செய்திகள் :

Amur Falcon: 150 கிராம்தான் எடை; இந்தியா டு சோமாலியா - 5 நாள்களில் 5000 கி.மீ பயணித்த அமூர் பருந்து

post image

பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர் வலசை செல்வதை நாம் அறிவோம். இந்த வலசை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சாகசங்கள் நிறைந்தது, சவாலானது, அதீத பொறுமையையும் உழைப்பையும் விடா முயற்சியையும் கோருவது. அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்தியாவிலிருந்து புறப்பட்ட அமூர் பருந்துகளின் வலசை.

அமூர் பருந்தின் சாகச பயணம்

Amur Falcon
Amur Falcon

வனவிலங்கு விஞ்ஞானிகளால் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட மூன்று அமூர் பருந்துகளில் ஒன்று, இந்தியாவிலிருந்து புறப்பட்டு 5 நாட்களில் 5000 கி.மீ பயணித்து, சோமாலியாவை சென்றடைந்துள்ளது. அதாவது, ஒரு நாளுக்கு 1000 கி.மீ பயணித்துள்ளது. 5 நாட்களில் சிறிய இடைவேளை கூட இல்லாமல் அவை பயணித்துள்ளன.

அபபாங் என்ற ஆண் பருந்து, அலாங் என்ற இளம் பெண் பருந்து, மற்றும் அஹு என்ற பெண் பருந்து ஆகிய மூன்றும் அரேபியக் கடலைக் கடந்து ஆப்பிரிக்காவை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளன. இந்த நீண்ட பயணம் அவற்றின் வலிமையையும் விடாமுயற்ச்சியையும் வியக்க வைத்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாகு, சமூக வலைதளமான X-ல் இந்தச் சாதனை குறித்து பதிவிட்டுள்ளார். அபபாங் இதற்கு முன்னரும் பலமுறை இதுபோன்ற வலசைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அபபாங் இப்போது கிட்டத்தட்ட 5400 கி.மீ. தூரம் பறந்துவிட்டது, அதற்கு 5 நாட்கள் 15 மணிநேரம் ஆனது" என்று சாஹு தனது பதிவில் எழுதியுள்ளார்.

அமூர் பருந்து கண்காணிப்புத் திட்டம்

வனவிலங்கு ஆய்வு நிறுவனத்தின் தலைமையில் நடத்தப்பட்ட மணிப்பூர் அமூர் பருந்து கண்காணிப்புத் திட்டத்தின் (கட்டம் 2) ஒரு பகுதியாக, நவம்பர் 11-ல் இந்த மூன்று பறவைகளுக்கும் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டன.

செயற்கைக்கோள் வரைபடத்தில் ஆரஞ்சு நிற குறியீட்டுடன் காணப்படும் அபாபாங், வெறும் 150 கிராம் எடை கொண்டிருந்த போதிலும், அதன் பறக்கும் திறமையால் கண்காணிப்பாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அபபாங்கின் வலசை

கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட உடனேயே அபபாங் பயணத்தை தொடங்கியது. மத்திய இந்திய பகுதி வழியாக வெறும் 76 மணி நேரத்தில் 3000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்தது. மணிப்பூர் காடுகளிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா வரையிலான இந்த நீண்ட பயணத்தில், விஞ்ஞானிகள் மூன்று பறவைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மணிப்பூர் மக்களால் அரவணைக்கப்படும் அமூர் பருந்துகள்

அமூர் பருந்துகள் (Amur Falcon) உலகின் நீண்ட தூரம் பறக்கும் வலசைப் பறவைகளில் ஒன்று. இவை ஒவ்வொரு ஆண்டும் சைபீரியா, சீனா போன்ற இடங்களிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு 20,000-30,000 கி.மீ. தூரம் பறந்து செல்லும் போது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர் (குறிப்பாக தாமெங்லாங் மாவட்டம்) ஆகிய இடங்களில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 30-45 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கும். இங்கு இவை ஆயிரக்கணக்கில் கூட்டமாகத் தங்கும். வேடையாடுதல் காரணமாக ஒரு காலத்தில் அழிவின் விழிம்பில் இருந்த அமூர் பருந்துகளுக்கு மணிப்பூர் மக்கள் பாதுகாப்பான புகலிடமாகத் திகழ்ந்தனர்.

2012ம் ஆண்டு வரை மணிப்பூர் மக்கள் இந்த பறவைகளை அதிக அளவில் வேட்டையாடினர். இது வனத்துறையால் பாதுகாப்பட்ட பறவை இனமாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், இவற்றை வேட்டையாடுவது அவர்களின் கலாச்சாரத்துடன் இணைந்திருந்தது. ஆனால் லட்சக்கணக்கில் பறவைகள் கொல்லப்பட்டதனால் உலக அளவில் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

2012-2013 முதல், இந்தியாவின் வனத்துறை, Wildlife Institute of India (WII), சுற்றுச்சூழல் அமைச்சகம், உள்ளூர் NGOக்கள், கிராம சபைகள், இளைஞர் குழுக்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் கிராமங்களில் பெரிய அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

கொத்துகொத்தாக அவை கொல்லப்பட்ட தாமெங்லாங்கில் இப்போது ஆண்டுதோறும் அமூர் திருவிழா நடக்கிறது. அன்று வேட்டையாடியவர்கள் இன்று பாதுகாக்கும் தன்னார்வலர்களாக மாறியிருக்கின்றனர். இப்போது அங்கே கொல்லப்படும் பறவைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பூஜ்ஜியம். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் பறவைகள் பாதுகாப்பாக தங்கியிருந்து செல்கின்றன!

சீனா: "இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம்" - சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு!

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் குறித்து பேசியதாக பரபரப்பாக பேசப்... மேலும் பார்க்க

பாகுபலி ராக்கெட்: `இந்தியாவுக்கு மற்றொரு பெருமை' - விண்ணில் வென்ற செயற்கைகோள் குறித்து இஸ்ரோ தலைவர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மாலை 5.26 மணிக்கு CMS-03, LVM3-M5 செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு எல்.வி.எம் 3 - எம்5 ராக்கெட் விண்ணை நோக்கிப் புறப்பட்டது.43.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 18 ஆயிரம்... மேலும் பார்க்க