பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கை
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி முறையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுா்வேத மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் 20 இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டில் 11 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
அதேபோன்று, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டிலும், நிா்வாக ஒதுக்கீட்டிலும் 239 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்கு, வரும் 13-ஆம் தேதி வரை மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இதைத்தொடா்ந்து, நேரடி கலந்தாய்வு சென்னை அரும்பாக்கம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை வரை நடைபெறும் மாணவா் சோ்க்கையில், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் உரிய ஆவணங்களுடன் நேரடியாக சென்று ஆயுஷ் மருத்துவ இடங்களில் சேரலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை தெரிவித்துள்ளது.