DD: `எனக்கும், என் குடும்பத்துக்கும் கிங் இவர்தான்' - திவ்யதர்ஷினி நெகிழ்ச்சி
மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடியில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் இருக்கின்றன.

புதிதாக இக்கூட்டணியில் உத்தவ் தாக்கரேயின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே வந்து சேர்ந்திருக்கிறார். கூட்டணியில் ராஜ் தாக்கரேயை சேர்க்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார்.
ஆனால் ராஜ் தாக்கரேயை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் தயக்கம் காட்டி வருகிறது. ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினர் வட இந்தியர்கள் மும்பையில் தேர்வு எழுத வந்தபோது தாக்கினர். இதனால் அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் தயக்கம் காட்டி வருகிறது.
காங்கிரஸ் தனித்து போட்டி
மும்பை மாநகராட்சி தேர்தலில் தங்களது கட்சி தனித்து போட்டியிடும் என்று மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் மற்றும் மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக ரமேஷ் சென்னிதலா அளித்திருந்த பேட்டியில்,''இது உள்ளாட்சி தேர்தல் என்பதால், உள்ளூர் தலைவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கிறோம். மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளூர் தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். எனவே மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். 227 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம்'' என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்களின் இக்கருத்து குறித்து தெரிவித்த உத்தவ் தாக்கரே,''காங்கிரஸ் ஒரு சுதந்திரமான தனிக்கட்சி. அதே போன்று சிவசேனா(உத்தவ்)வும் சுதந்திரமான தனிக்கட்சி. அவர்களது கட்சி விவகாரங்களில் அவர்கள் சொந்தமாக முடிவு எடுக்கலாம். இதே போன்று எங்களது கட்சி விவகாரத்தில் நாங்கள் சுதந்திரமாக முடிவு எடுப்போம்''என்றார்.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றி குறித்து கேள்வி எழுப்பிய உத்தவ் தாக்கரே, `பீகார் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இருப்பினும், ஒரு விஷயம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. தேஜஸ்வி யாதவின் பேரணிக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு உண்மையானதா அல்லது அவர்கள் AI மூலம் உருவாக்கினார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பேரணிகளில் அதிக மக்கள் கூட்டத்தை ஈர்த்தவர்கள் அரசாங்கத்தை அமைக்கவில்லை. ஆனால் பேரணியில் காலி இருக்கைகள் இருந்தவர்களின் அரசாங்கம் ஆட்சிக்கு வருகிறது. இந்த புதிய ஜனநாயகத்தில் இந்த கணக்கை புரிந்து கொள்ள முடியவில்லை''என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மும்பை தாதரில் உள்ள மறைந்த பால் தாக்கரேயின் நினைவு சின்னத்தை நிர்வகிக்கும் தாக்கரே நினைவு அறக்கட்டளைக்கு உத்தவ் தாக்கரே தலைவராகி இருக்கிறார். இந்த அறக்கட்டளை 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது உத்தவ் தாக்கரே தலைவராக இருந்தார். 2019ம் ஆண்டு உத்தவ் தாக்கரே முதல்வரானதால் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்தில் ஆதித்ய தாக்கரே தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது 6 ஆண்டுகள் கழித்து உத்தவ் தாக்கரே மீண்டும் தாக்கரே நினைவு டிரஸ்ட் தலைவராகி இருக்கிறார்.















