`கை எப்படி குளர்ச்சியாக இருக்கு?' - ஆசிரியை சித்ரவதையால் மாணவி தற்கொலை; அடுத்தடு...
`மேக்கேதாட்டு அணை - மெட்ரோ - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு’ - எடப்பாடி பழனிசாமி விரிவான பேட்டி
சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ``கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் பேட்டியில், மேக்கேதாட்டு அணை கட்ட முழுவீச்சில் பணி துவங்கப்படும், புதிய விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். மேக்கேதாட்டு திட்டத்திற்கு தலைமை அலுவலகம் தனியாக கட்டப்படும் என பேசியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு மெத்தனப்போக்காக இருக்கிறது.
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தில் உள்ள ஜீவநதியாக காவிரி தண்ணீர் தான் இருப்பதுதான். காவிரி தண்ணீரை நம்பி தான் பல லட்சம் விவசாயிகள் வேளாண் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது காவிரி தண்ணீர்தான். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கர்நாடகா அரசு இவ்வாறு தெளிவான திட்ட அறிக்கையை மத்தியில் நீர்வள ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அணை கட்டுவதற்கு உரிமை கர்நாடக அரசுக்கு இல்லை!
உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு உரிமை கர்நாடக அரசுக்கு இல்லை. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. 15 ஆண்டுகளுக்கு காவிரி நதிநீர் தடுக்கவோ, திருப்பவோ, மடைமாற்றம் செய்யவோ கூடாது என்று ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டும். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு ஆண்டுக்கு 177.2 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து முதலமைச்சர் எந்த விளக்கமும் அளிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றார்.
மேலும் தொடர்ந்தவர் ``திமுக இந்திய கூட்டணியில் உள்ளது. காங்கிரஸும் இடம்பெற்றுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் பேசி சுமுகமாக நிலை உருவாக்க வேண்டும். இந்திய கூட்டணியில் அங்கும் வகிப்பதாக ஸ்டாலின் கூறி வருகிறார். அவ்வாறு அங்கம் வகிக்கும்போது, காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையை எளிதாக தீர்க்க வாய்ப்புள்ளது. உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் தலைவருடன் தொடர்பு கொண்டு நல்லதீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அவ்வாறு தீர்வு காணப்படாமல் இருந்தால் தமிழக வஞ்சிக்கப்பட்டுவிடும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். எனவே எச்சரிக்கையுடன் முதல்வர் கையாள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
மெட்ரோ திட்ட அறிக்கையில் பல குளறுபடிகள்!
தொடர்ந்து மெட்ரோ குறித்து பேசியவர், ``அதிமுக ஆட்சியில் கோவை மாநகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும் என்று விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது; திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டனர். 2024 ஆம் ஆண்டுதான் மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கையை அனுப்பி வைத்தனர். அந்தத் திட்ட அறிக்கையில் பல குளறுபடிகள் இருந்ததன் காரணமாக மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அதன் பிறகும் விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை.
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் வர வேண்டும் என்றால் 20 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 15 லட்சத்து 85 ஆயிரம் மக்கள் இருப்பதாக திட்டஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். அதனால் இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் பிரச்சினைகள் ஏற்பட்டுவிட்டது. தற்போது 2025 ஆம் ஆண்டு மக்கள்தொகை எவ்வளவு உள்ளது என்று கணக்கிட்டு மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தால், மத்திய அரசு விதிகளின்படி 20 லட்சம் மக்கள் தொகை இருந்திருக்கும் மெட்ரோ ரயில் திட்டமும் கிடைத்திருக்கும். எனவே மீண்டும் தமிழக அரசு விழிப்புடன் இருந்து குளறுபடி இல்லாமல் மத்திய அரசு விதிமுறைகளை பின்பற்றி விரிவான திட்ட அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.

மாநில அரசின் கவனக்குறைவு
மேலும், ``இந்த குளறுபடி மாநில அரசிடம் தான் உள்ளது. மாநில அரசு, மத்திய அரசிடம் மெட்ரோ ரயில் திட்டத்தில் என்னென்ன விதிகள் உள்ளது என்று ஆய்வு செய்து, அதன்படி முறையாக விரிவான திட்ட அறிக்கை அனுப்பியிருந்தால் பிரச்சினை வந்திருக்காது. இதேபோன்று மதுரை மாநகராட்சியும் இதேதான். அதிமுக ஆட்சி வந்தவுடன் இரண்டு மெட்ரோ ரயில் திட்டத்தையும் துவங்குவதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அதிமுக ஆட்சி தான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை பணி துவங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கோவை மெட்ரோ ரயில் திட்டம் என்பதால் காலதாமதம் செய்து, சரியாக ஆய்வு செய்து, அனுப்பாத காரணத்தால் பணிசுணக்கம் ஏற்பட்டு, மத்திய அரசிடம் இருந்து இவ்வாறு பதில் வந்துள்ளது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் மாநில அரசின் கவனக்குறைவும், அலட்சியம் தான்" என்றார்.
தொடர்ந்து, ``தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை குறித்து பலமுறை கூறியும் தமிழக அரசு மெத்தனபோக்குடன் தான் உள்ளது. நிரந்தரமான டிஜிபியை இதுவரை தமிழக அரசு நியமிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், காலஅவகாசம் கொடுத்து திமுக அரசு கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறது. தனக்கு வேண்டுபவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத அரசாக இருந்து கொண்டிருக்கிறது. திமுக அரசுக்கு கைபாவையாக உள்ள டிஜிபியை நியமிக்க வேண்டும் என்ற அடிப்படையில் காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார். இனியாவது காலதாமதம் செய்யாமல் நிரந்தர டிஜிபி நியமித்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும்" கோரிக்கை வைத்தார்.
ஒரு முக்கிய புள்ளிக்கு தொடர்பு?
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ``ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மாநில காவல்துறையால், நீதி கிடைக்காது என உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பெறப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு டெல்லி உச்ச நீதிமன்றம் செல்கிறது. யார் விசாரித்தால் என்ன? மாநில அரசுக்கு என்ன அச்சம், இதில் ஏதோ மர்மம் உள்ளது. ஒரு முக்கிய புள்ளி இதில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று மேல்முறையீடு செய்கிறார்கள். யார் விசாரித்தால் என்ன. உண்மை வெளியே வந்தால்போதும், குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் இதுதான் எதார்த்தமான நிலை. ஆனால் மாநில அரசுக்கு அது தேவையில்லை. பிரச்சினை அடிப்படையில் உயர் நீதிமன்றத்தை சம்பந்தப்பட்டவர்கள் நாடுகிறார்கள். சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாலும் அதற்கு எதிராக மாநில அரசு முறையிடுகிறது” என்றும் கூறினார்.
மேலும் தொடர்ந்தவர், ``விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுவரப்பட்ட, நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்து இருந்தால்,விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். 15 நாட்கள் கொள்முதலை நிறுத்திவிட்டார்கள். விவசாயிகளின் நெல்மணிகள் எல்லாம் முளைத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திமுக அரசு வந்த பிறகு அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
உண்மையான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதுதான் அதிமுக உடைய கருத்து. எஸ்.ஐ.ஆர் பணியை யாராவது ஒருவர் மேற்கொண்டு தான் ஆகவேண்டும். இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வைத்து தான் எஸ் ஐ ஆர் பணியை மேற்கொள்ள முடியும்.. இதற்கு தனியாக ஏஜென்சி வைக்க முடியாது. அந்த அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். நிறையபேர் உயிரெல்லாம் பொருட்படுத்தாமல் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள். வாக்காளர் பட்டியலை தயாரிக்கக்கூட முன் வராவிட்டால் நாடு எவ்வாறு வளரும். அரசு அலுவலர்களை சுதந்திரமாக செயல்படவிட்டால், சரியான முறையில் செயல்பட தயாராக உள்ளார்கள். அரசாங்கத்தின் அழுத்தத்தின் காரணமாக இதுபோன்ற நிலை ஏற்படுகிறது.

அதிமுக சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி. ஜெயலலிதா இருந்தபோது தனபாலை உயர்ந்த இடத்தில் அமர வைத்து, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் அளவிற்கு செயல்பட்டுள்ளார். அதிமுக கட்சி பட்டிலின மக்களுக்கு உரிய மரியாதை வழங்கியது. ஜவுளி பூங்கா மற்றும் ராணுவத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆகியவை அமைப்பதற்கு அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இரும்பாலை பகுதியில் குறிப்பிட்ட இடத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது.
சுமார் 1500 ஏக்கர் இரும்பாலை பகுதியில் காலியாக உள்ளது. இரண்டு திட்டங்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, மாநில அரசு கடிதம் அனுப்பியது. இதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்த திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இந்த பிரச்னை இருந்திருக்காது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தார்களோ அதை எல்லாம் கடைப்பிடிப்பதும் தொடர்வதும் கிடையாது. விவசாயிகள் பாதிக்காத அளவிற்கு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றும் கூறினார்.















