தேனி: "யார் தற்குறி?" - பேனர் சண்டையில் திமுக - தவெக; மோதல் பதற்றம்; பேனர் அகற்ற...
மிளகை அரைத்துப் பூசி அபிஷேகம் காணும் கணபதி; ஏன் தெரியுமா? - நெல்லை, சேரன்மகாதேவி மிளகுப் பிள்ளையார்!
விநாயகர் நல்ல எண்ணங்களின் ஊற்று. அவர் திருவுருவம் இருக்கும் இடத்தில் நல்ல அதிர்வுகள் சூழும். அதனாலேயே அவரை அரசமரம், ஆலமரம், குளக்கரை, ஏரிக்கரை, முச்சந்தி, தெரு மூலை என எங்கெங்கும் பிரதிஷ்டை செய்து வழிபட்டோம்.
அவ்வாறு பிரதிஷ்டை செய்த மூர்த்தங்கள் ஒவ்வொன்றுக்கும் காலப்போக்கில் ஒரு வழிபாடு அமைந்துவிட்டது. அப்படி ஒரு வழிபாடுதான் விநாயகருக்கு மிளகு அரைத்துப் பூசி அபிஷேகம் செய்யும் வழக்கம். ஏன் அப்படிச் செய்கிறார்கள்? அதன் பலன் என்ன? அந்த விநாயகர் ஆலயம் எங்குள்ளது என்பது குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள்...
மிளகுப் பிள்ளையார் கோயில்
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி - கன்னடியன் கால்வாய் அருகிலுள்ளது மிளகுப் பிள்ளையார் கோயில். சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே உள்ளது இந்த ஆலயம்.

முன்னொரு காலத்தில் கேரளத்தை ஆண்ட மன்னர் ஒருவருக்குத் தீராத வயிற்றுவலி உண்டானது. ஒருநாள் மன்னரின் கனவில் தோன்றிய சிவபெருமான் ஒரு பரிகாரம் சொன்னார். மன்னனின் உயரத்துக்கு ஓர் எள் பொம்மை ஒன்று அதில் நவரத்தினக் கற்களைக் கொட்டி, வியாதியை அந்தப் பொம்மைக்குள் ஆவாஹனம் செய்து பிறகு அதை ஓர் அந்தணருக்கு தானமாகக் கொடு என்றாராம். மன்னரும் அப்படியே ஒரு பொம்மையைச் செய்தார். ஆனால், அந்தணர் எவரும் அந்தப் பொம்மையை வாங்க முன்வரவில்லை.
கர்நாடகாவிலுள்ள பிரம்மசாரி அந்தண இளைஞன் ஒருவன் இதுபற்றிக் கேள்விப் பட்டான். அவன் வந்து பொம்மையைப் பெற்றுக்கொண்டான். அவன் கைக்கு வந்ததும் பொம்மை பேசியது. அவன் செய்த காயத்ரீ ஜபத்தின் பலனில் ஒரு பகுதியைத் தனக்குக்கொடுக்கும்படி கேட்டது. இளைஞனும் கொடுத்துவிட்டான். அதன் பிறகு வருந்தினான். 'சுயநலம் கருதி தர்மத்திற்கு மாறாக காயத்ரீ பலனைத் தானம் செய்துவிட்டோமே' எனக் கலங்கினான்.
இதற்குப் பிராயச்சித்தமாக நவரத்தினக் கற்களைப் பொதுநலன் கருதிப் பயன்படுத்த முடிவுசெய்தான். பொதிகை மலையில் வசிக்கும் அகத்தியரி டம் ஆலோசனைப் பெறத் தீர்மானித்தான். தன்னிடம் இருந்த நவரத்தினக் கற்களை, நம்பிக்கைக்கு உகந்த வேறோர் அந்தணரிடம் ஒப்படைத்துவிட்டுப் புறப்பட்டான்.
தன்னைச் சந்திக்கப் பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன் வருகிறான் என்பதை உணர்ந்த அகத்தியர், வரும் வழியில் அவனுக்குப் பல சோதனைகளை ஏற்படுத்தினார். அனைத்தையும் சமாளித்து, அகத்தியரைத் தரிசித்தான் இளைஞன். அகத்தியர் அவன் சிரத்தையைப் பாராட்டினார். கூடவே செய்ய வேண்டிய அறப்பணிகளையும் உபதேசித்தார்.

இந்த மலையிலிருந்து கீழே இறங்கிச் செல்லும்போது, வழியில் ஒரு பசுவைக் காண்பாய். அதன் வாலைப் பிடித்துக் கொண்டே செல். அது செல்லும் வழியை குறித்துக்கொள். அவ்வழியே கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடங்களில் மதகு (மடை) அமை. பசு படுக்கும் இடங்களில் ஏரியை உருவாக்கு. பசு கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் அமை. இங்ஙனம் கால்வாய் அமைத்துவிட்டு, மீதி நீர் சேரும் படியாக ஒரு குளம் தோண்டு என்றார்.
அப்படியே செய்துமுடித்தான். ஒருமுறை மற்றுமொரு சோதனை ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. கால்வாயின் அருகில் ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, அவரது உடல் முழுவதும் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து அந்த புனித நீரை கால்வாய்க்குள் விழும்படிச் செய்தான். அடுத்த கணம் மழை கொட்டித் தீர்த்தது. அன்றுமுதல் அந்த விநாயகரை மிளகுப் பிள்ளையார் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். இன்றும் மிளகு அரைத்துப் பூசும் வழக்கம் அங்கே உள்ளது.
இந்தப் பகுதி விவசாயம் நிறைந்த பகுதி. இப்போதும் மழை பெய்யவில்லை என்றால், விவசாயிகள் இணைந்து மிளகை அரைத்து விநாயகரின் திருமேனியில் பூசி அபிஷேகம் நடத்துவார்கள். அந்த அபிஷேக நீர் கால்வாய்க்குள் விழும்படிச் செய்கிறார்கள். இப்படிச் செய்தால், மழை பெய்யும் என்பது நம்பிக்கை.
மிளகு அரைப்பதற்காகவே கோயில் வளாகத்தில் அம்மி உள்ளது. இந்த விநாயகருக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து, மஞ்சள் வஸ்திரம், அருகம்புல் மாலை சாற்றி, மிளகுப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்குமாம்.

இங்குள்ள கால்வாயில் நீராடி, 21 முறை மிளகுப் பிள்ளையாரை வலம் வந்து 21 தேங்காய்களை விடலைப் போட்டு வழிபட்டால், கல்வியில் மேன்மை உண்டாகும்; வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும் என்கிறார்கள். இங்கே, விநாயக சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிள்ளையாருக்கு அருகிலுள்ள நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்து சிகப்பு வஸ்திரம், செவ்வரளி மாலை சாற்றி, வெல்லம் நிவேதனம் செய்து வழிபட் டால், நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள்.!



















