திருச்சுழி: காட்டுப்பன்றிகளைத் தடுக்க மின்வேலி; எதிர்பாராமல் சிக்கிய விவசாயி பலி; என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது விவசாய தோட்டத்திற்கு முன்பு தங்கபாண்டியன் என்பவரது தோட்டம் உள்ளது. தங்கபாண்டியன் விவசாய தோட்டத்தைத் தாண்டிதான் மாரிசாமியின் தோட்டத்திற்குச் செல்ல முடியும்.
தங்கபாண்டியன் தனது தோட்டத்தில் காட்டுப் பன்றிகள் புகுந்து விடாமல் இருப்பதற்காகச் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாரிசாமி தனது தோட்டத்திற்கு உரம் போடுவதற்காக தங்கபாண்டியன் தோட்டத்தைத் தாண்டி சென்றுள்ளார். அப்போது மாரிசாமியின் கைலி பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உள்ளது.

வேலியில் சிக்கிய கைலியை எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மாரிச்சாமி மின் வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி துடிதுடித்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பரளச்சி காவல் நிலைய போலீசார் மாரிச்சாமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்வேலியில் சிக்கி உயிரிழப்புகள் நடந்து வருகின்றன.
இதனைத் தடுக்க கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார் குறிப்பிடத்தக்கது.



















