மின்னணுப் பெட்டி முதல் மக்கள் மன்றம் வரை: தேர்தல் அனுபவங்கள்
``நிதிஷ் கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் நான் அரசியலை விட்டே போகிறேன்" - பிரசாந்த் கிஷோர்
பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் (முதற்கட்டம் நவ., 6, இரண்டாம் கட்டம் நவ., 11) முடிந்துவிட்ட நிலையில் நாளை காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கவிருக்கிறது.
243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க-வும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களிலும், மறுமுனையில் மகாபந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இந்த இரு கூட்டணிக்கு மத்தியில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 238 இடங்களில் தனித்துக் களமிறங்கியிருக்கிறது.
இவ்வாறிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 140 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என்றும், மகாபந்தன் கூட்டணி சுமார் 90 இடங்கள் பெரும் என்றும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன.
மேலும், தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று களமிறங்கிய ஜன் சுராஜ் கட்சி ஓரிரு இடங்களில் வெல்லக்கூடும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.
நியூஸ் 18 (இந்தி) ஊடகத்துடனான நேர்காணலில், கருத்துக்கணிப்பு முடிவுள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் நெறியாளர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பிரசாந்த் கிஷோர், ``தேர்தல் முடிவுகளில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். அதேபோல், ஜன் சுராஜ் வெற்றி பெற்றிருந்தாலும் என்னிடம் கூறுங்கள். இது நடக்கவில்லையென்றால் அரசியலை விட்டே நான் விளக்குவேன்.
இது எப்படி நடக்கும் என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது.
இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதில் விளக்குவதற்கு ஒன்றுமில்லை. இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.















