Indigo: "மத்திய அரசின் அதிகார நோக்கமே இண்டிகோ நிறுவனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்...
`பைலட் பணி நேரம் குறைப்பு' - அரசின் புதிய விதி; 800 இண்டிகோ விமானங்கள் ரத்து - பயணிகள்அவதி
நாட்டின் மிகப்பெரிய தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனமாக கருதப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை கடந்த இரண்டு நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளால், இண்டிகோவின் விமான சேவையே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 800-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் டெல்லி, புனே, மும்பை போன்ற முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மும்பை விமான நிலையத்தில் பயணிகளிடையே தள்ளுமுள்ளல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பயணிகள் இரவு நேரத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விமான நிலையத்தில் காத்துக்கிடந்தனர். பாடகர் ராகுல் வைத்யா என்பவர் கோவாவில் இருந்து மும்பை செல்ல விமான டிக்கெட்களுக்கு ரூ. 4.2 லட்சம் செலவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் வைத்யா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கோவா மற்றும் மும்பை விமான நிலையங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அவர் தனது பதிவில், “எங்களுக்கு கொல்கத்தாவில் இரவில் ஒரு ஷோ இருக்கிறது. அங்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை. கோவாவில் இருந்து மும்பைக்கு செல்ல மட்டும் டிக்கெட் கட்டணமாக ரூ. 4.20 லட்சம் செலவு செய்திருக்கிறேன். மும்பையில் இருந்து கொல்கத்தாவிற்கு தனி கட்டணம் செலவிட வேண்டியுள்ளது. உள்நாட்டில் நான் விமானப் பயணத்திற்கு அதிக அளவில் செலவிட்டது இதுவே முதல் முறையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டி.வி. நடிகை நியா சர்மாவும் உள்ளாட்டு விமானப் பயணத்திற்கு ரூ. 54 ஆயிரம் செலவிட்டதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த இரண்டு நாள்களாக விமான சேவை பாதிக்கப்பட்டு வருவதற்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், விமான சேவையை சரிசெய்ய விமான போக்குவரத்துறை ஆணையம், விமான நிலையங்களுடன் இணைந்து முயற்சி செய்து வருவதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது.

















