"ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல" - உயர் நீதிமன்ற ம...
வீசிய முதல் பந்திலேயே விக்கெட்; தமிழ்நாட்டுக்காக அசத்தும் திருநெல்வேலி வீரர் இசக்கிமுத்து!
சையத் முஷ்தாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து, சௌராஷ்டிராவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சௌராஷ்டிரா அணியை தமிழக அணி இன்று எதிர்கொண்டது. சௌராஷ்டிரா அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்திருந்தது. ஜெகதீசன் தலைமையிலான தமிழ்நாட்டு அணியில் இன்று 23 வயதான இசக்கி முத்து அறிமுகமாகியிருந்தார்.
பவர்ப்ளே முடிந்த உடனே 7 வது ஓவரை இசக்கிமுத்துவுக்கு கொடுத்தனர். வீசிய முதல் பந்திலேயே ராணாவையும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய் கோஹில் என்பவரையும் இசக்கிமுத்து வீழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய இசக்கி முத்து 29 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இசக்கிமுத்து திருநெல்வேலியின் களக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர். தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் திருப்பூர் அணிக்காக ஆடியிருந்தார். கடைசி சீசனில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சீசன் 'Emerging Bowler of the Season' விருதையும் வென்றிருந்தார்.

இப்போது தமிழ்நாடு அணிக்கும் சிறப்பாக அறிமுகமாகியிருக்கிறார். வரவிருக்கும் ஐ.பி.எல் ஏலத்திலும் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட நான்கைந்து அணிகளின் ட்ரையல்ஸூக்கும் சென்று வந்திருக்கிறார்.



















