தீர்ந்தது குழப்பம்; இனி கால்பந்து திருவிழா! FIFA உலகக்கோப்பை போட்டிகளை எங்கு, எப...
Rajesh Exports விவகாரம்: LIC-ல் செய்த முதலீடு, காப்பீட்டிற்கு பிரச்னையா?
கடந்த இரண்டு வாரங்களாகவே, பங்குச்சந்தை உலகின் பரபரப்பு டாபிக், 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்'.
கடந்த 3-ம் தேதி, செபி இந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தது. அதாவது, செபி இந்த நிறுவனத்தின் 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரையிலான வருமானக் கணக்கைப் பார்த்துள்ளது.
அந்த வருமானத்தில் கிட்டத்தட்ட 97-99 சதவிகிதம் போலியானதாகவும், மிகைப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. மேலும், இந்த விசாரணையில் இந்த நிறுவனம் செபி உடன் சரியாக ஒத்துழைக்கவும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தற்போதைக்கு பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது செபி.
இதில் எல்.ஐ.சி பிரச்னை எங்கு வருகிறது என்றால், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் எல்.ஐ.சி சுமார் 10 சதவிகித பங்குகளை வைத்துள்ளது.
ஒரு அரசுத் துறை நிறுவனம் முதலீடு செய்யும் போது, முதலீடு செய்யும் நிறுவனம் குறித்து விசாரிக்காதா... தெரிந்துகொள்ளாதா என்பது தான் எல்.ஐ.சியைத் தற்போது சுழற்றியடிக்கும் கேள்வி.
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பிரச்னை தங்களைப் பாதிக்குமோ என்று எல்.ஐ.சி பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்களும், காப்பீடு செய்திருப்பவர்களும் மிகவும் பயப்படுகிறார்கள்.
இதற்கு பொருளாதார நிபுணர்கள் சொல்லும் பதில்...
"2026-ம் ஆண்டு மார்ச் மாதத் தரவுகளின் படி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸின் மிகப்பெரிய பங்குத்தாரர் எல்.ஐ.சி நிறுவனம். ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸின் 10.8 சதவிகித பங்குகள் எல்.ஐ.சியிடம் தான் இருக்கிறது.
எல்.ஐ.சி நிறுவனம் பல லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. அப்படி பார்த்தால், எல்.ஐ.சி நிறுவனம் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸில் முதலீடு செய்திருப்பது சிறு தொகையே.

ஒட்டுமொத்த எல்.ஐ.சி முதலீடுகள், வருமானம், வளர்ச்சிகள் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸைச் சார்ந்திருக்கவில்லை.
அதனால், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பிரச்னை சில நாள்களுக்குத் தான் எல்.ஐ.சியைப் பாதிக்கும். அதன் பின், குறிப்பிட்ட இந்தப் பிரச்னையில் இருந்து எல்.ஐ.சி மீண்டுவிடும்.
ஆக, எல்.ஐ.சி பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்களும், எல்.ஐ.சியில் காப்பீடு செய்திருப்பவர்களும் பயப்படத் தேவையில்லை".




















