வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலிய...
BB Tamil 9 Day 75: அலப்பறை செய்த சான்ட்ரா; பாருவை வென்ற திவ்யா - 75வது நாளில் நடந்தது என்ன?
ரயில் பயணங்களில் பக்கத்து இருக்கைக்காரரிடம் சில மணி நேரங்கள் பழகி விட்டாலே நமக்கு முகதாட்சண்யம் ஏற்பட்டு விடுகிறது. அவருடைய தவறுகளை சகித்துக் கொள்கிறோம்.
ஆனால் பிக் பாஸ் வீட்டில் பல நாட்கள் பழகிய ஒருவருடன், ஒரு சிறிய பிரச்னைக்காக பரம்பரை விரோதி மாதிரி எப்படி சண்டை போட முடிகிறது என்று தெரியவில்லை. கவனத்தை ஈர்க்கவா, கேம் ஸ்ட்ராட்டஜியா, அந்த வீடு அப்படி ஆக்கி விடுமா என்பதும் புரியவில்லை.

‘இந்தத் தெருவுல சுருட்டை முடியா, சிவப்பா ஒருத்தர் இருப்பாரு.. அவரைத் தெரியுமா.. ஏண்டா தெரியாது?’ என்று கேட்டு வடிவேலுவை ஒருவர் அடிக்கும் காமெடி காட்சி உண்டு. அதைப் போல், சம்பந்தமில்லாமல் பழி போட்டு விட்டு, கல்லுளி மங்கன் மாதிரி அமர்ந்திருந்த சான்ட்ராவைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.
இத்தனை மனச்சிக்கல் உள்ள ஒருவர், பிக் பாஸ் போன்ற ரத்தபூமிக்கு வந்து தன்னையே எக்ஸ்போஸ் செய்து கொள்ளும் தவறை செய்திருக்கவே கூடாது.
‘ஜானி..ஜானி.. எஸ்.. பாப்பா..’ என்று பாட்டு டாஸ்க்கில் விளையாடுபவர்களின் கவனத்தைக் கலைப்பதற்காக பாடியதை, தன்னுடைய குழந்தைகளை கிண்டலடிப்பதற்காக பாடியது என்று எப்படி ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்? எத்தனை யோசித்தும் இதற்கு விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சான்ட்ரா இந்தக் குரூரமான விளையாட்டை மிக அநாயசமாக செய்தார்.
“நானும் இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. நான் அப்படிச் சொல்வேனோ.. அத்தனை கேலவமானவளா.. ஒருத்தரை பிடிக்கலைன்னா.. இப்படியா சொல்வாங்க. சான்ட்ரா.. என் கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்று கனி ஆணித்தரமாகவும் தார்மீகமான கோபத்துடனும் கேட்கும் போது ரோபோ போல் முகத்தை வைத்துக் கொண்டு ‘என்ன கையப் பிடிச்சு இழுத்தியா?’ என்கிற காமெடியை சீரியஸாக செய்து கொண்டிருந்தார் சான்ட்ரா.

“அப்படி என்ன பாட்டு நான் தப்பா பாடினேன்.. சொல்லுங்க?”
“அது தெரியாது.. ஆனா தப்பா பாடினீங்க.. எனக்கு அப்படி ஃபீல் ஆச்சு. மன்னிப்பு கேட்க முடியாது”
இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. “யார் கொடுக்கற இடம் இது. எங்கே சொல்லணுமோ.. அங்க சொல்லி மன்னிப்பு கேக்க வெக்கறேன்” என்று சபதம் ஏற்று விட்டுச் சென்றார் கனி. ‘பார்க்கலாம்’ என்று இறுக்கமான முகத்துடன் அடம்பிடித்து அமர்ந்திருந்தார் சான்ட்ரா.
ஆக, இந்த வார விசாரணையில் இதுவொரு முக்கியமான புகாராக இருக்கும். விசே என்ன செய்யப் போகிறார்?
பொழுது விடிந்தது. சான்ட்ராவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் பாரு. கம்முதான் இவரை காதல் வலையில் விழ வைத்து விட்டாராம். அம்மா வருவதால் இப்படி சேஃப் கேம் ஆடத் துவங்கியிருக்கிறாரோ?
“அமித் வந்து சொன்னவுடன் கம்மு பிளேட்டை அப்படியே திருப்பிட்டான். நான் வெளில சொல்றதெல்லாம் எனக்கே ரிவிட் ஆகுது” என்று பாரு புலம்ப “ஆமாம்.. அவன் கிட்ட ஒண்ணு சொல்லிட்டு திவாகர் கிட்ட இன்னொன்னு சொன்னது டபுள் கேம் மாதிரி தெரியுது” என்று பாருவிற்கு ஊமைக் குத்து குத்தினார் சான்ட்ரா.
“கம்முதான் என் கிட்ட ஒரு மாதிரி பேச வந்தான். அதெல்லாம் முடியாதுன்னு துரத்தி விட்டுட்டேன்” என்று திவாகர் இருக்கும் போது பேசியவரும் இதே பாருதான். இப்போது கம்மு இல்லாமல் வாழ்க்கை இல்லை என்கிற ரேஞ்சிற்கு மாறி விட்டிருக்கிறார். எது உண்மை?!

தங்கள் உறவுகளுடன் 24 மணி நேரம் தங்கப் போகும் சலுகைக்காக, கம்ருதீனை காலையிலேயே பிரெயின் வாஷ் செய்யத் துவங்கி வி்ட்டார் பாரு. “லட்டு மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. நான் இதை ஷோவா மட்டும் பார்க்கலை. நம்ம மேட்டரை அம்மாவிற்கு புரிய வெச்சிடுவேன். எனக்கு சப்போர்ட் பண்ணுவியா?” என்கிற வேண்டுகோளை உத்தரவு மாதிரியே கேட்டார் பாரு. கம்முவோ பலவீனமாக வாதாடி விட்டு ஒப்புக் கொண்டார். வேறு வழி?!
‘யம்மாடி ஆத்தாடி அணியில் இருந்து யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்.. உங்கள் உறவுடன் 24 மணி நேரம் இருப்பதற்கான வாய்ப்பு. கூடிப் பேசி விட்டுச் சொல்லுங்கள்” என்று பிக் பாஸ் அறிவித்தார். ‘யாருக்கு லாட்டரி அடிக்கப் போகுதோ?” என்கிற பதைபதைப்புடன் இருந்த நால்வரும் பேச அமர்ந்தார்கள்.
எல்லோருமே அம்மா சென்டிமென்ட்டை முன்வைத்தார்கள். “என் குழந்தைகளோட இந்த வீட்டில் ஒரு நாள் இருப்பதை வரமா நெனக்கிறேன்” என்று சொல்லிப் பார்த்தார் கனி. “என் அம்மாவிற்கு வயது 72.
நான்தான் அவங்களுக்கு எல்லாம். இந்த வாய்ப்பை அவங்களுக்கு தர நினைக்கிறேன். அப்படியே இந்த மேட்டரையும் பேசி முடிச்சிடுவேன்” என்று சென்டியை தூக்கலாகப் போட்டார் பாரு.
“நான் வெளியே போனப்போ அம்மா வருத்தத்தை காட்டிக்கலை. ஆனா அவங்களை பிக் பாஸ் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பெருமைப்படுத்த விரும்பறேன். இது லைஃப்ல ஒரு அனுபவமா இருக்கும்” என்றார் ஆதிரை.
பாரு ஏற்கெனவே உத்தரவு போட்டு விட்டதால், பலவீனமாக தன் தரப்பைச் சொன்னார் கம்மு. “எங்க அம்மா சமீபத்தில் இறந்துட்டாங்க. அக்காதான் இப்போ என் அம்மா. அவங்க என் கூட இருக்கணும்ன்னு நெனக்கறேன்” என்று சொல்லி விட்டு “நீங்க பேசுங்க.. நான் சாப்பிட்டுட்டு வரேன்” என்று கிளம்பி விட்டார் கம்மு.

‘இவிய்ங்க தப்பு பண்ணுவாங்களாம். அதுக்கு நாங்கதான் போதையா?” - கனியின் நியாயமான புலம்பல்
இத்தனை முக்கியமான விவாதத்தில் இருந்து ஒருவர் விலகுகிறார் என்றால் என்ன அர்த்தம்? இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க முடிவு செய்து விட்டார் என்றுதான் அர்த்தம். பாருவிற்கு செய்யும் சப்போர்ட்டை சாமர்த்தியமாக செய்து முடித்து விட்டார் கம்மு. ‘யார் பெற்ற மகனோ..’ என்று மற்றவர்கள் கம்முவை கிண்டலடித்து பாடினார்கள்.
“இன்னும் எவ்வளவு நேரம் பேசுவீங்க.. அதான் எல்லாம் குடும்பத்துல இருந்து வரப் போறாங்கள்ல?” என்று நெருக்கடி தந்தார் பிக் பாஸ். “நீயாவது வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட பேசிட்டுதான் வந்திருப்பே. நான் இனிமேதான் பேசணும்” என்று ஆதிரையிடம் லாஜிக் பேசிப் பார்த்தார் பாரு. “அந்தக் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்” என்று கேட்டை சாத்தினார் ஆதிரை.
குருவி ஜோசியம் மாதிரி பழங்காலத்து குலுக்கல் முறையைப் பரிந்துரைத்தார் அமித். நான்கு குச்சிகளில் சின்ன குச்சியை எடுப்பவருக்கு அதிர்ஷ்டமாம். வேறு வழியின்றி இதைப் பரிசோதித்துப் பார்த்ததில் ஆதிரைக்கு அதிர்ஷ்டம் அடித்தது. மற்றவர்கள் பெருமூச்சுடன் இதை அரைமனதாக ஒப்புக் கொண்டார்கள். “எனக்கு எப்பவுமே லக் அடிச்சதில்லை” என்று கண்கலங்கினார் ஆதிரை.
இந்த குலுக்கல் முறைக்கு பிக் பாஸ் ஒப்புக் கொண்டிருக்காமல், விவாதம் மூலமே தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தால் கூடுதல் கன்டென்ட் கிடைத்திருக்கும்.

பிறகு கனி புலம்பியதில் ஒரு நியாயம் இருந்தது. “இவங்கள்லாம் தப்பு செய்வாங்களாம். அப்புறம் அதைப் பத்தி பேசறதுக்கு வாய்ப்பு கேப்பாங்களாம். அப்படின்னா.. சரியா விளையாடற நாங்க முட்டாள்களா.. இவங்க திருந்துவதற்கு நாங்க போதையா..” என்று பரிதாபமாக புலம்பிக் கொண்டிருந்தார் கனி.
“பாரு.. அம்மாவை நான் பார்க்கணும்.. நல்ல வளர்ப்பு” என்று ஆரம்பித்து சட்டென்று வாயை மூடிக் கொண்டார் விக்ரம். இந்த ‘வளர்ப்பு’ என்கிற விஷயத்தை கம்ருதீன் பேசிய போது எதிர்த்தவர் இதே விக்ரம்தான்.
அடுத்து ஆரம்பித்தது, best performer தேர்வு. இதில் சில ஆச்சரியங்கள் இருந்தன. கனியை சிறந்த பங்கேற்பாளராக தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தினார் பாரு. போலவே திவ்யாவை தேர்ந்தெடுத்து இன்ப அதிர்ச்சி தந்தார் சான்ட்ரா. ‘இதுவரைக்கும் யாருமே என்னை சொன்னதில்லை. முதன்முறையா சொன்னீங்க.. தெய்வமே” என்று திவ்யாவை கும்பிட்டார் ஆதிரை.
இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் கம்முவிற்கு நிறைய வாக்குகள் வந்தன. இந்த வாரம் ஒழுங்காக இருந்தாராம். வீட்டு வேலையெல்லாம் செய்தாராம். டாஸ்க்குகளிலும் சிறப்பாக செயல்பட்டாராம். (பார்றா!)
இறுதியில் கம்முவும் கனியும் best performerகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அடுத்தது Worst performer தேர்வு. சான்ட்ராவே எதிர்பார்த்திருந்தபடி அவருக்கு நிறைய வாக்குகள் வந்ததில் ஆச்சரியமில்லை. கப்பல் மூழ்கின மாதிரி மூலையில் அமர்ந்து அவர் செய்த அழிச்சாட்டியங்கள் அப்படி.

“என்னை செலக்ட் பண்ணுவாங்க பாருங்க” என்று இது பற்றி அமித்திடம் ஏற்கெனவே புலம்பினார் சான்ட்ரா. ஆனால் அமித்தே சான்ட்ராவைத்தான் குத்தினார்.
‘பாப்பா பாட்டு’ விஷயத்தை வைத்து கனியும் சுபிக்ஷாவும் சான்ட்ராவை குத்தினார்கள். சான்ட்ராவிற்கு அடுத்தபடியாக வாக்குகள் வாங்கியது வினோத். டாஸ்க்கின் போது ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு போய் விட்டாராம். இந்த அற்ப காரணத்தை ஊதி ஊதி சொன்னார்கள். எஃப்ஜேவின் முன்கோபமும் அவருக்கு வாக்குகளை வாங்கித் தந்தது.
இறுதியில் சான்ட்ராவும் வினோத்தும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலைமை. இதில் சான்ட்ரா ஓகே. ஆனால் வினோத்தை விடவும் மோசமாக ஆடியவர்கள் எஸ்கேப் ஆனார்கள்.
வாய்ச் சண்டையில் பாருவை ஜெயித்த திவ்யா - வாடா.. வாடா.. எங்க ஏரியாக்கு வாடா
எஃப்ஜேவை தேர்ந்தெடுத்த அரோ, அவருடைய முன்கோபத்தை குறிப்பிட்டு “இவரெல்லாம் தலயானா என்ன நடக்குமோ?” என்று குறிப்பிட்டிருந்தார். எனவே டாஸ்க் முடிந்தவுடன் “நீ மட்டும் ஒழுங்கா. கடிகார டாஸ்க்ல என்ன பண்ணே?” என்று சண்டைக்குப் போனார் எஃப்ஜே. “நீயும்தான் டாஸ்க்ல இருந்து பாதில போனே? உன்னால விமர்சனத்தை ஏத்துக்கவே முடியலை” என்று மல்லுக்கட்டினார் அரோ.
மற்ற நேரங்களில் கட்டியணைத்துக் கொள்கிற அரோவும் எஃப்ஜேவும் சண்டை என்று வரும் போது இத்தனை உக்கிரமாக ஆவது நிஜமா அல்லது டிராமாவா?
வொர்ஸ்ட் பெர்ஃபார்மராக திவ்யாவை தேர்ந்தெடுத்த பாரு “அவங்க டோன் ரொம்ப ஹார்ஷா இருக்கு” என்பதை ‘அதிகாரபூர்வமா இருக்கு’ என்று தவறாக குறிப்பிட்டார். ‘அதிகாரபூர்வ’ என்றால் official என்று அர்த்தம். ‘அதிகாரமா பேசறார்’ என்பதைத்தான் பாரு அப்படி சொல்லியிருக்கிறார் போல.

இது விஷயமாக பாருவிற்கும் திவ்யாவிற்கும் மோதல் ஏற்பட்டது. ‘உக்காந்து பேசுங்க’ என்று திவ்யா சொல்ல, தான் சொல்ல வந்ததை சொல்லி விட்டுச் செல்லும் அவசரத்துடன் பேசினார் பாரு. “உங்க கிட்ட ஒரு வாக்கியத்தைக் கூட முழுசா பேச முடியலை. உடனே மேலே பாய்ஞ்சிடறீங்க” என்று பாரு சொல்ல, “அதை நீங்க சொல்றீங்களா?” என்று திவ்யா மல்லுக்கட்டி மூச்சு விடாமல் பேசியதில் பாரு பின்வாங்கினார். பாருவிற்கு டஃப் ஃபைட் தரும் விதத்தில் திவ்யா ஜெயித்து விட்டார்.
சிறைக்குச் சென்ற சான்ட்ரா “இங்க தூங்கக்கூடாதா?” என்று கொட்டாவியை மென்றபடி கேட்டார். (‘எவ்ளோ அப்பாவியா வளர்த்திருக்காங்க?)
தல டாஸ்க். ‘இன்னொருத்தனை மிதிச்சாதான் தலயாக முடியும்’ என்பதை உணர்த்தும் விளையாட்டு. காலில் கட்டியிருக்கும் பலூனை மிதித்து உடைக்க முடியும். பலூனோடு மிஞ்சியவர் தலைவர். (இதெல்லாம் என்ன போட்டியோ? டான்ஸ் டாஸ்க்கில் வென்றவர்கள் இதற்கு தகுதி.
ஒவ்வொருவரும் உதவியாளரை கொண்டு செல்லலாம். அமித்தை உதவியாக கொண்டு சென்றார் பாரு. பஸ்ஸர் அடித்தவுடன் பாருவை தோளில் தூக்க முயன்ற அமித், ஸ்லிப் ஆகி கீழே விழ, பாருவின் பலூன் மீது மற்ற அணியினர் ஆவேசமாக பாய்ந்தார்கள்.
உதவியாளர் பலூனை உடைக்கக்கூடாது என்பது விதியாக இருந்தாலும் ஆட்ட மும்முரத்தில் இதைச் செய்தார்கள்.

பாருவின் பலூனில் காற்று போய் விட்டதால் அவுட் என்பது அறிவிக்கப்பட “முடியாது.. முடியாது’ என்று அடம்பிடித்தார் பாரு. பிறகு பிக் பாஸ் அறிவித்தபிறகு சிணுங்கியபடி வெளியே வந்தார்.
தனது ‘காதல் எதிரி’யான எஃப்ஜேவை உதவியாளராக தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தினார் ஆதிரை. எஃப்ஜேவின் தோளில் மீது அமர்ந்திருந்த ஆதிரையின் கால்களைப் பிடித்து விக்ரம் இழுக்க பொதேல் என்று விழுந்தார்.
இது பிறகு பெரிய சர்ச்சையாயிற்று. ஆதிரை அடக்கி வாசித்தாலும் எஃப்ஜே பயங்கர கோபத்துடன் சண்டை போட்டார். “நல்லவன் மாதிரி நடிச்சு ஏமாத்தறான். எல்லாத்திலயும் ஒழுங்கு பேசற இவனுக்கு தெரியாதா?” என்றெல்லாம் எஃப்ஜே கோபத்தில் கத்த “வார்த்தைகளை விட்றாத” என்று எச்சரித்தார் ஆதிரை.
விக்ரமிற்கு தன் தவறு புரிந்தது. “நான் பண்ணது தப்புதான். மன்னிச்சிடுங்க” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். தன் தவறை துளியும் நியாயப்படுத்தவில்லை. அவர் மனமார மன்னிப்பு கேட்டாரா அல்லது வீக்கெண்ட் பயத்தினால் (சபரி - பாரு சம்பவம் உதாரணம்) முன்பே மன்னிப்பு கேட்டு பிரச்சினையை ஆற வைத்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
டாஸ்க் மும்முரத்தில் இப்படி நேர்வது சகஜம்தான் என்றாலும் மூர்க்கமான அணுகுமுறை தவிர்க்கப்பட வேண்டியது. அப்படி கத்திய எஃப்ஜே, பிறகு விக்ரமை அணைத்து சமாதானம் செய்தார். “எஃப்ஜே ஒண்ணும் உனக்காக கத்தலை” என்று ஆதிரையிடம் சரியாக டீகோட் செய்தார் அரோ. ஆதிரையின் பகையுணர்ச்சியை தணிப்பதற்காக எஃப்ஜே செய்த ஓவர் டிராமாவாக இருக்கலாம்.

“எல்லாத்தையும் மன்னிப்பு கேட்டு சமாளிச்சிடுவான்” என்று விக்ரம் பற்றி புறணி பேசியவர்கள் எல்லாம், விக்ரம் வந்து கைகூப்பி மன்னிப்பு கேட்டவுடன் ‘சரி விடுங்க.. பிரதர்’ என்று நெகிழ்ந்து போனார்கள். சான்ட்ரா மட்டும் போர்த்தி படுத்துக் கொண்டார்.
விக்ரமை திட்டும் சாக்கில் “சுபிக்ஷாவிற்குத்தான் விக்ரம் எப்பவும் சப்போர்ட் பண்றான்.. ஆதிரை செட்டில் ஆயிட்டாளாாம்.. சுபிக்ஷா இன்னமும் மேலே போணுமாம்.. என்ன கேம் இது?” என்று எஃப்ஜே சொன்னதை கனி கண்டித்தார்.
சண்டை ஆறிய பிறகு “தெம்பாக இன்னொரு சண்டை போடுங்க. சரியா?” என்கிற மாதிரி 75-வது நாள் கேக்கை பெருமிதத்துடன் வழங்கி மகிழ்ந்தார் பிக் பாஸ்.
இந்த வாரத்திலும் கேட்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. விஜய் சேதுபதி என்ன செய்ய காத்திருக்கிறாரோ?!
















