அதிமுக: "இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன்" - செல்லூர் ராஜு சாடல...
Indigo: திணறும் இண்டிகோ; விண்ணைத் தொட்ட விமான டிக்கெட் விலை - மத்திய அரசு நடவடிக்கை!
இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நேற்றையதினம் ஆயிரத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் விமான ரத்துகள் தொடர்கிறது. நிலைமை இயல்புநிலைக்குத் திரும்ப டிசம்பர் 10-15 வரை ஆகலாம் என அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்திருந்தார். இதனால் நாட்டில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திர அரசு நடவடிக்கை

இந்த நேரத்தில் மற்ற விமான சேவை நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் விலையைப் பல மடங்கு உயர்த்தின. இந்த "சந்தர்ப்பவாத விலை நிர்ணயத்திலிருந்து" மக்களைக் காப்பதற்காக புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண உச்சவரம்புகளை (Fare Caps) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
"தற்போது நிலவும் நெருக்கடியின்போது, சில விமான நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிப்பதை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மிகவும் தீவிரமாகக் கவனித்துள்ளது... புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண உச்சவரம்புகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமை முழுமையாகச் சீரடையும் வரை இந்தக் கட்டண உச்சவரம்புகள் அமலில் இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திணறிய Indigo - விமான கட்டணம் அதிகரிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, புதிய விமானப் பணி நேர வரம்பு (Flight Duty Time Limitation - FDTL) விதிமுறைகள் காரணமாகப் பணி அட்டவணையைச் சீரமைக்க முடியாமல் திணறியதால், கடந்த சில நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பயணிகளின் துயரத்தை மேலும் அதிகரிப்பது போல, விமான டிக்கெட்டுகளின் விலை அசுர வேகத்தில் உயர்ந்தது. இந்தக் குழப்பமான சூழ்நிலையால், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கான உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்தன. எடுத்துக்காட்டாக, டெல்லி-மும்பை நேரடி விமான டிக்கெட்டுகளின் விலை ₹65,460 வரை உயர்ந்தது. ஒற்றை நிறுத்தம் கொண்ட விமானங்களின் விலை ₹38,376 முதல் ₹48,972 வரை விற்கப்பட்டது.















