டெல்லி குண்டு வெடிப்பு: ``எந்த ஆதாரமும் இல்லை'' - 3 மருத்துவர்களை விடுவித்த NIA
மதிமுக: ``விஜய் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது; அவர் வெற்றிப் பெற வேண்டுமெனில்'' -துரை வைகோ பேச்சு
காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, “பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் பா.ஜ.க அமோக வெற்றி பெறும் என தமிழக பா.ஜ.க தலைவர் பேசியிருப்பது, அவர்களின் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்குதான் பயன்படும்.
இது பெரியார், அண்ணா உலவிய மண். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. பீகாரின் அமோக வெற்றிக்கு முக்கிய காரணம், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு 1.25 கோடி பெண்களுக்கு ரூ.10,000 நிதியாக கொடுத்திருக்கிறார்கள்.

ரூ.12,100 கோடி இதற்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் தொழிற்சாலைகள் கிடையாது, கல்விக்கட்டமைப்பு கிடையாது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களுக்கு தினக்கூலிகளாகத்தான் வருகிறார்கள்.
அவர்கள் உழைக்கிறார்கள்; அவர்களுக்கு தமிழ்நாடு மக்களும் ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், அந்த மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்ற தொழிற்சாலைகளை உருவாக்க இந்த ரூ.12,000 கோடியை செலவழித்திருக்கலாம். மகாராஷ்டிரா தேர்தலின் போதும் இதேபோலதான் திட்டத்தின் மூலம் பணம் கொடுத்தார்கள்.
த.வெ.க நடத்திய SIR-க்கு எதிரான போராட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை. அவர் மிகப் பெரும் திரைநட்சத்திரம். அவருக்குப் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
அதனால்தான் இளைஞர்களில் சிலர் அவர் பின்னால் இருக்கிறார்கள். அதே நேரம் சினிமா வேறு, அரசியல் வேறு. அரசியல் மிகவும் கடினமானது.
அவர் வெற்றி பெற வேண்டுமெனில் மக்களை நேரடியாகச் சென்று சந்திக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் போராட்டங்களில், ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் தலைவராக அவரும் கலந்துகொள்ள வேண்டும்.
கொள்கை விரோதி பா.ஜ.க என உறுதியாக அறிவித்திருக்கிறார். எனவே, அந்த பா.ஜ.க-வுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு கொடுத்துவிடக் கூடாது என்பதுதான் என் விருப்பம். அவருக்கு காலப்போக்கில் எல்லாம் தெரியவரும் என நம்புகிறேன்," என்றார்.















