SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' -...
Gangai Amaran: "வெங்கட் பிரபுவை பிசினஸ் மேன் ஆக்கணும்னு நெனைச்சேன்!" - கங்கை அமரன் பேட்டி
பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என பல்வேறு அவதாரங்களில் வெற்றிகளைக் குவித்தவர் கங்கை அமரன்.
இப்போது, டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் 'லெனின் பாண்டியன்' படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவர் அறிமுகமாகிறார்.
இந்தப் படத்திற்காக அவரைப் பேட்டிக் கண்டோம். தனது நடிப்பு அனுபவம், சினிமா பயணம், AI பற்றிய கருத்துகள் என பல்வேறு விஷயங்களை இந்தப் பேட்டியில் அவர் பகிர்ந்துகொண்டார்.

நம்மிடையே பேசியவர், "பாலச்சந்திரன் கதை சொல்லும்போதுகூட, நான் அந்தப் படத்தில் நடிக்கப் போவதாக உணரவில்லை. கதையின் நுணுக்கங்களை சரிபார்க்கத்தான் இருப்பேன் என்று நினைத்தேன்.
கதை முடிந்ததும், அது எனக்கு மிகவும் பிடித்துப் போனது. குடும்பம் சார்ந்த மிகவும் இறுக்கமான கதையாக இருந்தது.
பின்னர், தயாரிப்பாளர் தியாகராஜன் என்னிடம் இதில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டார்.
நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன். முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் மியூசிக் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 168 படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.
பின்னர் இயக்குநராக 18 படங்கள் செய்தேன். இப்போது நடிப்பு வாய்ப்பு கிடைத்தது, அதையும் தவிர்க்காமல் ஏற்றுக்கொண்டேன். எடிட்டிங் பணிகள் முடிந்து படத்தைப் பார்க்கும்போது, எனக்கும் தியாகராஜனுக்கும் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது.
அவ்வளவு அருமையாக இருந்தது. படத்தில் என்னைப் பார்க்கும்போது, விவசாய நிலத்தில் நிற்கும் என் பெரியப்பா, தாத்தா ஞாபகம் வந்தது. அனைவரின் குடும்பத்துடன் மிகவும் கனெக்ட் ஆகும் வகையில் இருக்கும்." என்று பெருமையுடன் சொன்னார்.

12 வருட இடைவெளிக்குப் பிறகு நடிப்பின் பக்கம் வந்திருக்கும் ரோஜாவைப் பாராட்டிய அவர், "ரோஜா மிகவும் சிறப்பாகவும், சின்சியராகவும் நடித்துள்ளார். தாய்மொழி வேறாக இருந்தாலும், தமிழில் டயலாக்குகளை கலக்கியுள்ளார்.
பெரிய டயலாக் ஆக இருந்தாலும், அதை எளிதாகப் பேசிவியிருக்கிறார். ஷூட்டிங் இடைவெளியில் நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம். நான் பாட்டு பாடுவேன், அவர் தனது அரசியல் பயணத்தைப் பகிர்வார்.
தற்போதைய அரசியல் பற்றியும் விவாதிப்போம்." என்றவர், "என் பன்னிரண்டாவது வயதிலேயே பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டேன்.
வைகைக்கரையில் பாட்டு எழுதியபோது என் வயது 18. அண்ணன் இளையராஜா டியூன் செய்வதற்காக நான் நிறைய பாடல்கள் எழுதிக் கொடுப்பதுண்டு.
அதைப் பிற்காலத்தில் சினிமாவிலும் பயன்படுத்தினோம். அவருக்கு புதிய டியூன் வரவைப்பதற்கு என் பாடல் வரிகள் மிகவும் உதவியுள்ளன.
இப்போது ஒரு இரண்டு படங்கள் இயக்கக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். என் மகன் வெங்கட்பிரபு கூட, 'உங்களுக்கு கேரவனில் டிவி வைத்துத் தருகிறோம், நீங்கள் அங்கிருந்து டைரக்ட் செய்யுங்கள்' என்கிறான்." என்று சிரித்தார்.
"மிகப்பெரிய வெற்றிப்படமான 'கரகாட்டக்காரன்' டிஜிட்டல் செய்யும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அது விரைவில் ரீ ரிலீஸ் ஆகும். என் இரு மகன்களின் வெற்றியும் எனக்கு மிக மகிழ்ச்சியைத் தருகிறது.
என் மகன் வெங்கட் பிரபுவை பிசினஸ் மேனாக ஆக்க வேண்டும் என்பதே என் கனவு. ஆனால் அவனுக்கு படம் இயக்குவதில்தான் ஆர்வம்." என்றார்.

ஏ.ஐ பற்றி அவரிடம் கேட்டதற்கு, "AI பயன்படுத்துவதால் கிரியேட்டிவிட்டி குறைந்துவிடுகிறது. மூளை பெருசாக யோசிப்பதில்லை. கிரியேட்டிவிட்டி இல்லை என்றால், அதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது?
நான் பாட்டு எழுத அதிகபட்சம் கால் மணி நேரமே எடுத்துக்கொள்வேன். நான் எழுத அதிக நேரம் எடுத்துக்கொண்ட பாடல் 'அந்தி வரும் நேரம்'. இப்பாடல் எழுதி முடிக்க எனக்கு அரை நாள் தேவைப்பட்டது," எனக் கூறி முடித்துக்கொண்டார்.




















