வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலிய...
'தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?' - சீறும் மா.சு; கொதிக்கும் செவிலியர்கள்!
தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடுமையாக நடந்துகொள்வதாகவும் 'வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?' என தடாலடியாக பேசுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

போராட்டம்... கைது!
கடந்த 18 ஆம் தேதி பணி நிரந்தரம் வேண்டியும் காலிப்பணியிடங்களை அதிகரிக்கக் கோரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னையின் சிவானந்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் கலைந்து செல்ல மறுத்த அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்திருந்தனர்.
போராடியவர்களை பேருந்துகளில் ஏற்று அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இறக்கிவிட்டனர். பேருந்து நிலையத்தில் கூடிய செவிலியர்கள் நள்ளிரவில் அங்கேயே போராட தொடங்கினர். நேற்று அதிகாலையில் அவர்களை கைது செய்த காவல்துறையினர் அருகிலுள்ள மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்திருந்தனர்.

போராடும் செவிலியர் சங்கத்தின் பிரதிநிதிகளை அமைச்சர் மா.சுவை சந்திக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்த அந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தை தொடர்ந்த செவிலியர்களை கைது செய்து இப்போது ஊரப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக உறுதியாகவும் கூறுகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுவுடனான பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? போராட்டம் தொடர்வது ஏன் என்பதை அறிய அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் இருந்த நபர்களிடம் பேச்சுக்கொடுத்தோம்.
``அவர் எங்களின் கோரிக்கைகளை கேட்கவே தயாராக இல்லை. பேச்சுவார்த்தை நடந்த 20 நிமிடமும் எங்கள் மீது கோபத்தோடு மட்டுமே பேசினார்.

'தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா? நீங்க சொல்ற புள்ளிவிவரங்களை எல்லாம் ஏத்துக்க முடியாது. இது அரசோட கொள்கை முடிவு அவ்வளவுதான். நானே பார்க்குறேன் நிறைய இடங்கள்ல தேவைக்கும் அதிகமா வேலையே செய்யாம ஆட்கள் இருக்காங்க. தேர்தல் நேரத்துல போராட்டம் பண்ணி நெருக்கடி கொடுக்க பார்க்குறீங்களா? என்ன பண்ணுவீங்க? போராடுவிங்க....போராடிக்கோங்க' என தடாலடியாக கூறுகிறார். எங்களின் பிரச்னைகளை காது கொடுத்தே கேட்க தயாராக இல்லாதவரிடம் என்ன பேசுவது?’ என விரக்தியாக கூறுகின்றனர்.
இதுதொடர்பாக போராடும் செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபினிடம் பேசினேன். 'மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக வருடா வருடம் தேர்வு நடத்தி ஆட்களை எடுக்க வேண்டும். இவர்களை அதை செய்வதே இல்லை. இந்த அரசாங்கம் வந்த பிறகு செவிலியர் பணியில் காலிப்பணியிடங்கள் உருவாக்கப்படவே இல்லை. ஆனால், மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது.

9 நோயாளிகளை கொண்ட ஒரு பொது வார்டுக்கு ஒரு நாளைக்கு 3 செவிலியர்கள் தேவை. ஆனால், நம்மிடம் 0.48 என்ற வீதத்தில்தான் இருக்கிறார்கள். நிறைய தேவை இருந்தும் இவர்கள் காலிப்பணியிடங்களை உருவாக்கவே இல்லை. மாறாக, மருத்துவத்துறையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' போன்ற புதிய புதிய திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். இருப்பவர்களுக்ககு பணிச்சுமை கூடிக்கொண்டே இருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு செவிலியர்களை நியமிப்பதாக அரசாணை வெளியிட்டிருந்தார்கள்.
கொரோனாவால் அதை நிறுத்தி வைத்திருந்தார்கள். இந்த திமுக அரசு வந்தவுடன் அந்தப் பணிகளை மட்டும் நிரப்பினார்கள். அதை செய்துவிட்டு, 'நாங்கள்தான் பணி கொடுத்துவிட்டோமே என்கிறார்கள்'. அது எப்படி முறையாகும்? இவர்களின் ஆட்சியில் எந்த காலிப்பணியிடமும் புதிதாக அறிவிக்கப்படவே இல்லையே.

இப்போது பணி நிரந்தரம் வேண்டி தமிழகம் முழுவதும் 8000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். காலிப்பணியிடங்கள் வரும் போது எங்களை இட்டு நிரப்புவோம் என்கிறார்கள். ஆனால், ஒரு முறைக்கு அதிகபட்சமாக 150 காலிப்பணியிடங்கள்தான் வருகிறது. மற்றவர்களெல்லாம் நீண்ட கால காத்திருப்பில் மட்டுமே இருக்கிறோம். போராடும் எங்களிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தாமல் காவல்துறையை வைத்து அடக்கப் பார்க்கிறார்கள். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் ஓயமாட்டோம்' என்கிறார் உறுதியாக.

அமைச்சர் மா.சு என்ன சொல்கிறார்?
செவிலியர்கள் போராட்டம் குறித்தும் பேச்சுவார்த்தையில் கடுமையாக நடந்துகொண்டதாக எழும் குற்றச்சாட்டு குறித்தும் அமைச்சர் மா.சுவிடம் பேசினேன். 'அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கல்லூரிகளாக இருந்தாலும், எங்களின் ஆட்சியில்தான் அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் கட்டப்பட்டு 3,614 பேர் பணியமர்த்தப்பட்டனர். கூடிய விரைவில் சீனியாரிட்டி அடிப்படையில் 160 பேருக்கு மேல் பணி நிரந்தரம் செய்யப்போகிறோம். போராடுவது அவர்களின் உரிமை. ஆனால், முதலில் அவர்கள் என்னை தொடர்புகொண்டு உட்காந்து பேசியிருக்க வேண்டும்.

நேரடியாக தெருவில் அமர்ந்து போராடுவது என்ன நியாயம்? ஒரு பணியிடத்துக்கு 20 பேர் என அளவுக்கு அதிகமாகத்தான் ஆட்கள் இருக்கிறார்கள். இவர்களாக எக்கச்சக்க காலிப்பணியிடங்கள் இருப்பதாக கற்பனை செய்துகொண்டால் என்ன செய்வது? தேர்தல் நேரத்தில் நெருக்கடி கொடுக்க யாருடைய தூண்டுதலின் பேரிலோ போராடுகிறார்கள்' என்கிறார் அமைச்சர் மா.சு!














