CJP: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி; அமைதியாக நடந்து முடிந்த போராட்டம்; 6 பேர் கைது!
CJP: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி; அமைதியாக நடந்து முடிந்த போராட்டம்; 6 பேர் கைது!
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் சார்பில் இன்று (ஜூன் 6, 2026) பிரம்மாண்ட கண்டனப் போராட்டம் நடைபெற்றது. நாட்டின் கல்வி முறையில் நிலவி வரும் குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வு முறைகேடு புகார்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
காலை முதலே ஜந்தர் மந்தர் பகுதியில் குவியத் தொடங்கிய போராட்டக்காரர்களின் எண்ணிக்கை, நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் செய்தியாளர்களிடம், ``தொடர்ந்து அரங்கேறி வரும் தேர்வு முறைகேடுகள், தேர்வு முடிவுகளில் நீடிக்கும் குளறுபடிகள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற போக்கு ஆகியவை தற்போதைய கல்வி முறையின் மீதான தங்களின் நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்துவிட்டது.
மேலும், ஆளுங்கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் என இருதரப்புமே இளைஞர்களின் எதிர்காலம் சார்ந்த வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குப் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை" எனக் குற்றம் சாட்டினர்.
இந்த CJP-யின் நிறுவனரான அபிஜீத் திப்கே போராட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், ''எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், எங்களது சமூக ஊடகப் பக்கங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலேயே மத்திய அரசு முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது. தேர்வு முறைகேடுகள் மற்றும் அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் தொடரும்" என எச்சரித்தார்.
டெல்லியில் போராட்டம் நடத்திய CJP அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்க வந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தேசிய செயலாளர் ஆனி ராஜா மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் (NFIW) பொதுச்செயலாளர் நிஷா சித்து உள்ளிட்ட தலைவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்வு ஊழல் புகார்களுக்கு உள்ளாகியுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அமைதியான முறையில் போராடுபவர்களின் குரலை ஒடுக்கவே மத்திய அரசு முயல்கிறது என்று அவர் சாடினார். இத்தகைய மக்கள் விரோதச் செயல்களைப் பொதுமக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறிய அவர், இத்தாக்குதலைக் கண்டித்து கேரள மாநிலம் முழுவதும் கிளை வாரியாகப் போராட்டங்களை நடத்துமாறு அக்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த கண்டனப் போராட்டம் இறுதியில் அமைதியான முறையில் நிறைவடைந்தது. எனினும், போராட்டத்தின் போது இருவேறு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கல்வித் துறையின் சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர் சமூகமும் திரண்ட இந்த போராட்டம், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








