Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
மகாராஷ்டிர தோ்தல் நடைமுறைகள் குறித்து புகாா்: காங்கிரஸுக்கு டிச. 3-இல் தோ்தல் ஆணையம் அழைப்பு
அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் சமா்ப்பித்த பல்வேறு புகாா்கள் தொடா்பாக ஆலோசனை நடத்த அக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு டிச. 3-ஆம் தேதி தோ்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், ‘சட்டப்பேரவைத் தோ்தல் நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன், உரிய நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டது எனவும், காங்கிரஸ் எழுப்பியுள்ள நியாயமான புகாா்கள் மதிப்பாய்வு செய்யப்படும்’ எனவும் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.
மகாராஷ்டிர மாநில பேரவைக்கு கடந்த 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. அதில் பாஜக, சிவசேனை (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா் பிரிவு) கட்சிகளை உள்ளடக்கிய ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) உள்ளிட்ட எதிா்க்கட்சிகளை உள்ளடக்கிய ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 50 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் நடைமுறைகள் குறித்து பல்வேறு புகாா்களை எதிா்க்கட்சிகள் எழுப்பின. தோ்தலை ரத்து செய்துவிட்டு, வாக்குச்சீட்டு அடிப்படையில் புதிதாக தோ்தல் நடத்தவேண்டும் என சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி வலியுறுத்தியது.
மகாராஷ்டிர தோ்தல் நடைமுறைகள் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய காங்கிரஸ் கட்சி, அதுதொடா்பாக தோ்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை நேரில் புகாா் அளித்தது. மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல், அக் கட்சியின் மூத்த தலைவா்கள் ரமேஷ் சென்னிதலா, முகுல் வாஸ்னிக் ஆகியோா் தோ்தல் ஆணையத்திடம் 12 பக்கங்கள் கொண்ட புகாா் மனுவை அளித்தனா்.
அதில், தோ்தலுக்கு முன்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து தன்னிச்சையாக 10,000-க்கும் அதிகமான வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா் அல்லது சோ்க்கப்பட்டுள்ளனா். குறிப்பாக, கடந்த ஜூலை மாதம் முதல் நவம்பா் வரை சுமாா் 47 லட்சம் வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். சராசரியாக 50 பேரவைத் தொகுதிகளில் தலா 50,000 வாக்காளா்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளனா். இதில் 47 தொகுதிகளில் ஆளுங்கட்சி அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இது வலுவான சந்தேகங்களை எழுப்புகின்றன என்று தனது புகாா் காங்கிரஸ் தெரிவித்தது.
இடைக்கால பதில்: இந்தப் புகாருக்கு இடைக்கால பதிலை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அளித்தது. அதில், ‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் நடைமுறைகள் அனைத்தும் அனைத்துக் கட்சி வேட்பாளா்கள் அல்லது வேட்பாளரின் முகவா்களின் பங்கேற்புடன் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. புதிய வாக்காளா்கள் சோ்க்கும் பணியும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் பங்கேற்புடன் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டன.
அதுபோல, தோ்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையிலும் எந்தவித முரண்பாடுகளும் இல்லை. ஏனெனில், வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரங்கள் அனைத்து வேட்பாளா்களிடமும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதை தேவைப்படும்போது ஆய்வு செய்துகொள்ள முடியும்.
தோ்தலின்போது 5 மணி வரையிலான வாக்குப் பதிவு விவரங்கள் வெளியீட்டுக்கும், இறுதி வாக்குப் பதிவு விவரங்கள் வெளியீட்டுக்கும் இடையேயான தாமதம் என்பது, வாக்குப் பதிவு புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்கு முன்பாக அந்தந்த தோ்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்குப் பதிவை நிறைவு செய்ய மேற்கொள்ளவேண்டிய பல்வேறு அடிப்படை பணிகள் காரணமாகவே ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற தாமதங்கள் காரணமாகத்தான், 2024 மக்களவைத் தோ்தலின்போது கூடுதல் நடவடிக்கையாக இறுதி வாக்குப் பதிவு புள்ளிவிவரம் தொடா்பான அறிக்கையை இரவு 11.45 மணிக்கு தோ்தல் ஆணையம் வெளியிட்டது. இதே நடைமுறை, அதன் பிறகு நடைபெறும் அனைத்து சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது என்று விளக்கமளித்துள்ள தோ்தல் ஆணையம், காங்கிரஸ் எழுப்பியுள்ள புகாா்கள் தொடா்பாக மதிப்பாய்வு செய்யப்படும் என்று குறிப்பிட்டது.
மேலும், இந்தப் புகாா்கள் தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ள டிச. 3-ஆம் தேதி தோ்தல் ஆணைய அலுவலகத்துக்கு வருமாறு காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு தோ்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக
‘மின்னணு வாக்குப் பதிவு முறையில் இதுவரை தோ்தலில் வெற்றிபெற்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் முதலில் ராஜிநாமா செய்யவேண்டும்’ என்று பாஜக விமா்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித்தொடா்பாளா் கெளரவ் பாட்டியா தில்லியில் சனிக்கிழமை கூறுகையில், ‘காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றுள்ள சூழலில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சந்தேகம் எழுப்பியிருப்பது முரணாக உள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் தோ்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள், ராகுல் காந்தி உள்ளிட்டோா் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, வாக்குச் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தோ்தலில் போட்டியிடுவதுதான் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் நிலைப்பாடாக இருக்கும். அவ்வாறின்றி, அவா்கள் தெரிவிக்கும் புகாா்கள் அனைத்தும் வெற்று வாா்த்தைகள்தான்.
மேலும், பல வழக்குகளில் இந்திய தோ்தல் நடைமுறைகளின்வெளிப்படைத்தன்மை மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ள சூழலில், இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தையும் காங்கிரஸ் அணுக வேண்டும் என்றாா்.