நெல்லை: தொடரும் கனமழை; அருவி சுற்றுலாத் தலங்கள் மூடல்; வாழை பயிர்கள் சேதம் #Rain...
``40 நாள் கூட ஆகல, அதுக்குள்ளயே ரோடு பொலந்துட்டு வந்துடுச்சி'' - குமுறும் அரசராம்பட்டு மக்கள்
"இந்த ரோட்டுல போறதே, இரண்டு மூன்று பஸ்கள் தான்..
எப்பவாது லோடு வாகனம் போகும்.
அதுக்கே இப்படின்னா, என்ன சொல்றது நீங்களே பாருங்க"
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு எனும் கிராமத்தில் புதிதாய் போடப்பட்ட தார்சாலையின் நிலையை நம்மை அழைத்து காட்டினார்கள்.
இந்த சாலை விரியூர் ஊராட்சி, அரசராம்பட்டு கிராமத்தில் தொடங்கி மையனூர் கிராமம் வரை 4 கிலோமீட்டர் புதிதாக போட்டுள்ளனர்.
தொடங்கிய இடத்திலிருந்து இருபது, முப்பது மீட்டர் தொலைவிலேயே குண்டும் குழியுமான உள்ளது.

இதைப்பற்றி அங்கு வசிக்கும் கிராமவாசிகளிடம் கேட்கும் போது அவர்களின் பதில்,
“என்னத்தங்க சொல்ல சொல்றீங்க! எவ்வளவு வருது, எவ்வளவு போகுது. எல்லாம் கமிஷன் தாங்க!, தோ! கிட்டதட்ட ஆறு வருசத்துக்கு அப்புறம் இந்த ரோடு இப்பதா போட்டானுவ, முழுசா இரண்டு மாசம் கூட வரல! அதுக்குள்ளவே இப்பபடினா, இனிமே என்ன பாடு படனுமோ! என்னத்த சொல்ல” என்று அவ்வளவு சலிப்பாக தன் வருத்தத்தை அவர் கூறினார்.
இன்னுமொருவர்,
“ ரோடுனா என்னங்க! அது ஒரு அடையாளம் இல்லைங்கலா! ஒரு ரோடுதாங்க ஒரு ஊரோட வளர்ச்சிய சொல்லுது!
புரியலனா, இப்படியே ஒரு ஊருக்குள்ள போங்க, அந்த ஊர்ல ரோடு மோசமா இருந்துச்சினா அந்த ஊர, இங்க இருக்குரவ எவனுமே கண்டுக்கலனு அர்த்தம். அந்த ஊருக்கு பஸ் இருக்காது, ஒழுங்கான பள்ளிக்கூடம் இருக்காது, கடகனினு ஏதும் இருக்காது. இன்னமும் சொல்ல போன அந்த ஊர்ல இருக்குறவங்க எல்லோருமே பக்கத்து ஊர நம்பிதான் இருப்பாங்க.

ஆன, ஒரு ஊர்ல சரியான போக்குவரத்து வசதியும், சாலை பராமரிப்பும் ஒழுங்கா இருந்தா அந்த ஊர்ல எல்லாமே இருக்கும். முக்கியமா கிராமம் அப்படினு வரும்போது ஊருக்குள்ள வருவதே ஒரு ரோடு தாங்க! தெருவுனு பாத்தா எல்லாம் சிமெண்ட் ரோடு தான் இருக்கும். அப்படிபாத்தா, ஒவ்வொரு கிராமத்துக்கும் “எப்பவாச்சும் தான்” அப்படின்ற அடிப்படையில போடப்பட்ட இந்த ரோடு ஒழுங்கா இல்லையினா என்ன பன்றது நீங்களே சொல்லுங்களேன்” என்று கேட்டார்.
கிராமப்புற வளர்ச்சியே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி. ஒரு தரமான சாலை இல்லாமல் இன்னல்களில் தவிக்கும் பல கிராமங்கள் நம் கண்களில் படுகின்றன. அது மட்டுமா?
மழைகாலங்களில் நீர் நிரம்பிய குழிகள், சேறும் சகதியுமாய் மாறி நிற்கும் மேடுகள் என ஒரு தரமற்ற சாலைகளில் பாதுகாப்பாய் யாரால் தான் பயணிக்க முடியும்?
தேர்தல் என்றால் தான் புதிய சாலைகள் ஆங்காங்கு போடுகிறார்கள். பிரசாரம் செய்யவும், ஓட்டு வாங்கவும், கொடுத்த வாக்கை காப்பாற்றவும் என்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது பத்தாண்டுகளுக்கு ஒருமுறையோ தான் இந்த கிராமப்புற சாலைகள் சீர்திருத்தம் நடைபெறுகிறது.

அப்படிபட்ட சூழலில், போடப்பட்ட இந்த புதிய சாலையின் அவலம்தான் இது! என்று அவர்கள் குறிப்பிட்டு பேசுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
சாலை அமைக்கும் போது நீங்கள் பார்த்தீர்களா? சரிவர அவர்கள் சாலையை அமைத்தார்களா? என்ற கேள்விக்கு,
"இப்படி கேட்டா என்னப்பா சொல்லட்டும்!
கிட்டதட்ட இந்த ரோடு போடவே இரண்டு மாசம் இழு இழுனு இழுத்துட்டாங்க. இழுத்த இழுவுக்கு முழுசா ரண்டு மாசம் கூட வரல! இதுல, ஒரு ஒருவாரத்துக்கு மேல வெறும் ஜல்லி கல்லு மேலத்தா அந்த பஸ்லாம் போயிட்டு இருந்துச்சி. அப்புறம் அப்படி இப்படினு 10-15 நாளுல அதுக்கு மேல மண்ணு கொட்டி அப்புறம் அப்படியே கிடந்துச்சி. விட்டு விட்டுத்தாப்பா போட்டங்க. ஆனா, தார் ஊத்த ஆரம்பிச்சதும் 2-3 நாளுக்குள்ளயே எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சிப்பா. இதுல எப்படி ஒழுங்கா போட்டாங்கனு சொல்றது?” என்று அவர் கூறினார்.
இன்னொருவர் கூறுகையில்,
"அவர்கள் நாள்களை இழுத்து இழுத்து செய்தலும், இரண்டு நாளிலேயே வேலையை நன்றாகவே முடித்திருந்தாலும்,
ஒரு முறைக்கு இருமுறை நீர் ஊற்றி ரோடு போடுவதற்கு என்ன என்ன வேலைகள் இருக்கிறதோ எல்லாவற்றையும் சரிவர செய்தாலும்,
ஒரு பஸ் போனதுக்கு இப்படி பிளந்து குண்டும் குழியும் ஆகுமா? ஒரு நியாயம் வேண்டாமா?" என்று மன வருத்தத்தை கொட்டினார்.

இதை பற்றி மீண்டும் உரிய அதிகாரிகளிடம் தெரியபடுத்த முயற்சி செய்தீர்களா? என்ற கேள்விக்கு,
“எங்க போய் யார்கிட்டப்பா சொல்ல சொல்ற! நமக்கு கொடுத்த ஒரு வேலைய நல்லா சுத்தமா நாம செய்தோம் அப்படினா ஒரு சந்தோஷம் நமக்கு இருக்கும்.
ஆனா, அது நம்ம வேலையா இருக்கனும். தோ! இந்த மாதிரி யாருக்கோனு நினைச்சிட்டு இப்படி ரோடு பொட்டுட்டு போயிட்டா, மறுபடியும் அவுங்க வந்து ரோடு எப்படி இருக்கு? நல்லா இருக்கா? தரமா இருக்கா அப்படினுலாம் யார் பாக்குறாங்க?
ஏதோ, கொடுத்த நேரத்துக்குள்ள முடிச்சிட்டா போதும்னு பாக்குறாங்க. இதுவே பெரிய பெரிய ஊர்னா விடுவாங்களா? இது சும்மா கிராமம் தானே! இங்க யார் கண்டுக்க போறானுத்தா இப்படிலாம் பன்றாங்களோ என்னவோ” என்று அவர் பேசியதில் புரிந்தது என்னவோ, நாம் செய்யும் ஒரு வேலையின் தரமானது பிற்காலத்தில் நம் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று நினைத்து செய்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏதும் யாருக்கும் வரப்போவதில்லை அல்லவா.

மேலும் இது தொடர்பான அதிகாரிகள் மீண்டும் இவ்விடத்தை ஆய்வு செய்து குண்டும் குழியுமான இடங்களையும், ஆங்காங்கு பிளவுபட்டு கிடக்கும் இடத்தையும் மீண்டும் ஒரு முறை தரமாக அமைத்து தர மக்கள் வலியுறுத்துகிறார்கள்.














