80-ல் நுழைந்த ப.சிதம்பரம், நளினி சிதம்பரம்; கார்த்தி சிதம்பரம் தந்த ஸ்பெஷல் பரி...
BB Tamil 9 Day 73: சான்ட்ராவின் மனச்சிக்கல்; சுழன்று அடித்த விக்ரம் - அரோரா - 73வது நாளின் ஹைலைட்ஸ்
இந்த எபிசோடின் டான்ஸ் டாஸ்க் உண்மையில் சிரமமானது. வீடியோவில் நடனமாடுபவர்களை வைத்து அந்தப் பாடலை கண்டுபிடிப்பதென்றால், அந்த நடன அசைவுகள் பிரபலமானதாக இருந்தால்தான் முடியும்.
பாடலைக் கண்டுபிடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். சான்ட்ராவின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது சக போட்டியாளர்களுக்கு இமாலய சாதனை.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 73
நள்ளிரவு 12.30 மணி. ‘தல’ ரூமில் இருந்து கொண்டு அரோவை உரத்த குரலில் கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தார் சபரி. அது சூப்பர் டீலக்ஸ் அறையில் படுத்திருந்த சான்ட்ராவைத் தொந்தரவு செய்ததுபோல. உடனே படுக்கையைத் தூக்கிக்கொண்டு வெளியே கார்டன் ஏரியாவில் படுத்துவிட்டார்.
‘அய்யய்யோ.. கரண்ட் கம்பியைத் தெரியாம தொட்டுட்டமே’ என்று சபரியும் அரோவும் அலறினார்கள். துணைக்கு வினோத்தை அழைத்துக் கொண்டு வெளியே போய் மன்னிப்பு கேட்டார் சபரி.
ஒப்பாரி வைப்பதற்கு ஒரு சாக்கு கிடைத்தால் சான்ட்ரா அதை விட்டு வைப்பாரா? ‘உங்க கிட்ட பேச விருப்பமில்லை. எத்தனை நாள் சொல்றேன்.. இப்ப என்ன டைம் தெரியுமா?” என்று எரிச்சலுடன் கேட்டு விட்டு போர்த்திக்கொண்டார். “உங்களை வெளிய படுக்க வைக்கறது எங்க நோக்கமில்ல. இனிமே சத்தம் வராது. உள்ளே படுங்க” என்று வினோத் கெஞ்சியும் அம்மணி வரவில்லை.
மறுநாளும் இந்தப் பஞ்சாயத்து தொடர்ந்தது. “எப்படா சான்ஸ் கிடைக்குன்னு வெயிட் பண்றாங்க” என்று சான்ட்ரா பற்றி சுபிக்ஷா சொல்ல, “பண்ணட்டும். ஆனா சப்டிலா பண்ணா பரவாயில்ல. பப்பரப்பேன்னு தெரியுது” என்று சிரித்தார் விக்ரம்.
சான்ட்ராவின் சோகத்திற்கு வடிகாலாக பாருவிற்குப் பதிலாக கிடைத்திருப்பவர் அமித். அவரிடம் “பாருங்க.. என்னெல்லாம் அநியாயம் பண்றாங்க. மனசாட்சி இல்லையா. எத்தனை நாளா சொல்றேன்.. நைட்ல பேச வேணாம்ன்னு.. வெளியே போய் பேசலாம்ல” என்றெல்லாம் சான்ட்ரா சொல்ல “நான் கூட சொன்னேன். சத்தம் போடாதீங்கன்னு” என்று பின்பாட்டு பாடினார் அமித். அவருக்கும் வேறு வழியில்லை. சமாதானப்படுத்தாவிட்டால் பின்னர் விஜய் சேதுபதியிடம் பாட்டு வாங்க வேண்டியிருக்கும்.

‘சான்ட்ராவின் பிரச்னைதான் என்ன.. இணைப்பில் இருங்கள். விவாதிப்போம்’..
“அவங்களுக்கு பிடிச்சவங்கன்னா எது பண்ணாலும் பிரச்சினையில்ல. பிடிக்காதவங்கன்னா எது பண்ணாலும் பிரச்சினை” என்று சான்ட்ரா பற்றி கம்மு சொல்ல “ஆமாம்.. நம்மள அவங்களுக்குப் பிடிக்கலை… இது ஒரு கேம் ஷோ.. நைட் ஆனா எல்லோரும் போர்த்திட்டு தூங்கினா என்ன சுவாரசியம் இருக்கு? இந்த இடம் எல்லோருடனும் ஒத்துப்போற இடம். ஒருத்தரை மன்னிக்கறது எத்தனை அழகான விஷயம்? அவங்களுக்கு ஏன் இதெல்லாம் தெரியல” என்று புலம்பினார் கனி.
மறுபடியும் சபரி சென்று மன்னிப்பு கேட்க, “எனக்கு கேக்கறதுக்கு ஒண்ணுமில்லை. சிடுமூஞ்சி, கேம் ஆடறா.. ன்னு என்ன வேணா சொல்லிக்கங்க.. நான் ஒண்ணும் உங்க கிட்ட கத்தலையே.. எனக்குப் பேச விருப்பமில்லை” என்று உரையாடலைத் துண்டித்து உடனே கேட்டை சாத்தினார் சான்ட்ரா.
சான்ட்ராவின் மனதில் அப்படி என்னதான் குறை இருக்கிறது என்பதை ஆராய விரும்பினார் வினோத். வீட்டு ‘தல’யாக எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி போல. இல்லையென்றால் வீக்கெண்ட்டில சான்ட்ராவை அழவைத்த தண்டனைக்கு திட்டு வாங்க வேண்டும். எனவே கனியுடனான பிரச்சினையை தீர்க்க முனைந்தார்.
“கனியை கூட்டிட்டு வரேன். பேசறீங்களா..” எனறு வினோத் சொல்ல அரைமனதாகத் தலையாட்டினார் சான்ட்ரா. ஆனால் இந்த வழக்கு தன் மேலேயே திரும்பப் போகிறது என்று வினோத்திற்கு அப்போது தெரியாது. கனி வந்தவுடன் “அவங்க என் முகத்தைப் பார்த்து பேசலை. ஒரு வீட்ல இருந்துக்கிட்டு இப்படிப் பண்றது சரியில்ல. அதைத்தான் நான் சொன்னேன்.. அவ்வளவுதானே.. நான் போகட்டுமா?’ என்று கிளம்பி விட்டார் கனி.

கனியை விட்டு விட்டு வினோத்தின் மீது வண்டியை ஏற்றிய சான்ட்ரா
அதுவரை அமைதியாக இருந்தார் சான்ட்ரா. “ஏன் ச்சீ என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள். அது என்னைப் புண்படுத்திவிட்டது’ என்று கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. “ஒருத்தர் சிங்க்ல கழுவிட்டு இருந்தாங்கன்னா.. அவங்களை கொஞ்சம் தள்ளி போகச் சொல்லலாம். அவ்வளவுதானே?” என்று வினோத் கேட்க, இப்போது பந்தை அவர் பக்கம் திருப்பிய சான்ட்ரா “இந்த டோன்ல இவர் கேட்கலை. ரொம்ப ஹார்ஷா இருந்தது” என்று சொல்ல வினோத்திற்கு அதிர்ச்சி.
சாட்சியாக இருந்த அமித்திடம் “பாருங்க. இப்ப பிளேட்டை என் பக்கம் திருப்பிட்டாங்க.. நான் சாதாரணமாத்தான் சொன்னேன். வீடியோல ரெக்கார்ட்டு ஆகியிருக்கு” என்று வினோத் சொல்ல “அப்ப நான் பொய் சொல்றேனா.. என் குழந்தைங்க மேல சத்தியமா நான் பொய் சொல்லல” என்று மிகையாகப் பொங்கினார் சான்ட்ரா.
‘அய்யய்யோ.. இது சரியான பைத்தியம் இல்ல.. சரியாகாத பைத்தியம்’ என்கிற மாதிரி தெறித்து ஓடினார் வினோத். “எனக்கு வெளியே போகணும். நான் அமைதியா இருக்கறது பிரச்சினையா?” என்று மீண்டும் ஒப்பாரியை சான்ட்ரா ஆரம்பிக்க ‘நான் வந்து தெரியாம மாட்டிக்கிட்டேனே’ என்கிற மாதிரி சங்கடத்துடன் உட்கார்ந்திருந்தார் அமித்.
அதுவரை நாள் சான்ட்ராவின் ‘தோழியாக’ (?!) இருந்த பாருவிற்கே இப்போது சலித்து விட்டது போல. அவரும் சான்ட்ராவைப் பற்றி புறணி பேச ஆரம்பித்து விட்டார். “சான்ட்ராவை சும்மா விட்டாலே போதும்.. இந்த அமித் சும்மா இல்லாம போய் போய் பேசறார்” என்று சலித்துக் கொண்டார் பாரு.

சான்ட்ராவின் மனச்சிக்கலுக்கான காரணம் என்ன?
“இதெல்லாம் அனுதாபம் தேடற டெக்னிக். நம்ம ஒண்ணு பேசினா அதுல இருந்து இன்னொன்னை கண்டுபிடிச்சு கேள்வி கேட்டு சுத்த விடறாங்க.. பிரச்சினையை தீர்க்காம இன்னமும் வளர்க்கறாங்க” என்று வீட்டிலுள்ளவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இதுவெல்லாமே உண்மைதான். ஆனால் வார இறுதியில் வரும் விஜய் சேதுபதி ‘பொலிட்டிக் கரெக்னஸூடன்’ பேசுவதாக நினைத்துக்கொண்டு என்ன சொதப்பப் போகிறாரோ? “ஏங்க.. ஒருத்தர் உக்காந்து அழுதுட்டு இருக்காங்க.. நீங்க எல்லாம் வேடிக்கை பாக்கறீங்க.. பார்க்க நல்லாவா இருக்கு.. என்னதிது” என்று கடிக்கப் போகிறாரோ?
சான்ட்ராவிடம் அடிப்படையிலேயே ஏதோவொரு மனச்சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. இப்படி பிக் பாஸில் வந்து தன்னையே அவர் எக்ஸ்போஸ் ஆக்கியிருக்க வேண்டாம்.
‘பெனாயில் ஊத்தி வீட்டைக் கழுவணும்” என்று ஓவரான பில்டப்புடன் நுழைந்தார். பிரஜின் இருக்கிற வரையில் அந்த தன்னம்பிக்கையுடன் ஆடினார். சீக்ரெட் டாஸ்க் சற்று ஓவராக போனாலும் சிறப்பாக முடித்தது நன்றாகவே இருந்தது. ஆனால் கணவரோடு இணைந்து கொண்டு சக போட்டியாளர்களின் மீது வன்மத்தைக் கொட்டினார்.
ஆனால் இந்த கான்பிடன்ஸ் எல்லாம் பிரஜின் வெளியே போனதுடன் பெருமளவு கரைந்து போனது. திவ்யாவை சந்தேகப்பட்டு புலம்பிக் கொண்டேயிருந்தார். பிறகு கனி, சுபிக்ஷா, சபரி, வினோத் என்று கண்ணில் பட்ட அனைவரையும் கடித்துக் கொண்டேயிருக்கிறார்.

இவராக ஒரு கற்பனை எதிரியை உருவகித்துக்கொண்டு ‘நான் என்ன பாடு படறேன் பார்த்தீங்களா.. மக்களே..’ என்று அனுதாப அலையை ஓரமாகச் சென்று அழுவதீன் மூலம் உருவாக்குகிறார். ‘இது என்னடா வம்பா போச்சு’ என்று யாராவது பிரச்சினையை தீர்க்க பேச வந்தால் அவர்கள் மீதும் பாய்கிறார்.
பிரச்சினையை இழுத்துக்கொண்டே போகிறார். அப்போதைக்கு நட்பாக இருக்கிறவர்களிடம் .. ‘பார்த்தியா.. பாரு.. பார்த்தீங்களா அமித்.. நான் என்ன பண்ணேன்” என்று ஒப்பாரி வைத்து அனுதாபம் தேடுகிறார். தன் பின்னால் அனைவரும் வந்து கெஞ்சி சமாதானம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
எந்தவொரு விளையாட்டிலும் அதைக் கெடுப்பதற்கென்றே சிலர் இருப்பார்கள். சிலர் வம்பிழுத்து கெடுப்பார்கள். சிலர் சிறிய அடிக்கே பலமாக அழுது அனுதாபம் தேடுவார்கள். சான்ட்ரா அப்படியொரு வகை. இந்த விளையாட்டிற்கு அவர் துளியும் பொருத்தமில்லை. உடனே அவரை வெளியேற்றுவதுதான் இந்த ஆட்டத்திற்கும் பார்வையாளர்களுக்கும் நல்லது.
சுழன்று சுழன்று ஆடிய விக்ரம் மற்றும் அரோ - பெண்டு கழற்றிய ஜிங்குச்சா
டான்ஸ் மாரத்தான் போட்டி தொடர்ந்தது. பிரஜினி்ன் சட்டையைப் போட்டுக் கொண்டு தயாராகிவிட்டார் சான்ட்ரா. (அதை துவைப்பாரோ, இல்லையோ?!)
ஒரு அணியில் உள்ள இருவர், ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு சென்று ஒலிபரப்பாகும் பாடலுக்கு ஏற்ப நடனமாட வேண்டும். மீதமுள்ள இருவர், டிவி முன்னால் உட்கார்ந்து நடன அசைவுகளை வைத்து அந்தப் பாடல் எதுவென்று கண்டுபிடிக்க வேண்டாம். உள்ளே இருப்பவர்களுக்கு பாடல் சத்தம் கேட்காது.
‘இதென்ன ஈஸியான கேம்’ என்று தோன்றலாம். பாடல் பார்வையாளர்களுக்கு கேட்கும் என்பதால் அப்படி இருக்கும். ஆனால் சத்தமே இல்லாமல் கண்டுபிடிப்பது சிரமம்தான். பிரபலமான பாடலாக இருந்து, அதன் நடன அசைவுகளும் பிரபலம் என்றால் மட்டுமே எளிது.

‘ஆடினே இருப்போம்’ அணியில் இருந்து முதலில் சென்ற விக்ரம் மற்றும் அரோவிற்கு முதல் பாடலே சோதனையாக அமைந்தது. தக் லைஃப் படத்திலிருந்து ‘ஜிங்குச்சா… ஜிங்கு ஜிங்கு சா’ என்பதற்கு என்ன ஸ்டெப் காட்டி உணர்த்த முடியும்?!
என்றாலும் விக்ரமும் அரோவும் சுழன்று சுழன்று ஆடினார்கள். பாவம், விக்ரம், அத்தனை பெரிய உடலை வைத்துக் கொண்டு துணிந்து உள்ளே சென்று விட்டாலும் பெரும்பாலும் சோர்ந்து விடாமல் அரோவிற்கு ஈடு கொடுத்தார். அரோ சோர்ந்தாலும் கூட இவர் சமாளித்து ஆடினார். என்னவொன்று, பெண்கள் தங்களின் முந்தானையை அடிக்கடி சரி செய்வது போல, கழன்று விடும் பேண்ட்டை அடிக்கடி இழுப்பதுதான் டாஸ்க்கை விடவும் பெரிய சவாலாக இருந்தது.
பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய FJ - சுபிக்ஷா
பாடல் வரியில் ‘ஜிங்குச்சா’ என்று வருவதால் விக்ரமும் அரோவும் ஜால்ரா அடிப்பது போல் காட்டினார்கள். அதை வைத்தாவது சுபியும் FJவும் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அவர்களால் இயலவில்லை. சிம்புவின் பாடல்களில் இருந்து FJ வெளியே வரவில்லை. ‘நலம்தானா?’ முதற்கொண்டு சிம்பு நடித்த படமாகவே சொல்லிக் கொண்டிருந்தார். (ஆனால் தற்செயல் ஆச்சரியமாக தக் லைஃபில் சிம்பு நடித்திருந்தார்).
பாடலைக் கண்டுபிடிக்கும் வரை அது ரீப்பீட் மோடில் ஓடும் என்பதால் விக்ரமும் அரோவும் உண்மையிலேயே பெண்டு கழன்றது. விக்ரமிற்கு பேண்ட். ‘மாமா.. டிரவுசர் கழண்டுச்சே’ பாடலை ஒலிபரப்பியிருந்தால் கூட பொருத்தமாக இருக்கும். இவர்கள் தொடர்ந்து ஆடுவதை ‘ஆடினே இருப்போம்’ என்கிற போர்டை காட்டுவதின் மூலம் காமிரா குறும்பு செய்தது.

இந்த டாஸ்க் நீண்டு கொண்டே போக ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ பாடலை டைமிங்கில் பாடி கிண்டலடித்தார். வினோத். ‘ஜிங்குச்சா.. ஜிங்குச்சா.. மஞ்சக் கலரு ஜிங்குச்சா’ என்று ஏறத்தாழ நெருங்கி விட்டார் கனி. அதை வைத்தாவது இவர்கள் கண்டுபிடித்திருக்கலாம். ம்ஹூம்..
டிவியை உன்னிப்பாக பார்த்தபடி அமர்ந்திருந்த சுபிக்ஷாவின் கவனத்தை திசை திருப்ப ‘கடலோடி..நான்.’ பாடலை டைமிங்கில் பாடி கிண்டலடித்தார் பாரு. (இவருக்கு ஒரு நல்ல ஆடை வடிவமைப்பாளர் கிடைத்திருக்கலாம்.. ம்..)
ஒரு மணி நேரம் ‘ஜிங்குச்சா’ ஓடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் 2-வது பாட்டு ஓடியது. ‘அப்படிப் போடு’ பாடலின் ஸ்டெப் பிரபலமானது என்பதால் சுபி எளிதாக கண்டுபிடித்து விட்டார்.
‘வெறுப்பேத்துவதுதான் என் கேம்’ - பாருவின் சுயவாக்குமூலம்
மூன்றாவது பாடல் ‘அவள் வருவாளா’ - இத்தனைக்கும் சூர்யாவின் ஸ்டெப்பை விக்ரமும் அரோவும் சரியாக ஆடிக் காட்டினார்கள். ஆனால் FJ-வோ ‘கமான்.. கமான்..’ பாடலாக இருக்குமோ என்று தவறாக யூகித்துக் கொண்டிருந்தார். இந்தப் பாடலும் ஒரு மணி நேரம் ஓடியது. (பாவமய்யா. விக்ரம்!)
4வது பாடல் ‘டிப்பட்டு டிப்பட்டு அம்சமா அளகா’ என்று ஆரம்பித்தது. இத்தனை சிக்கலான பாடலை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டார்கள். “என்னடா இவங்க.. ஒண்ணு 30 செகண்ட்ல கண்டுபிடிச்சடறாங்க.. இல்லைன்னா ஒரு மணி நேரம் ஆக்கறாங்க” என்று ஜாலியாக சலித்துக்கொண்டார் விக்ரம்.

பாரு இருக்குமிடத்தில் கலகம் இல்லாமல் இருக்குமா? டாஸ்க் ஆடுபவர்களை ஜாலியாக டைவர்ட் செய்வது வழக்கம்தான். ஆனால் அதை மிகையாகச் செய்தார் பாரு. ஆடுபவர்களைத் தாண்டி திவ்யாவையும் வெறுப்பேற்ற ஆரம்பித்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று நடனம் ஆடி பாரு வெறுப்பேற்ற, வினோத்திடம் புகார் செய்தார் திவ்யா. இதனால் வினோத்திற்கும் திவ்யாவிற்கும் இடையே சண்டை. பாருவின் கைங்கர்யம்.
கடைசியாக 5வது பாடல். ‘மட்ட.. மட்ட..’ பாடல் ஒலிக்க, சுபிக்ஷா விழிக்க, ‘மஞ்சள் கலர் புடவை ஒரு க்ளூவா இருக்கலாம்’ என்று பாரு எடுத்துக்கொடுக்க உடனே கண்டுபிடித்தார்கள். மறுபடியும் முதல் பாடல் ‘ஜிங்குச்சா’ ஒலித்தது. இந்த முறை சுபிக்ஷா உடனே கண்டுபிடித்துவிட்டார்.
பாவம், விக்ரமும் அரோவும் வியர்த்து களைத்து சோர்ந்து போய் ஆக்டிவிட்டி ஏரியாவிலிருந்து வெளியே வந்தார்கள். 2 மணி நேரம் 38 நிமிடங்களுக்கு நடன சாதனை செய்திருப்பதாக அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தார் பிக் பாஸ். ‘அவள் வருவாளா’ பாடலை மட்டும் சுபி மற்றும் FJ-வால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மற்ற அணிகள் எளிதாகக் கண்டுபிடித்து விட்டன.
இந்த சீசன் முடியும் வரை பாரு - கம்மு - அம்மு டிரையாங்கிள் டிராமா முடிவிற்கு வராது போலிருக்கிறது. “எனக்கு என்ன தோணுதுன்னா.. நீ இன்னமும் அவளை மறக்கலை போல” என்று பாரு பாயைப் பிறாண்ட “எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும். அதனாலதான் பேலன்ஸ் பண்ணிட்டு போறேன். ஆனா ஃபீலிங்க்ஸ் உன் மேலதான்” என்று கம்மு பம்ம, பாரு விடாமல் பிறாண்ட “உனக்கென்ன பைத்தியமா.. அப்படின்னா போயிடு” என்று கம்மு சீற, ரிவர்ஸ் கியர் போட்டார் பாரு. (முடியல!).

தன்னிடம் திவ்யா சண்டை போட்டதை வினோத் சொல்ல “நான் அப்படித்தான் வெறுப்பேத்துவேன்.. அதுதான் கேம்” என்று ஆமோதித்தார் பாரு. நேற்றிரவு சான்ட்ரா செய்த கலவரம் காரணமாக, சபரி டீம் படுக்கையை வெளியே போட்டுக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.
சான்ட்ராவின் பொசசிவ் ஒரு மாதிரி இருக்கிறதென்றால், பாருவின் பொசசிவ்னஸ் இன்னொரு மாதிரி இருக்கிறது. நல்ல கூட்டணி.

















