TVK : 'காரை மறித்த பெண் நிர்வாகி; நிற்காமல் சென்ற விஜய்! - என்ன நடந்தது?
”விஜய்யை அரசியல்வாதியாக நாங்கள் ஏற்கவில்லை” - சொல்கிறார் சரத்குமார்
நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நூறு நாள் வேலை திட்ட நாட்களை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. காந்தி பெயரை மாற்றிவிட்டு பொதுவான பெயர் வைக்கப்பட்டுள்ளது. காந்தியின் பெயரை நீக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. இதனை குறைகூறுவோர் வேலைவாய்ப்பு திட்டத்தால் என்ன பலன் என்பதை அறிந்து கொண்டு பேச வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தீப தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. தீபத்தூண் விவகாரத்தில் பிறரின் நம்பிக்கையை கெடுக்கும் விதமாகப் பேசக்கூடாது. தமிழக வெற்றிக் கழகம் என முழுவதுமாக சொன்னால் எனக்கு அது எந்த கட்சி எனத் தெரியவில்லை. த.வெ.க., மு.வெ.க., இ.வெ.க என்று சொன்னால்தான் தெரிகிறது. விஜய்க்கு யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று தெரியவில்லை. எதிர்த்துப் பேசினால்தான் அரசியல் என்ற எண்ணத்தில் அவர் பயணித்து வருகிறார்.
அவரிடம் பதில் இருக்காது
மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்தால்தான் செய்திகள் வரும் என, அவரிடம் யாரோ சொல்லிக் கொடுத்துள்ளனர். அதனால்தான் விஜய்யை பிரம்மாண்டமாக காட்டி அவரது கட்சியும் மக்கள் மத்தியில் பெரிய கட்சியாக காட்டப்பட்டு வருகிறது. விஜய்யை அரசியல்வாதியாக நாங்கள் ஏற்கவில்லை. அவரது கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்பது குறித்து அவரிடம் பதில் இருக்காது. அவரது பேச்சுகளுக்கு காலை முதல் மாலை வரை பதில் கூறலாம்.

ஊடகங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். அவர் சமீபத்தில் பேசிய போது வீடுகள் தருவதாக சொல்லியிருக்கிறார். அதை கொடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.கதான் பெரிய கட்சி. வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடன் இருப்பவர்களை போட்டியிட்டு வெற்றிபெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறேன். தேர்தலில் போட்டியிட எனக்கு கட்சித்தலைமை வாய்ப்பு கொடுத்தாலும், பிறருக்காக பிரச்சாரம் செய்வதில் களம் இறங்குவேன்.” என்றார்.
















