Shriya Saran: ``யார் இந்த முட்டாள்?" - ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா; என்...
'முதல்வர் பயணித்த வெளிநாடுகள் 7; ஈர்க்கப்பட்ட முதலீடு 0’ - அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டும் அன்புமணி
தமிழக அரசின் தொழில் முதலீடுகள் சார்ந்து கேள்வி கேட்டு, 'திமுக அரசின் பொய் முதலீடுகள்' என்ற பெயரில் பா.ம.க தலைவர் அன்புமணி ஆவணம் ஒன்றை இன்று சென்னையில் வெளியிட்டிருந்தார்.

அந்த ஆவணத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது, '2025 ஏப்ரல் முதல் இன்று வரை 166 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது. 1.18 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டு வரும் என்றனர். அதுவும் முழுமையாக வரவில்லை.
முதல்வர் ஜப்பான், சிங்கப்பூர், துபாய் உட்பட 7 நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்றிருந்தார். 34000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்திருப்பதாக கூறினார்கள். ஆனால், ஒரு பைசா கூட இன்னும் தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்படவில்லை. பாக்ஸ்கான் நிறுவன அதிகாரி முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடனே 17,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாக தொழில்துறை அமைச்சர் கூறினார்.

அடுத்த அரைமணி நேரத்தில் அந்த நிறுவனம் முதலீடே செய்யவில்லை என மறுக்கிறது. தினம் தினம் பொய்களை மட்டுமே ஸ்டாலின் கூறுகிறார். கேள்வி கேட்டாலும் இவர்களிடம் எந்த பதிலும் இல்லை.
கூகுள் சி.இ.ஓ தமிழ்நாட்டை சேர்ந்தவர். முதல்வர் அமெரிக்கா சென்ற போது கூகுள் நிறுவனத்துக்கு சென்று பேசியதாக விளம்பரப்படுத்தினார்கள். இப்போது கூகுள் நிறுவனம் ஆந்திராவில் மிகப்பெரிய முதலீட்டை செய்கிறது. தமிழரான சுந்தர் பிச்சை தமிழ்நாட்டை விட்டு ஆந்திராவுக்கு செல்வதற்கு என்ன காரணம்? கரப்சன், கமிஷன், கலெக்சன் தானே!
சமீபத்தில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் என மத்திய அரசு ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் 17 மாநிலங்கள் இடம்பெற்றிருந்தது. தமிழகத்தின் பெயரே அதில் இல்லை. உங்களுக்கு வெட்கக்கேடாக இல்லை? தொழில் தொடங்க மத்திய அரசு 30 சீர்திருத்தங்களை முன் வைக்கிறது. அது எதையுமே தமிழ்நாடு பின்பற்றவில்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பை உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வருவோம் என்றனர். இன்னும் 4 மாதம்தான் ஆட்சி இருக்கிறது. இன்னமும் அந்த சட்டத்தை கொண்டு வரவில்லை.
தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் கமிஷன். அதைப் பார்த்தே முதலீட்டாளர்கள் ஓடிவிட்டார்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில் முதலீடுகள் சார்ந்து அவர்கள் பொய் சொல்லவில்லை. ” என்றார்.
















