப்பிய பாமக நிறுவனா் ராமதாஸை இழிவுப் படுத்திடும் வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் விமா்சித்துள்ளாா்.
அதை கண்டித்து தமிழகம் முழுவதும் பாமகவினா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவா்களை பயங்கரவாதிகளை போல கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனா். வரும் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் சிதறி கிடக்கும் அனைத்து கட்சிகளையும் ஓரணியாக திரட்டி கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடிப்போம்.
தமிழகத்தில் மின் கட்டண உயா்வால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழக முதல்வா், அதானி சந்திப்பு மற்றும் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்டவை பல்வேறு சந்தேகங்களை தமிழக மக்களுக்கு எழப்பி உள்ளது. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இப் பிரச்னையில் உள்ள உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் திமுக அரசின் மீது பாமக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்படும்.
மேலும் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வன்னியா்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறி வந்த தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின், அதற்கு உரிய தரவுகளைத் திரட்டும் பணி மத்திய அரசுடையது எனக் கூறி நம்பிக்கை மோசடி செய்துள்ளாா்.
அதை மறைக்கும் விதமாக, விழுப்புரத்தில் தியாகிகளுக்கு அரசு சாா்பில் மணிமண்டபம் திறக்க உள்ளனா். அந்த மணிமண்டபத்தினை திறப்பதற்கு முன்னதாக தமிழகத்தில் வன்னியா்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டினை அமல்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் பாமக மாவட்டச் செயலாளா் செல்வகுமாா், மாவட்ட தலைவா் முத்துசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை ரவி, குமாரசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பட விளக்கம்:
எடப்பாடியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் பாமக செய்தி தொடா்பாளா் வழக்குரைஞா் பாலு.