புனே: தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மை...
மகாராஷ்டிரா: `நீங்கள் ஓட்டை குறைத்தால், நான் நிதியை குறைத்துவிடுவேன்'- அஜித் பவார் எச்சரிக்கை
மகாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு வரும் 2ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மாலேகாவ் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில துணை முதல்வர் அஜித் பவார்,''மத்தியிலும், மாநிலத்திலும் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. பிரதமர், முதல்வர் மற்றும் இரு துணை முதல்வர்கள் இணைந்து இதனை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நிச்சயம் வளர்ச்சி ஏற்படும். எங்களது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்தால் திட்டங்களை நிறைவேற்ற நிதிக்கு எந்த வித பற்றாக்குறையும் இருக்காது என்று உறுதியளிக்கிறேன். எங்களது வேட்பாளர்கள் அனைவரையும் நீங்கள் தேர்வு செய்தால் நான் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்றுவேன்.
நீங்கள் எங்களது வேட்பாளர்களுக்கு வாக்கை குறைத்தால் நானும் நிதியை குறைத்துவிடுவேன். நீங்கள் வாக்களிக்கும் அதிகாரத்தில் இருக்கிறீர்கள். நான் நிதி வழங்கும் அதிகாரத்தில் இருக்கிறேன்.

இப்போது என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்''என்றார். அஜித்பவாரின் இக்கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து சிவசேனா(உத்தவ்) சட்டமேலவை உறுப்பினர் அம்பாதாஸ் தன்வே கூறுகையில்,''மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் இருந்து திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அஜித்பவார் அவரது வீட்டில் இருந்த பணத்தையா கொடுக்கிறார். இது போன்று அஜித்பவார் போன்ற தலைவர்கள் மக்களை மிரட்டினால் தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். இதே போன்று ஜால்னாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, தனது கட்சி வேட்பாளர்களுக்கு முன் வரிசையில் இருக்கைகளை எடுத்து போடும்படி போலீஸாருக்கு அஜித்பவார் உத்தரவிட்ட வீடியோ ஒன்றும் வைரலாகி இருக்கிறது. அதில் யார் எங்களது வேட்பாளர்கள் என்று தெரியவில்லையா என்றும் அஜித்பவார் கேட்டுள்ளார்.
ஓட்டு போடவில்லையெனில் நிதி ஒதுக்கமாட்டேன் என்று கூறியது குறித்து அஜித்பவார் அளித்துள்ள விளக்கத்தில், தேர்தல் பிரசாரத்தில் இது போன்று கூறுவது ஒன்றும் புதிதல்ல, நான் வாக்காளர்களை மிரட்டவில்லை என்றும், ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவருக்கு தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதியளிக்க அதிகாரம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அனைவருக்கும் வாக்குறுதியளிக்க அதிகாரம் இருந்தாலும், யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் அஜித்பவார் தெரிவித்துள்ளார். அஜித்பவார் இதற்கு முன்பு சட்டமன்ற தேர்தலில், நீங்கள் எனக்கு ஓட்டுப்போட்டுவிட்டதால் நான் உங்களுக்குறியவனாக மாறிவிடமாட்டேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

















