'ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம்' ஊடகவியலாளர்களின் பார்வையில்...
பங்குச் சந்தை ஃபண்டுகளைவிட தங்கத்தை வாங்கிக் குவித்த மக்கள்! - தங்கம் இனியும் லாபம் தருமா?
ஆங்கிலத்தில் 'Euphoria' என்று ஒரு வார்த்தை இருக்கிறது. அதீத உற்சாகம் என்று இதனைத் தமிழ்ப்படுத்தலாம். இந்த அதீதமான உற்சாக நிலை வந்துவிட்டால் போதும், மக்கள் தலைகால் புரியாமல் செயல்படத் தொடங்குவார்கள்.
அப்படிப்பட்ட ஓர் அதீத உற்சாகமான நிலைதான் கடந்த மாதத்தில் தங்கத்தை வாங்குவதில் காணப்பட்டது. பொதுவாக, பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டு திட்டங்களில் மக்கள் முதலீடு செய்வதுதான் அதிகம்.
ஆனால், இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதைவிட தங்கத்தில் முதலீடு செய்யும் இ.டி.எஃப் ஃபண்டு திட்டங்களில் எக்கச்சக்கமாக முதலீடு செய்து ஆச்சரியத்தைத் தந்திருக்கிறார்கள்.
கடந்த ஜனவரியில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டு திட்டங்களில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்த மொத்த தொகை ரூ.24,029 கோடி. ஆனால், கோல்ட் இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடான தொகை ரூ.24,040 கோடி. அதாவது, 11 கோடி ரூபாயை அதிகம் முதலீடு செய்திருக்கிறார்கள்.

தங்கத்தில் அதிகம் முதலீடு...
பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களைவிட கோல்ட் இ.டி.எஃப் திட்டங்களில் 11 கோடி ரூபாய் அதிகமாகவே முதலீடு செய்திருக்கிறார்கள் இந்திய மக்கள்.
கடந்த ஆண்டு டிசம்பரில் கோல்ட் இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடான மொத்த தொகை ரூ.11,647 கோடி மட்டுமே. ஆனால், ஜனவரியில் கூடுதலாக 12,393 கோடி ரூபாயை அதிகமாக முதலீடு செய்திருக்கிறார்கள். இது டிசம்பரைவிட 106% அதிகமாகும்.

மல்ட்டி அசெட் ஃபண்டுகளிலும்...
இதே போல, பங்குச் சந்தை, கடன் சந்தை, தங்கம் என்று பல சொத்துகளிலும் முதலீடு செய்யும் மல்ட்டி அசெட் ஃபண்டு திட்டங்களிலும் கடந்த ஜனவரியில் முதலீடு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்திருக்கிறது. கடந்த டிசம்பரில் இந்த வகை ஃபண்ட் திட்டங்களில் முதலீடான மொத்த தொகை 7,426 கோடி. ஆனால், ஜனவரியில் முதலீடான தொகை 10,485 கோடி. ஏறக்குறைய 41% கூடுதலாக முதலீடாகி இருக்கிறது.

எதைக் காட்டுகிறது...?
தங்கம் சார்ந்த ஃபண்டு திட்டங்களில் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்வது எதைக் காட்டுகிறது?
தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் லாபத்தை அள்ளலாம் என்கிற எண்ணத்தையே பிரதானமாகக் காட்டுகிறது. தங்கமான கடந்த ஓராண்டு காலத்தில் தங்கமானது 75 சதவிகிதமும் வெள்ளியானது 138 சதவிகிதமும் லாபம் தந்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஜனவரி தொடங்கி விலை அதிகரிக்கத் தொடங்கியது தங்கம். இந்த விலையேற்றம் சிறிது காலத்துக்கு மட்டுமே இருக்கும் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், அந்த எண்ணம் தவறானது என்று கற்பித்தது தங்கம். 2025 ஜனவரியில் 7150 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை, 2025 டிசம்பர் முடிவில் 12480 ரூபாயாக விலையேற்றம் கண்டது.
தங்கம் விலை உயர்வது இனியும் தொடரும் என்கிற அதீத உற்சாகம் டிசம்பர் 15-ல் தொடங்கியது. தங்கம் விலை மளமளவென உயர்வதைப் பார்த்த மக்கள், அதில் பணத்தைக் கொட்ட ஆரபித்தார்கள். விளைவு...? 16,800 வரை விலை உயர்ந்த தங்கம் விலை, திடீரென சரியத் தொடங்கி 13,950 வரை குறைந்தது. தற்போது ஒரு கிராம் தங்கம் விலை 14,790 ரூபாயாக வர்த்தகம் ஆகிறது.

கவனிக்க வேண்டிய விஷயம்...
தங்கம், வெள்ளி விலை அதிகமாக இருக்கும் மொத்தமாக வாங்கியவர்கள் இப்போது 10 சதவிகிதத்திற்கு மேல் இழப்பில் இருக்கிறார்கள். வெள்ளியை வாங்கியவர்கள் கிட்டத்தட்ட 30% இழப்பில் இருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த இழப்பை எப்படி சமாளிப்பது, இந்த இழப்பில் இருந்து மீண்டுவர முடியுமா அல்லது நஷ்டத்தில் இருந்தாலும் முதலீட்டைத் திரும்ப எடுத்துவிடலாமா என்று யோசிக்கிறார்கள். தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் சில விஷயங்களை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.
தங்கத்தின் விலையேற்றம் கடந்த காலங்களில் ஒரே மாதிரியாக இல்லை. சில ஆண்டுகளில் விலையேற்றம் அதிகமாகவும், பல ஆண்டுகளில் விலையேற்றம் மிகக் குறைவாகவும் இருந்து வந்திருக்கிறது. எனவே, தங்கத்தின் விலை தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயரும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
அப்படி இருக்க, தங்கத்தில் செய்யும் முதலீட்டைக் குறைந்த கால நோக்கில் பார்க்கக் கூடாது. தங்கத்தில் செய்யும் முதலீட்டைக் குறைந்தபட்சம் 10 ஆண்டு காலத்துக்காவது தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்கிற தீர்மானமான முடிவுடன் இருந்தால் மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
அப்படி செய்யும்போதும் ஒரே நேரத்தில் மொத்தமாக முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். மொத்த முதலீட்டைக் கடன் சார்ந்த ஒரு ஃபண்ட் திட்டத்தில் முதலில் முதலீடு செய்துவிட்டு, வாரம் தோறும் அல்லது மாதந்தோறும் இவ்வளவு என 'சிஸ்டமேட்டிக் ட்ரான்ஸ்ஃபர் பிளான்' (STP) முறையில் முதலீட்டைத் தொடர வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சராசரி விலையில் நம்மால் தங்கத்தை வாங்க முடியும்.
தவிர, ஒருவர் தனது மொத்த முதலீட்டுத் தொகை அனைத்தையுமே தங்கம், வெள்ளியில் மட்டுமே முதலீடு செய்யக்கூடாது. அதிகபட்சம் 20% முதல் 25% என்கிற அளவில் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
எவ்வளவு பணத்தை தங்கம்/பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் வைத்திருப்பது என்று தெரியாதவர்கள் 'மல்ட்டி அசெட் ஃபண்ட்' திட்டங்களில் முதலீடு செய்துவிடுவது உத்தமம். தங்கம்/ஃபண்ட் திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்கிற முடிவை ஃபண்டு மேனேஜர் எடுத்துவிடுவார் என்பதால், லாபம் பற்றி நாம் பெரிய அளவில் கவலைப்படாமல் இருக்கலாம்.
ஆக, தங்கம்/வெள்ளியில் இனி முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் மனதில் கொண்டு செயல்படுவது நல்லது!





















