Sheikh Hasina: வன்முறை டு மரண தண்டனை - வங்கதேச தந்தையின் மகளுக்கு நடந்தது என்ன?
'ஹீரோவா வேற யாரும் கிடைக்கலயா'னு கேட்டிருக்காங்க’- 1000 எபிசோடு மகிழ்ச்சியில் 'ஆனந்த ராகம்' அழகப்பன்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆனந்தராகம்' சீரியல் இன்று ஆயிரமாவது எபிசோடை எட்டியுள்ளது.
வாழ்த்துச் சொல்லி தொடரின் ஹீரோ அழகப்பனிடம் பேசினோம்.
''காரைக்குடிப் பக்கத்துல இருக்கிற கொத்தமங்கலம் எங்க ஊரு. நான் நடிக்க போறேன்னு சொன்னப்ப எங்க அம்மா 'அவன் விருப்பம்'னு சொல்லிட்டாங்க. அப்பா ரொம்பவே பயந்தார். திட்டினார். நடிக்கப் போய் தோத்தவங்கதான் நிறையனு சொல்றாங்க. பேசாம வேற நல்ல வேலை எதுவும் தேட வேண்டியதுதானே'ன்னார். பையன் எதிர்காலத்துல மேல இருந்த அக்கறை அது.
நான் வாய்ப்பு தேடிட்டிருந்த நாட்கள்ல 'உன் பையன் மெட்ராஸ்ல என்னப்பா செய்யறான்'னு வம்புக்குன்னே கேட்டவர்கள் உண்டு.
நடிப்பைத் தேடி சென்னை வந்து அலைஞ்சு திரிஞ்ச நாட்கள்ல சீரியல்ல சின்னச் சின்ன கேரக்டர்ல ரெண்டு நிமிஷம் வந்து போயிட மாட்டேனானு நினைச்ச நாட்கள் உண்டு. ஏன் அந்த மாதிரி கனவெல்லாம் நிறைய வந்திருக்கு.

ஒருவழியா முதல் தொடர் விஜய் டிவியில 'கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' ஒளிபரப்பாச்சு. அப்புறம் 'கனா காணும் காலங்கள்' உள்ளிட்ட மேலும் சில தொடர்கள் வந்து முகம் தெரியத் தொடங்குச்சு.
ஆனாலும் காமெடி, சப்போர்ட் கேரக்டர்கள்தான்.
ஆனா என்னை நடிகன்னு மக்கள் ஏத்துக்கிட்டாங்கனு நினைச்சப்ப சந்தோஷமா இருந்தது. 'என்னப்ப்பா பண்றான் உன் பையன்'னு அப்பாகிட்ட கேட்டவங்க கொஞ்சம் மாத்தி 'நல்லா பண்றாண்ப்பா உன் பையன்'னு சொல்லத் தொடங்கினாங்க.
இப்படிப் போயிட்டிருந்த சூழல்லதான் 'ஆனந்த ராகம்' சீரியல் வாய்ப்பு வந்தது. என்னது சன் டிவியில் நடிக்கிறயானு கேட்டாங்க. அவங்களுக்கு அடுத்த அதிர்ச்சி நான் ஹீரோவானது. `ஏன் வேற ஹீரோ கிடைக்கலியா’, 'என்னது ஹீரோ இவனா'னு நெஞ்சுவலி வராத குறையா பதட்டமானாங்க.

இப்படிக் கேள்வி மேல கேள்வி கேட்ட யாருக்கும் நான் இந்த இடத்துக்கு வருவதற்கு பின்னாடி பட்ட கஷ்டங்கள் எதுவும் தெரியாது. அதனால இந்த மாதிரிக் கேள்விகளை நான் பெரிசா எடுத்துக்கலை. ஹீரோவா நடித்த முதல் சீரியலே ஆயிரமாவது எபிசோடை தொடுற சந்தோஷத்துல இருக்கிற இந்த நேரத்துல எனக்கு இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளருக்கும் சேனலுக்கும் என் நன்றியைத் தெரிவிச்சுக்க விரும்பறேன்.
அதேபோல கிடைச்ச வாய்ப்பை சிறப்பா பயன்படுத்தி உழைச்சுட்டே இருக்கணும்கிறதுதான் என் ஆசை. இவன் ஹீரோவான்னு பதறினார்களே, அவங்களுக்கே இந்த ஆயிரமாவது எபிசோடை சம்ர்ப்பிச்சிடலாம்னு நினைக்கறேன்' என்கிறார்.


















