தொடர்ந்து சொத்துகளைப் பெருக்கும் இந்தியாவின் 1% பணக்காரர்கள்! - G20 அறிக்கை கூறு...
"தெலுங்கு மக்களுக்கு NTK எதிரியல்ல; 12 தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம்" - சொல்கிறார் கார்த்திகைச்செல்வன்
'சாதி பார்த்து விழும் வாக்குகள் எனக்கு தீட்டு' எனப் பேசிவந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களையே பெரும்பாலும் சாதி பார்த்துதான் தேர்வு செய்கிறார் என முணுமுணுக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள், இச்சூழலில் அக்கட்சியின் தமிழ்மீட்சிப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகைச் செல்வனை தொடர்பு கொண்டு பேசினோம்.
"தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சாதிப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவதாக பேசிவிட்டு, இப்போதும் சீமானும் சாதி பார்த்துதான் வேட்பாளார்களை நிறுத்துவதாக சொல்கிறார்களே?"

"சமூக நீதி என திராவிடக் கட்சிகள் பேசிவரும்போது அதற்கு செயல்வடிவம் கொடுத்துவருவது நாம் தமிழர் கட்சிதான். எத்தனையோ சமூகங்களுக்கு அரசியல் பிரிதிநிதித்துவமே இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். அதுபோன்ற சிக்கல்களை களைவதற்கு சாதிய அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்கிறோம். குறவர், நாவிதர், வன்னார் உள்ளிட்ட சமூகங்களில் பெரியளவில் வாக்காளர்கள் இல்லையென புறக்கணித்துவருகிறார்கள். ஆனால் நா.த.க அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. பட்டியல் சமூக மக்கள் அதிகளவில் வாழ்ந்தாலும் பொதுத் தொகுதி என்பதனாலேயே திராவிடக் கட்சிகள் சீட் தர மறுக்கிறார்கள். அதையும் சரிசெய்து பொதுத் தொகுதிகளில் ஆதித்தமிழர்களை நிறுத்துகிறோம். அப்படி நிறுத்தும்போதும்.. இவர் இந்த சமூகத்தை சேர்ந்த வேட்பாளர் என்பதைகூட விளம்பரப்படுத்துவதில்லை.
அதேசமயம், இந்த சமூகத்தை நிறுத்தினால் வெற்றிபெற்றுவிடலாம் என அரசியலை உடைப்பதுதான் எங்கள் குறிக்கோள். உதாரணமாக, குயவர் சமூகத்தை சேர்ந்தவரை சென்னையில் நிறுத்தினோம், அவர் குயவர் என்றே மக்களுக்கு தெரியாது. அவரது சாதியை தேடாமல் பல்லாயிரம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. "

"தெலுங்கு, கன்னட மக்களுக்கும் சீட் கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள்... அதன் பின்னணி என்ன?"
"தமிழகர்கள்மீது பிறமொழியாளர்கள் ஆதிக்கம் செலுத்துவதைதான் எதிர்த்தோமே தவிர தெலுங்கர்களுக்கோ.. பிறமொழியாளர்களுக்கோ நா.த.க எதிரானவர்கள் அல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 22 பிறமொழியாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறோம். அதில் 12 தொகுதிகளில் தெலுங்கர்கள். ஆக இங்கு வாழும் சகோதரர்களை நாங்கள் எங்குமே எதிர்க்கவில்லையே.. அவர்களுக்கான பிரதிநிதித்துவ அடிப்படையிலே சீட் தருகிறோம். அதேசமயம் பிரமாண சமூகத்தை சார்ந்தவர்கள் 3 விழுக்காடு மட்டும்தான் இருப்பதாக ஆங்கிலேயர்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்துப் பேசுகிறார்கள் திராவிடக் கட்சியினர். ஆனால் அனைத்து சமூகங்களுக்கு வாய்பளிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சீட் கொடுக்கிறோம்."

"சமூக பிரதிநிதித்துவத்தைப் பேசும் நாம் தமிழர் கட்சி.. அருந்திய சமூக மக்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதாக தெரிகிறதே!"
"மிகத் தவறான செய்தி. அருந்தியர் சமூக மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை முறையாக கொடுத்து வருகிறோம். அந்த சமூகத்தை சார்ந்த சில லெட்டர் பேட் அமைப்புகளை எங்களை எதிர்ப்பதால், அந்த சமூகமே எங்களுக்கு எதிரானது என்ற கருத்துருக்கம் நிலவுகிறது. அது உண்மையில்லை"


















