KH x RK: ரஜினி கமலின் `12-07' சென்டிமென்ட்; நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜின...
பகலில் சலூன் கடை ஓனர்; இரவில் போதைப்பொருள் கேங்க் லீடர்! - பிஷ்னோய் கேங்கின் லேடி டான் நேகா
குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருந்து கொண்டே டெல்லியில் இருக்கும் தனது கூட்டத்தை இயக்கி வருகிறான். பஞ்சாப், டெல்லி, ஹரியானாவில் அவனது கூட்டத்தினர் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்கள் மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள், ஆயுதம் கடத்தல் போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர்.
இக்கும்பல்தான் பஞ்சாப்பில் பாடகர் சிது மூஸ்வாலா, மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் ஆகியோரை சுட்டுக்கொலை செய்தது. லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் சில பெண்களும் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதுவும் நேகா (எ) குஷ்னுமா அன்சாரி என்ற பெண் பிஷ்னோய் கூட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை நிர்வகிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேகா குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்தனர்.

அப்பெண் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. அழகு நிலையத்தை பெயருக்கு நடத்திக்கொண்டு முழுக்க போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் பிரதானமாக ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து நேகாவின் நடவடிக்கையை போலீஸார் கண்காணித்து வந்தனர். நேகா டெல்லியின் மஹிபல்பூர் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி ரெய்டு நடத்தி நேகாவை கைது செய்தனர். அவர் கைது செய்யப்படும்போது அவரிடம் கணிசமான அளவு போதைப்பொருள் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நேகாவுடன் அவரது பார்ட்னர் பாபி கபூதர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். நேகாவும், பாபியும் கடந்த 7 ஆண்டுகளாக சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளனர். இதில் பாபி, லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்திற்கு தேவையான ஆயுதங்களை வாங்கும் வேலையில் ஈடுபட்டு வந்தான். லாரன்ஸ் கூட்டத்தில் போதைப்பொருள் பிரிவை நேகா கவனித்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாபிக்கும் பிரபல ஆயுத சப்ளை வியாபாரி சலீம் பிஷ்டோல் என்பவனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சலீமிடம் வாங்கிய ஆயுதங்கள் சித்து மூஸ்வாலா துப்பாக்கிச் சூடு, நடிகை திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு, டெல்லியில் நாதிர் ஷா கொலை மற்றும் சீலாம்பூர் இரட்டைக் கொலைகள் உள்ளிட்ட பல உயர்மட்ட குற்றங்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதோடு தற்போது கைது செய்யப்பட்டுள்ள பாபி தான் பஞ்சாப் பாடகரின் நடமாட்டம் குறித்து கண்காணித்து கொலையாளிகளுக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்தார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். பாபி பல மாதங்களாக தனது அடையாளம் மற்றும் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு போலீஸார் கண்ணில் படாமல் இருந்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.






















