"பாஜக-வின் ஆசியோடு அதிமுக-விடம் திமுக பேசிக்கொண்டிருக்கிறது" - மாணிக்கம் தாகூர்
நடப்பு சாம்பியன் RCB-க்கு மறுக்கப்பட்ட உரிமை; அகமதாபாத்துக்கு மாறும் ஃபைனல்! - பினன்ணி என்ன?
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் (RCB) சொந்த மைதானத்தில் நடைபெறுவதற்குப் பதிலாக அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசிடமிருந்து அதிக அளவிலான இலவச டிக்கெட்டுகள் கோரப்பட்டதாலும், பெங்களூரு மைதானத்தின் குறைந்த கொள்ளளவு காரணமாகவும் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஐபிஎல் தலைவர் அருண் தூமல் வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளார்.
இந்த அதிரடி மாற்றத்தால், மே 31 அன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டி, 1.30 லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் விதிகளின்படி, முந்தைய தொடரில் கோப்பையை வென்ற அணியின் சொந்த ஊரில்தான் இறுதிப்போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில்தான் இந்தாண்டு இறுதிப்போட்டி நடந்திருக்க வேண்டும். ஆனால், கர்நாடக மாநில அரசு அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ), மேலவை உறுப்பினர்கள் (எம்.எல்.சி) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி) ஆகியோருக்கு தலா மூன்று இலவச டிக்கெட்டுகளை வழங்குமாறு கோரியுள்ளது. சுமார் 40,000 பேர் மட்டுமே அமரக்கூடிய பெங்களூரு மைதானத்தில் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது "சாத்தியமற்றது" என்று பிசிசிஐ கருதுகிறது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அருண் தூமல், "கோட்பாட்டளவில் இறுதிப்போட்டி பெங்களூருவில்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஏற்பட்ட சில சவால்களையும் நாங்கள் கருத்தில் கொண்டோம். மாநில அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்க வேண்டியுள்ளது. அதே சமயம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் (KSCA) அதன் உறுப்பினர்களுக்கு சில கடமைகள் உள்ளன," என்றார்.
மேலும், "மைதானத்தின் கொள்ளளவு குறைவாக இருப்பதால், லீக் போட்டிகளுக்கே குறைவான டிக்கெட்டுகள்தான் விற்பனைக்கு வந்தன. இறுதிப்போட்டிக்கு உலகெங்கிலுமிருந்து ரசிகர்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு அதிக டிக்கெட்டுகளை ஒதுக்க வேண்டியுள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறுதிப்போட்டி நடைபெறும் அதே காலகட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதில் கலந்துகொள்ள பல சர்வதேச உறுப்பினர்கள் வருவார்கள் என்றும் தூமல் சுட்டிக்காட்டினார்.
"ரசிகர்கள் மற்றும் சர்வதேச விருந்தினர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, அகமதாபாத் போன்ற ஒரு பெரிய மைதானம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம்," என்று அவர் கூறினார். அகமதாபாத் மைதானத்திற்கே தொடர்ந்து முக்கிய போட்டிகள் ஒதுக்கப்படுவதாக எழும் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, "அப்படியெல்லாம் இல்லை. பெங்களூருவில் உள்ள சிக்கல்களால் அங்கு போட்டியை நடத்துவது இயலாத காரியமாகிவிட்டது. ஒருவேளை கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) வென்றிருந்தால், நாங்கள் நிச்சயமாக இறுதிப்போட்டியை சென்னையில்தான் நடத்தியிருப்போம்," என அவர் பதிலளித்தார்.

பிசிசிஐயின் இந்த முடிவால், இறுதிப்போட்டியை நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிரிக்கெட் காரணங்களைத் தாண்டி, நிர்வாக மற்றும் அரசியல் ரீதியான காரணங்களுக்காக ஐபிஎல் இறுதிப்போட்டியின் இடம் மாற்றப்படுவது இது முதல் முறையல்ல என்றாலும், நடப்பு சாம்பியனுக்கு கிடைக்க வேண்டிய ஒரு கௌரவம் மறுக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


















