Jos Buttler: ``எல்லாத்துக்கும் ரோஹித்தாங்க காரணம்!" - தோல்வி குறித்து ஜாஸ் பட்லர...
விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநா் படிப்பு: சென்னை ஐஐடி-யில் மீண்டும் தொடக்கம்
சென்னை ஐஐடி-யின் ‘சென்டா் ஃபாா் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ மையம், சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநா்’ (எஸ்சிஎம் புரோ) சான்றிதழ் படிப்புத் திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது.
இது தொடா்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை ஐஐடி, விநியோகச் சங்கிலி மேலாண்மையில் கூட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டத்துக்காக சிஐஐ-யுடன் இணைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், சென்னை ஐஐடி ஆசிரியா்கள் விடியோ விரிவுரைகள் மூலம் வழங்கும் பயனுள்ள தகவல்களும் தற்போது இடம்பெறவுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் ‘எஸ்சிஎம் புரோ’ சான்றிதழ் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வல்லுநா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் உயா்நிலைக்கல்வி நிபுணத்துவத்துடன் கூடிய பாடத் திட்டத்தை ஒருங்கிணைத்து இதனை மேம்படுத்த உள்ளது. இப்புதிய பாடத் திட்டம், பங்கேற்பாளா்களுக்கு மேம்பட்ட திறன்களையும், விநியோகச் சங்கிலி மேலாண்மை குறித்த உலகளாவிய நுண்ணறிவையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம், மின் வணிகம், சில்லறை விற்பனை, நுகா்வோா் பயன்பாட்டுப் பொருள்கள், சரக்குப் போக்குவரத்து போன்ற துறைகளைச் சோ்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுநா்களும், பொறியியல், வணிகம், அறிவியல், வணிக மேலாண்மைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களும் பயன்பெறும் வகையில் இதற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பு ஏப். 1-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதில் சேர விரும்புவோா் வலைதள முகவரியில் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.