மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவே...
``ரங்கராஜ் சொல்றதை காமெடியா எடுத்துக்கலாம்" - மகளிர் ஆணைய தலைவர் குமாரி
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிறிசில்டா விவகாரம் இப்போதைக்கு ஓயாதுபோல.
'தன்னைத் திருமணம் செய்துவிட்டு தற்போது சேர்ந்து வாழ மறுக்கிறார்' என ஏற்கெனவே திருமணமான ரங்கராஜ் மீது அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா போலீஸில் புகார் கொடுத்தது நினைவிருக்கலாம்.
இந்த விவகாரம் நீதிமன்றமும் சென்ற நிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார் ஜாய்.
அந்தப் புகார் தொடர்பாக இருவரையும் இரண்டு முறை அழைத்து விசாரித்த மகளிர் ஆணையம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், ரங்கராஜ் ஜாய் கிறிசில்டாவைத் திருமணம் செய்ததை ஒப்புக் கொண்டார் எனவும் அவருக்குப் பிறந்த குழந்தைக்குத் தந்தை தான் தான் என்றூம் ஒப்புக் கொண்டார்' எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.
மேலும் ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரங்கராஜ் அதில், மகளிர் ஆணைய அறிக்கையில் குறிப்பிட்டது போல் தான் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆணையத்தின் பரிந்துரை உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடப் போகிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மகளிர் ஆணையம் என்பது பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்குத் தீர்வு காண அரசால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். தேசிய அளவில் செயல்படும் தேசிய மகளிர் ஆணையத்துடன் மாநில மகளிர் ஆணையங்கள் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு விசாரணைக்கு ஆஜராகும் ஒருவர் ஆணையத்தின் உள்ளே ஒன்றைப் பேசிவிட்டு வெளியில் அதை மறுக்க முடியுமா'' என்கிற கேள்வி எழவே, மகளிர் ஆணையத் தலைவரான குமாரியிடமே பேசினோம்.
''ஆணையத்துல ஆஜரான அன்னைக்கு தனக்கு அந்தப் பெண்ணுடன் திருமணம் நடந்ததை ஒத்துக்கிட்டவர், இப்ப ஏன் இப்படியொரு அறிக்கை தர்றார்னு தெரியலை. தான் மிரட்டப்பட்டு நடந்த கல்யாணம்னு இப்ப சொல்றார். அந்தப் பொண்ணு இவரை மிரட்டினாங்கன்னு சொன்னா நம்பற மாதிரியாங்க இருக்கு. நல்ல காமெடினு இதை எடுத்துக்கலாம். சோஷியல் மீடியாவுலயே வாழ்ந்திட்டிருக்கிறவர்னு நினைக்கிறேன். அதனால அங்க எதையாச்சும் பேசிட்டுப் போகட்டும். அது பத்தி எங்களுக்குக் கவலையில்லை. நாங்க எங்க அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்யணுமோ அதைச் சரியா செய்திருக்கோம்' என முடித்துக் கொண்டார்.
மகளிர் ஆணையம் சொல்வது பொய் என்கிற ரீதியில் ஒருவர் பொதுவெளியில் பேசுகிறார் என்றால், ஆணையத்தின் மீது பெண்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?


இதற்கு முன் தங்களின் பிரச்னைக்காக ஆணையம் சென்ற சிலரிடம் பேசியபோது,
'பொதுவெளியில் ஆணையம் குறித்து இந்த மாதிரி புகாருக்குள்ளான ஒருத்தர் பேசறார்னா ஆணையத்தின் செயல்பாடு சரியில்லைனுதான் அர்த்தம். கடந்த ஆட்சிக் காலத்துல கௌரின்னு ஒருத்தங்க தலைவரா இருந்தாங்க. அவங்க இருந்தப்ப எந்த ஒரு வழக்கானாலும் விசாரணையின் போது ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி கையெழுத்து வாங்கிடுவாங்க. தவிர வாக்குமூலத்தை வீடியோவும் எடுத்திடுவாங்க. ரங்கராஜ் விஷயத்துல அப்படி நடந்ததா தெரியலை. அந்தம்மாவை பதவிக்காலம் முடியற வரைகூட இருக்கவிடாம தொந்தரவு கொடுத்தே அனுப்பிட்டாங்க. அதெல்லாம் அரசியல். அரசியலை விடுங்க, தன்னுடைய கடமையை ஆணையம் முறையா செஞ்சாலே போதும்ங்க. பிரச்னைன்னு இங்க வர்ற பெண்களுக்கு ஓரளவுக்கு நல்லது நடக்கலாம்' என்றார்கள் அவர்கள்.

















